நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? (Do you not remember?)

மாற் 8:18-21 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள்.நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4xTZy6FaN30

ஒரு மனிதனுக்கு சில பிரச்சனைகள் வரும்போது, கர்த்தர் அவனுடைய வாழ்க்கையில் செய்த கடந்த கால அற்புதத்தை, தேவன் ஆசீர்வதித்த விதத்தை மறந்துவிடுகிறான். பொதுவாக தேவ ஜனங்களுக்கு நினைவுகூர்ந்து தேவனை மகிமை படுத்துகிற சுபாவம் இந்நாட்களில் குறைவாக காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் செங்கடலை பிளந்து வழிநடத்தினாலும், அதையெல்லாம் மறந்து வனாந்திரத்தில் இறைச்சிக்காக, உணவுக்காக முறுமுறுக்கிற ஜனங்களாக, கர்த்தரை கோபப்படுத்துகிற ஜனங்களாக காணப்பட்டார்கள். இப்படியாக தேவ ஜனங்கள் காணப்படலாகாது. நீங்கள் எதிர்பாராத சம்பவங்கள் நடந்திருக்கிறதா? பதறிபோய்விடாதிருங்கள். விசுவாசி பதறான் என்று வேதம் சொல்லுகிறது. மாறாக, இதே சூழ்நிலையில் கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலோ, பழைய புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலோ என்ன செய்தார் என்பதை நினைத்து கர்த்தரை ஸ்தோத்தரித்து அவரை மகிமைப்படுத்துங்கள்.

இயேசு தன்னுடைய சீடர்களிடம் நான் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும்போது, நீங்கள் அப்பத்தை குறித்து சிந்திக்கிறதென்ன? நான் செய்த அற்புதத்தை நீங்கள் நினையாமலிருக்கிறதென்ன? என்று சொல்கிறவராய் காணப்பட்டார். இயேசு செய்த அற்புதத்தை சீஷர்கள் சில மாதங்களுக்குள்ளாக மறந்துபோய்விட்டார்கள்.

தேவனை அதிகமாய் நேசிக்கிற ஒருவாலிபன் எவ்வளவு பிரச்னை, சோதனை வந்தாலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே காணப்படுவானாம். இவ்வளவு உபத்திரவத்திலும் நீ எப்படி மகிழ்ச்சியாக காணப்படுகிறாய் என்று அவனுடைய சகநண்பர்கள் கேட்பார்களாம். அதற்கு அந்த தேவபிள்ளை சொல்லுவானாம், என் ஆண்டவர் இதுவரைக்கும் என் வாழ்க்கையில் எத்தனையோ அற்புதத்தை செய்திருக்கிறார்; தகப்பனை இழந்தபோது கர்த்தரே என் தகப்பனாக இருந்தார், படிக்க பணம் கட்டமுடியாத சூழ்நிலை வந்தபோது யெகோவா யீரேவாக கர்த்தரே என் தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்தார்; உன்ன ஆகாரம் இல்லாதபோது கர்த்தரே என்னை போஷித்தார். இப்பொழுது நான் கடந்து செல்லுகிற பாதையிலும் கர்த்தரே என் கூட வருகிறார்; என் ஆண்டவர் எனக்கு நன்மையானவைகளையே எப்பொழுதும் செய்வார் என்று சாட்சியாக சொன்னானாம். கர்த்தருடைய பிள்ளைகளும் இப்படித்தான் எப்பொழுதும் கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூருகிற ஜனங்களாக காணப்படவேண்டும்.

ஒவ்வொருநாளும் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்கிற நன்மைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதிவைக்கும் பழக்கமுடையவர்களாய் காணப்படுங்கள். மாதத்தின் இறுதியில் எழுதிவைத்த காரியங்களை படித்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். இப்படி எழுதி வைப்பதின்மூலம், நாம் மறக்காமல் தேவனுக்கு நன்றி செலுத்தலாம். அப்படி நன்றி செலுத்தும்போது, இன்னும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் பலத்த அற்புதங்களை செய்வார். இப்பொழுதே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி செலுத்த ஆரம்பியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org