சிறிய அடையாளமும் பெரிய அற்புதமும் ( A small sign and a big miracle)

I இராஜாக்கள் 18:44 ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DHi4S1h1t4s

மூன்று வருஷம் தேசத்தில் மழை இல்லாமல் இருந்தது. அப்பொழுது கர்த்தர் எலியாவிடம் நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார். மூன்று வருஷம் மழை இல்லையென்றால் நிச்சயமாகவே தேசம் மிகுந்த பஞ்சத்தில் இருந்திருக்கும். யோசேப்பின் நாட்களை போல பஞ்சம் வருவதற்கு முன்பாக இப்பொழுது ஜனங்கள் தானியத்தை சேர்த்துவைக்கவில்லை. நம்முடைய தேசங்களில் ஒருமுறை மழை பெய்யாமல் போனாலே விவசாயம் பாதிக்கப்படும், போதிய தானியங்கள் இருப்பதில்லை, விவாசியிகள் பாதிக்கப்படுவார்கள், தேசத்தில் ஏற்றுமதி பாதிக்கப்படும். அதுபோல எலியாவின் நாட்களில் கொடிய பஞ்சம் நிலவியது. நம்முடைய வாழ்க்கையிலும் இப்படி பஞ்சம் போன்ற சூழ்நிலைகள், நீண்ட நாள் காத்திருப்பு, அடைபட்ட வாசல்கள், பொருளாதாரத்தில் மந்தநிலை போன்ற பாதையில் நாம் கடந்து செல்லலாம். இவ்வேளையில் எலியா தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து ஜெபித்தான். கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் முழங்காலில் நின்று நம்மை தாழ்த்தி ஜெபிக்கும் பழக்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும்.

எலியா ஜெபித்துக்கொண்டிருக்கும்போது தன் ஊழியக்காரனை சமுத்திரமுகமாய் போய் பார் என்று சொன்னான். அவன் ஏழாம் முறை போய் பார்த்தபோது சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்பியது. சமுத்திரத்திலிருந்து அடையாளமாக தேவனுடைய கரமோ, மிகாவேல் காபிரியேல் போன்ற தூதர்களின் கரமோ, வேறெந்த பெரிய தேவ தூதர்களின் கரமோ, இராட்சதமான கரமோ, பெரிய மனிதனுடைய கரமோ எழும்பவில்லை. எலியாவின் வேலைக்காரன் பார்த்த அடையாளம் ஒரு மனிதனுடைய சிறிய உள்ளங்கை மேகம் எழும்புவதை பார்த்தான். ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யப்போகும் காரியத்தை சில அடையாளங்களில் உறுதிப்படுத்தும்போது ஒருவேளை சிறிய காரியமாக இருக்கலாம். சிறிய கீழ்ப்படிதல் பெரிய ஆசிர்வாதத்தை கொண்டு வரும். ஆரம்பம் அற்பமாக இருந்தாலும் முடிவை சம்பூரணமாக்கி தருகிறவர் நம் கர்த்தர். எழுப்புதல் நம்முடைய தேசத்தில் வருமா என்பவர்களுக்கு பதில் உள்ளங்கை மேகம், சிறிய மேகம், ஜெபிக்கிற சிறிய கூட்டம், உத்தமமாய் ஊழியம் செய்கிற ஒரு கூட்டம், தியாகத்தோடு கர்த்தருடைய பணியை செய்கிற சிறு கூட்டம் இந்நாட்களில் எழும்பியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

அந்த சிறிய அடையாளத்திற்கு பின்பு வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று. மூன்று வருடம் பஞ்சம் மாறியது. உங்கள் வாழ்க்கையிலும் பெருமழை உண்டாகும். நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும் (லேவி 26:4) என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்களுக்கு ஆசீர்வாத மழை பெய்யும். தேசத்தில் எழுப்புதல் மழை பெய்யும். பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது. எழுப்புதல் மழை பெய்யும்போது எப்படி இருக்கும்? சாதாரணமாக மழை பெய்தால் தெருக்களில் இருக்கும் எல்லா குப்பைகளையும் தண்ணீர் அடித்துவிட்டு செல்லும், தெருக்கள் நகரங்கள் தூய்மையாகிவிடும். அதுபோல எழுப்புதல் மழை பெய்யும்போது தேசம் சுத்திகரிக்கப்படும், பாகால்கள் விக்கிரக தோப்புகள் அகற்றப்படும், மாம்சீக கிரியைகள் அழிக்கப்படும். கர்த்தர் நமக்கு கொடுக்கும் சிறிய அடையாளங்கள் பெரிய அற்புதங்களாக மாறும் நாட்கள் வரும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org