சங்கீதம் 122:1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XiwKQOHXZ5M
வனாந்தரத்தில் ஆடுகள் பின்னே அலைந்த தாவீது தேவனை அதிகமாய்த் தேடுகிறவராகவும், உண்மையாய் ஆண்டவரை ஆராதிக்கின்றவராகவும் காணப்பட்டார். எல்லா நிலையிலும் தேவனை துதித்தார். தேவனுடைய சமுகம் ஒன்றே அவருக்கு மிகவும் பிடித்த இடமாகக் காணப்பட்டது. எனவேதான் தேவன் எட்டாத உயரத்தில் அவரை வைத்து ஆசீர்வதித்தார், நினைத்துப்பார்க்க முடியாத மேன்மைகளை தேவன் தாவீதுக்கு கொடுத்தார். ஆடுகள் மேய்த்தவரை அரியணையில் அமரும் அரசனாக்கினார். இன்றைக்கும் நாம் அதை நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாகக் காணப்படுகின்றது.
இன்று அநேகர் தேவ சமுகத்தின் மேன்மையை அறிந்துகொள்ளாததினால்தான் ஆராதனைகளுக்கு மிகவும் தாமதமாக வருகின்றார்கள். சூழ்நிலைகள் எல்லாமே சாதகமாக இருந்தாலும் பாடல் பகுதி முடிந்தபின்பு செல்லலாம், போதகர் செய்தியை துவங்கும் போது ஆலயத்திற்குள் போகலாம் என்று நினைத்து தேவனுடைய சமுகத்தை அசட்டைப்பண்ணுகின்றார்கள். சிலரிடம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னாலே அது அவர்களுக்கு கசப்பாக காணப்படுகின்றது. ஆனால் வெளியில் Park, Mall, Shopping, Beach, போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் மிகவும் துரிதமாக ஆயத்தமாகி தங்களோடு வருகின்ற மற்றவர்களையும் துரிதப்படுத்துவார்கள். இப்படிப்பட்ட இடங்கள் அவர்களுக்கு ஆலயத்தைப் பார்க்கிலும் மிகவும் பிடித்தவைகளாகக் காணப்படும். இன்னும் அநேகருக்கு விளையாடுவது, நண்பர்களோடு இருப்பது, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களைப் பார்ப்பது அதிகமாய் பிடிக்கும். சிலருக்கு தனி அறையில் இருந்து Youtube, Facebook, Instagram, Whatsapp, Tiktok போன்ற சமூக ஊடகங்களில் நேரங்களை செலவிடுவதுதான் பிடிக்கும்.
இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் காணப்படுகின்றீர்கள் ? தேவனுடைய ஆலயம் உங்களுக்கு மிகவும் பிடித்த இடமாகக் காணப்படுகின்றதா ? உங்கள் பிள்ளைகளுக்கு தேவனுடைய ஆலயத்தின் மேன்மையை கற்றுக்கொடுக்கின்றீர்களா ?
தேவனுடைய சமுகத்தை மேன்மையாக எண்ணியதால்தான் உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் என்று மோசே சொன்னார். மார்த்தாள் அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்கினாள். ஆனால் மரியாளோ இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். எனவே தான் இயேசு, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.
உண்மையாகவே தேவனுடைய ஆலயமும், பிரசன்னமும் உங்களுக்கு மிகவும் பிடித்தவைகளாகக் காணப்பட்டால் நீங்கள் ஆராதனை துவங்குவதற்கு முன்பாகவே ஆலயத்திற்கு செல்லுவீர்கள். ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரை ஆராதிப்பீர்கள். அப்பொழுது அவர் தமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியாக்கி உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org