நீதி 3 :25,26 சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/FefZz3WD3VA
நம்முடைய தேசங்களில் போஸ்டர் கலாச்சாரம் காணப்படுகிறது. அரசியல்வாதிகள், தலைவர்கள் முதல் சாதாரண பாமர மக்களும் தங்கள் பெயருக்கு முன்பாக அடைமொழியை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். பெரிய பெரிய மாநாடுகள் துவங்கி திருமண விழா, வீட்டு புதுமனை விழா என்ற எல்லா விழாக்களிலும் பெரிய விளம்பர பலகைகளை நிறுவி அதில் தங்கள் பெயருக்கு முன்பாக அடைமொழியை வைத்துக்கொள்ளுவார்கள். அதில் ஒன்று சிலர் தங்களை அஞ்சா நெஞ்சன் என்று சொல்லி அழைத்துக்கொள்ளுவார்கள். வெறும் விளம்பர பலகைகளில் தான் தாங்கள் அஞ்சா நெஞ்சன். வீட்டில் காவல்துறை வருமான வரி சோதனை நடத்தினால் தான் அவர்கள் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களா, இல்லை பயப்படும் சுபாவம் உள்ளவர்களா என்பது தெரிய வரும். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் எந்தவித சூழ்நிலைகளிலும் எதற்கும் பயப்படாமல் அஞ்சாமல் இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சில வேளைகளில் சடுதியான திகில் வருகிறது. நன்றாக வேலை போய்க்கொண்டிருக்கும், சடுதியாக வேலை பறிபோகும் சூழ்நிலை, திடீரென்று ஒரு நாட்டிற்கு விரோதமாக பல்வேறு நாடுகள் பொருளாதார கட்டுபாட்டுகளை விதிக்கும்போது வருகிற நெருக்கடிகள், சடுதியாக ஆங்காங்கே பல்வேறு வியாதிகள் பரவும் சூழ்நிலை, திடீரென்று சடுதியில் நம்முடைய தேசங்களில் விலைவாசிகள் உயரும் சூழ்நிலை, சடுதியில் தேசத்தில் பஞ்சம், இப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் அவ்வப்போது சந்திக்கும்போது நமக்குள்ளாக திகில் வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தருடைய பிள்ளைகளின் இருதயம் அஞ்சாமல் இருக்கவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சிலவேளைகளில் துஷ்டர்களின் பாழ்கடிப்பும் கடந்துவருகிறது. சத்துரு நமக்கு விரோதமாக கொத்தளங்களை போடுகிறவனாக காணப்படுகிறார். வேலை ஸ்தலங்களில் உங்கள் ஒருவருக்கு விரோதமாக அநேகர் எழும்பலாம், உறவினர்கள் அநேகர் இணைந்து துஷ்டர்களாக மாறி உங்கள் சொத்துக்களை அபகரிக்க எத்தனிக்கலாம், பல நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிற சபைக்கு விரோதமாக துஷ்ட மனிதர்கள் செயல்படலாம். இருந்தாலும், கர்த்தருடைய பிள்ளைகள் அஞ்சா நெஞ்சம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும். காரணம் எந்த ஒரு சூழ்நிலையிலும் கர்த்தர் உங்களோடு இருக்கிறார். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது (ஏசா 43:2) என்று வசனம் சொல்லுகிறது. என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார் (சங் 18:18) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். இந்த வசனத்தின்படி உங்களுக்கு விரோதமாக ஆபத்துநாளில் துஷ்டர்கள் வரும்போது கர்த்தரே உங்களுக்கு ஆதரவாய் இருப்பார்.
மாத்திரமல்ல, கர்த்தர் உங்கள் நம்பிக்கையாயிருந்து, உங்கள் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். சத்துரு விரிக்கும் மறைவான கன்னிக்கு நீங்கள் தப்புவிக்கப்படுவீர்கள். கடலுக்குள்ளாக இருக்கும் கடற்பாசி மேற்புறத்திலிருந்து பார்க்கமுடியாது. அதுபோல, சத்துரு நமக்கு விரோதமாக தடைகளை, கன்னிகளை வைப்பது நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கும்; ஆனால் கர்த்தர் அவைகளெல்லாவற்றையும் பார்த்து உங்கள் கால்கள் சிக்கிக்கொள்ளாதபடி காத்துக்கொள்ளுவார். Chess (சதுரங்கம்) விளையாட்டில் ராணி, சிப்பாயி, குதிரை, யானை போன்ற எல்லாரும் இராஜாவை சிக்க வைக்க (Trap) முயற்சிப்பார்கள். அதுபோல சத்துரு அநேக நபர்களை தூண்டிவிட்டு உங்களை சிக்க வைக்க பொய் குற்றசாட்டுகளை சாட்ட எத்தனிப்பான். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் கால்கள் சிக்கிக்கொள்ளாதபடி கர்த்தர் உங்களை காத்துக்கொள்ளுவார். ஆகையால் எதைக்குறித்தும் கவலைப்படாமல், அஞ்சா நெஞ்சம் உள்ளவர்களாய் காணப்படுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org