ஜீவனும் மரணமும் சந்தித்த நேரம் (Encounter between Life and death).

கர்த்தர் அவளைப் பார்த்து,     அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,     கிட்டவந்து,     பாடையைத் தொட்டார், அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள், அப்பொழுது அவர்: வாலிபனே,     எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  மரித்தவன் எழுந்து உட்கார்ந்து,     பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார் (லூக்கா 7:13-15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/B88-i8YGxDY

வேதத்தை வாசிக்கும் போது,     பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் சேர்த்து ஒன்பது பேர் மரித்த பின்பு உயிரோடு எழும்பின சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. எலியாவும் எலிசாவும் ஒவ்வொருவரை உயிரோடு எழுப்பினார்கள். பின்பு மரித்துப் போன ஒரு நபரை எலிசாவின் கல்லறையில் போட்ட வேளையில்,     அந்த மனுஷனின் பிரேதம்   எலிசாவின்  எலும்புகளின்மேல் பட்டபோது,     அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். அப்போஸ்தலர்களாகிய  பேதுருவும் பவுலும் ஒவ்வொருவரை உயிரோடு எழுப்பினார்கள். இயேசு மூன்று பேரை உயிரோடு எழுப்பினார். இயேசுவின் உயிர்த்தெழுதலையும் சேர்த்து ஒன்பது பேர் மரித்தும் உயிரோடு எழும்பினார்கள். இயேசு நாயீன் ஊர் விதவையின் மகனை முதல்முதலாய் உயிரோடு எழுப்பினார். ஒருநாள் ஆண்டவருடைய ஊழியத்தின் பாதையில் நாயீன் ஊருக்குக் கடந்துசென்றார். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது,     மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்,     அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள் ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனே கூட வந்தார்கள். அவளைப் பார்த்த உடன்,     ஆண்டவருக்கு அவளுடைய வேதனைப் புரிந்தது,     அவள் மேல் மனதுருகினார்,      அழாதே என்று சொல்லி,     பாடையைத் தொட்டார்.  பாடையைக் கண்டால் ஊர் உலகத்தின் ஜனங்கள் விலகிச் செல்வார்கள். ஆனால் ஆண்டவரோ கிட்டவந்து வாலிபனே,     எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே அவன் உயிரோடு எழும்பினார். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்.  

இயேசு ஜீவனின் அதிபதி,     நானே ஜீவன் என்றவர்,     என் ஆடுகளுக்கு ஜீவன் உண்டாகவும்,     அது பரிபூரணப் படவும் வந்தேன் என்றும் கூறினார். ஜீவாதிபதியை நீங்கள் கொலை செய்தீர்கள் என்று  இஸ்ரவேல்  ஜனங்களைப் பார்த்து பேதுரு கூறினார். ஜீவாதிபதியாகிய ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போது மரித்துப் போன எல்லா சூழ்நிலைகளும் மாறும். இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து ஆண்டவர் கூறும் போது,     நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை, நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை, உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை, துணிகளில் சுற்றப்படவுமில்லை. உனக்காகப் பரிதபித்து,     இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒருகண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை, நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். நான் உன் அருகே கடந்துபோகும்போது,     மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு,     உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன், ஆம்,     உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன். அப்போது மரித்துப் போன சூழ்நிலை மாறினது,     ஜீவன் பிரவேசித்தது. இன்றும் அவர்கள் பிழைத்திருக்கிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,     ஜீவாதிபதி உங்களைச் சந்திக்கும் போது,     அவருடைய ஜீவன் உங்களுக்குள் பிரவேசிக்கும். மரித்துப்போன சூழ்நிலைகளும் மாறும்,     சரீரத்தில் விடுதலை உண்டாகும்,     அற்புதங்கள் நடக்கும். 

பிசாசு மரணத்தின் அதிபதி,     வேதம் அவனைத் திருடன் என்று அழைக்கிறது,     திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று அவனைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான ஜனங்களின் மனதைக் குருடாக்கி,     ஆத்துமாக்களில் மரித்துப் போனவர்களாய் காணப்படும்படிக்குச் செய்கிறான். அனேகருடைய ஆரோக்கியத்தைத் திருடுகிறான். ஒருமுறை ஒரு தகப்பன்,     ஊமையான ஒரு ஆவி பிடித்த தன் மகனை ஆண்டவரிடத்தில் கொண்டுவந்தான்.  அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழித்து,     நுரைதள்ளி,     பல்லைக் கடித்து,     சோர்ந்துபோகும் படிக்குச் செய்யும்.  இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால்,     எங்கள் மேல் மனதிரங்கி,       உதவிசெய்யவேண்டும் என்று கண்ணீரோடு வேண்டிக் கொண்டான். இயேசு அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே,     இவனை விட்டுப் புறப்பட்டுப்போ,     இனி இவனுக்குள் போகாதே என்று கட்டளையிட்டர்,     அவன் உயிர்தப்பி பிழைத்தான். ஆகையால் பிசாசிற்கு ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் இடம் கொடாதிருங்கள். தேவனுக்கு கீழ்ப்படிந்து,     அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்,     அப்போது அவன் உங்களை வி;ட்டு ஓடிப்போவான். உங்கள் வாழ்க்கையை முழுவதையும் ஜீவாதபதியிடம் ஒப்புக்கொடுத்துவிடுங்கள்,     அப்போது நீங்கள் பிழைத்திருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar