நீங்கள் குறுகிப்போவதில்லை(You shall not be few).

அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும், அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்,     அவர்கள் குறுகிப்போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன்,     அவர்கள் சிறுமைப்படுவதில்லை. (எரேமியா 30:19).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/jwDdf3YfejM

கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் குறுகிப் போவதில்லை,     நீங்கள் பெருகுவீர்கள். கர்த்தர் ஆதிப் பெற்றோரை ஆசீர்வதிக்கும்  போது நீங்கள் பலுகிப் பெருகி,     பூமியை நிரப்புங்கள் என்று சொல்லி ஆசீர்வதித்தார். விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் ஒருவனாய் இருக்கையில் அவனை அழைத்து ஆசீர்வதித்துப் பெருகப்பண்ணினார். ஆதி அப்போஸ்தல சபையின் நாட்களில் சபைகள் வளர்ந்து பெருகிற்று என்றும்,     வேதவசனம் வளர்ந்து  பெருகிற்று என்றும்,      சீஷர்களின்  தொகை  பெருகிற்று என்றும் வேதம் கூறுகிறது.  எரேமியா 30 முதல் 33 அதிகாரங்கள்,      பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கரங்களில் எருசலேம் முழுவதுமாக  கடைசியாய் விழுவதற்கு முன்பு எழுதப்பட்டவை. அந்நாட்கள் யாக்கோபின் இக்கட்டு காலமாய் காணப்பட்டது (எரே. 30:7),     உபத்திரவங்களின் நாட்களாய் காணப்பட்டது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்நாட்கள் கூட சபைகளின் இக்கட்டு காலம்,     கர்த்தருடைய பிள்ளைகளின் உபத்திரவக் காலமாய் காணப்படுகிறது. பல சபைகள்  கொளுத்தப்படுகிறது,      அனேகர் தங்களுடைய ஜீவனைக்  கோதுமை மணிகளாய் விதைக்கிறார்கள். யுத்தங்களும்,     பஞ்சங்களும்,     வேலையிழப்புகளும் எங்கும் காணப்படுகிறது. விசுவாசிகளுக்குள் சோர்வுகள் காணப்படுகிறது,     பதற்களைப் போன்ற ஊழியர்களும்,     விசுவாசிகளும் எங்கும் செழித்து வளருகிறதைப் பார்க்கமுடிகிறது. யாக்கோபு சிறுத்துப் போவானே என்று ஆமோஸ் தீர்க்கதரிசி அங்கலாய்த்தது போல,     உண்மையுள்ள கர்த்தருடைய ஊழியர்கள் அங்கலாய்க்கிற காலமாய் இந்நாட்கள் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய வார்த்தை எரேமியா தீர்க்கதரிசிக்கு வெளிப்பட்டு,      நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி,     அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்,     எருசலேம் நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு,     அரமனை முன்போல நிலைப்படும் என்றும் அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்,     அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன்,     அவர்கள் குறுகிப்போவதில்லை, அவர்களை மகிமைப்படுத்துவேன்,     அவர்கள் சிறுமைப்படுவதில்லை,     அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள் அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்,     அவர்களை ஒடுக்கின  யாவரையும் தண்டிப்பேன் என்ற நல்வார்த்தை வெளிப்பட்டது. கர்த்தருடைய வார்த்தையின்படியே எழுபது  வருஷங்களுக்குப்  பின்பு யூதர்களுடைய பாபிலோனியச்  சிறையிருப்பு முடிந்து கர்த்தர் அவர்களை மீட்டும் எடுத்துக் கட்டினார். கர்த்தருடைய பிள்ளைகளே,     கர்த்தர் உங்களையும் மகிமைப் படுத்துவார்,     நீங்கள் குறுகிப் போவதில்லை. ஒருவேளை எப்பக்கமும் நெருக்கப்படுவதைப்  போலச் சபைகளின் சூழ்நிலைகள் காணப்படலாம்,     ஆளுகிறவர்கள் கூட கர்த்தருடைய ஜனங்களை  அற்பமாய் கருதலாம். ஆமான் கூட  மொர்தேகாயை  அற்பமானவனாய் பார்த்தான். சன்பல்லாத் கூட அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைக் கேட்டபோது,     அவன் கோபித்து,     எரிச்சலடைந்து,     அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன,     அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ,     பலியிடுவார்களோ,     சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ,     என்று தன் சகோதரருக்கும்  சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான் என்று வேதம் கூறுகிறது. எல்லாரும் உங்களை அற்பமாய்,     கனவீனமாய் கருதினால் கூட,     கர்த்தர் சொல்லுகிறார்,     நீங்கள் குறுகிப் போவதில்லை,     நீங்கள் வெட்கப்படுவதில்லை  என்று. நீங்கள் எனக்கு முன்பாக ஸ்திரப்பட்டு பெருவீர்கள் என்று கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார். உங்களை ஒடுக்கினவர்கள் மத்தியில் கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணுவார். இருநூறு சபைகள் கொளுத்தப்பட்டால் இரண்டாயிரம் புதிய சபைகள் எழும்பும்படிக் கர்த்தர் செய்வார். ஒரு கர்த்தருடைய பிள்ளை கோதுமை மணியாய் தன் ஜீவனைக்  கொடுத்தால்,     அதற்குப் பதிலாய் ஜாதிகளும் ஜனங்களும் இயேசுவை அறிந்து  கொள்ளும் படிக்கு அவர்களுடைய மனக்கண்களைக் கர்த்தர் திறப்பார். ஆகையால் உற்சாகத்தோடு  கர்த்தரைச்  சேவியுங்கள். அவர் உங்களையும் உங்கள் சந்ததிகளையும்  வர்த்திக்கப் பண்ணிப் பெருகப்பண்ணுவது உறுதி.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar