இதோ,    மேகங்களுடனே வருகிறார்(Behold, He is coming).

இதோ,    மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும்,    அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்,  பூமியின்  கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும்,    ஆமென் (வெளி. 1:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WxUXc284Nw0

யோவான்,    தேவவசனத்தினிமித்தமும்,    இயேசுகிறிஸ்துவைப்பற்றிய  சாட்சியினிமித்தமும்,    பத்மு என்னும் தீவிலே சிறையிருப்பிலிருந்தார். அப்போது இனி சம்பவிக்கப்  போகிறவைகளைக்  குறித்து அவருக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார். அதை ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு,    அதாவது உலகளாவிய எல்லா சபைகளுக்கும்,    சாட்சியாக அறிவிக்கும் படிக்கு இயேசு கட்டளையிட்டார். வெளிப்படுத்தல் விஷேசத்தில் காணப்படுகிற செய்தி சபை மக்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட முக்கியமான செய்தியாகும். அவைகளில் ஒன்று இயேசு சீக்கிரம் வரப்போகிறார் என்பதாகும். குறிப்பாக இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தில் மாத்திரம் ஏழு இடங்களில் இதோ சீக்கிரம் வருகிறேன் என்று ஆண்டவர் கூறியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதிலிருந்து கர்த்தருடைய வருகை வெகு சீக்கிரம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால்  கர்த்தருடைய பிள்ளைகளாய் காணப்படுகிற நாம் அவருடைய வருகையைச் சந்திக்க ஆயத்தமாய் காணப்படுகிறோமா என்ற ஒரு கேள்வி நமக்கு முன்பு காணப்படுகிறது. வேதம் கூறுகிறது,    கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து,    தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து,     அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள்  நித்திரையடைந்தபின்பு  சகலமும்  சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். இவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாய் இந்நாட்களில்  தேவஜனங்களும் காணப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரிய காரியமாகும். கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர்,    வானமும் பூமியும் ஒழிந்தாலும் அவருடைய வார்த்தை ஒழியாது,    அவைகள் வானங்களில் நிலைத்திருக்கிறது. ஆகையால் திருடனைப் போல நினையாத நாளிகையில் வருகிற கர்த்தரைச் சந்திக்கக் கர்த்தருடைய ஜனங்கள் ஆயத்தமாகக் காணப்படவேண்டும். 

இதோ,    மேகங்களுடனே வருகிறார்,    கண்கள் யாவும் அவரைக் காணும் என்ற வார்த்தையிலிருந்து கர்த்தருடைய வருகைக்காய் நாம் ஆவலாய் நோக்கிப் பார்க்கவேண்டும் என்பது கட்டளையாகக் காணப்படுகிறது,    நம்முடைய கண்களுக்கு முன்பாக எப்பொழுதும் காணப்பட வேண்டிய ஒரு காரியம் இயேசுவின் வருகையாகும்.  சீஷர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது,    இயேசு எப்படி உயர எடுத்துக்கொள்ளப்பட்டாரோ,     ஒரு மேகம் அவரை எப்படி எடுத்துக்கொண்டதோ,    அப்படியே மேகங்களுடனே வருவார் (அப்.1:9-11). மேகங்கள் என்பது அவருடைய சமூகத்தையும்,    மகிமையையும் குறிப்பிடுகிறது. அவர் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒலிவ மலையில் அவருடைய பாதங்கள் வந்து மீண்டும் நிற்கும். கண்கள் யாவும் அவரைக் காணும் என்ற வார்த்தையிலிருந்து இது சபையைச் சேர்த்துக் கொள்ளும் படிக்கு வருகிற அவருடைய இரகசிய வருகையைக் குறிப்பிடுவதல்ல. இரகசிய வருகையில் இயேசு  தாமே ஆரவாரத்தோடும்,    பிரதான தூதனுடைய சத்தத்தோடும்,    தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.  பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக,    மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,    இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் (1 தெச. 4:16,   17). இது அவருடைய பகிரங்க வருகையைக் குறிப்பதாகும். அப்போது இந்த பூமியில் காணப்படுகிற எல்லாக் கண்களும் அவரைக் காணும். சுவிஷேசத்தைக் கேட்டும் அவரை ஏற்றுக் கொள்ளாத எல்லாருடைய கண்களும் காணும். கிறிஸ்தவர்களை ஒரு தள்ளுப்பூச்சியைப் போல நினைத்து உபத்திரவப்படுத்துகிற எல்லா துன்மார்க்கர்களுடைய கண்களும் கண்டு புலம்பும்,    சுவிசேஷத்திற்கு வாசலை அடைத்த எல்லா சர்வாதிகாரிகளும் கண்டு தவிப்பார்கள். சத்தியத்தை அறிந்தும் அதன்படி ஜீவிக்காத எல்லா கைவிடப்பட்ட கிறிஸ்தவர்களும் கண்டு புலம்புவார்கள்.  வேதத்தைப்  பார்க்கிலும்  பாரம்பரியங்களையும்  சடங்காச்சாரங்களையும் மனித போதனைகளையும் மேன்மைப் படுத்துகிற எல்லாருடைய கண்களும் கண்டு அந்நாளிலே தவிக்கும். பூமியில் காணப்படுகிற எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.

கர்த்தரின் வருகையில் நாளில் புலம்பாமலும்,    கலங்காமலும் காணப்பட வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையைக் கர்த்தருக்குப் பூரணமாய் ஒப்புக்கொடுத்து விடுங்கள். ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் பாவங்களற கழுவப்படுங்கள். நல்ல ஒரு ஆவிக்குரிய ஐக்கியத்தில் இணைந்து கர்த்தருடைய வார்த்தையில் அனுதினமும் வளருங்கள். ஆவியானவருடைய ஆளுகைக்கு  முழுவதுமாய்  உங்களை அர்ப்பணியுங்கள். இயேசுவின் சாயலைக் கர்த்தருடைய வார்த்தையில் கண்டு அந்த சாயலுக்கு ஒப்பாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar