மாற் 8:2. ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/42DX-joR06M
மூன்று நாட்கள் திரளான ஜனங்கள் இயேசுவோடுகூட இருந்தார்கள். இயேசுவிடம் வார்த்தையை பெற்றுக்கொள்ளவும், அற்புதங்களை பெற்றுக்கொள்ளவும் வாஞ்சையாய் ஜனங்கள் இருந்தார்கள். எல்லாரும் மூன்று நாள் ஒன்றும் சாப்பிடாமல் உபவாசத்தோடு இருந்தார்கள் என்றே சொல்லலாம். இதன் பின்பு இயேசு அவர்களை பட்டினியாக வெறும் வயிறோடு அனுப்ப அவருக்க மனதில்லை. ஜனங்களுக்காக பரிதபிக்கிறேன் என்று சொல்லி எல்லாரும் திருப்தியாக சாப்பிட்டு செல்லும்படி செய்தார். இயேசு திரளான அற்புதங்களையும், சுகத்தையும் கொடுப்பதோடு, நமக்கு வேண்டிய ஆகாரத்தையும் அன்றன்று தருகிறவராய் காணப்படுகிறார். இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுக்கும்போதும், எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும் என்று ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்தார்.
யவீருவின் மகள் மரித்துப்போய்விட்டாள் என்ற செய்தி இயேசுவுக்கு வந்தது. அவள் மரிக்கவில்லை நித்திரையாய் இருக்கிறாள் என்ற இயேசு சொன்னபோது, நகைத்த அநேகரை வெளியே போகும்படி செய்து, அவள் வைக்கப்பட்ட இடத்திற்கு இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் அவளுடைய பெற்றோர்களோடு கூட கடந்து சென்றார். அந்த பிள்ளையை பார்த்து சிறுபெண்ணே எழுந்திரு என்று ஒரு வார்த்தை சொன்னார்; அந்த மாத்திரத்திலே பன்னிரண்டு வயதுள்ள அந்த சிறுபெண் எழுந்து நடந்தாள். இயேசு இவ்வளவு பெரிய அற்புதத்தை செய்தபிறகும், அவர் அந்த பிள்ளையின் பெற்றோரை பார்த்து அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார். அந்த சிறு பெண் எழுந்து நடந்தவுடன் அவளுடைய பெற்றோருக்கு பெரிய மகிழ்ச்சி வந்திருக்கும். ஆகிலும் பெற்றோர்கள் அந்த சிறு பெண் பசியாக இருப்பாள் என்பதை சற்றும் நினைக்கவில்லை, அந்த எண்ணமும் யோசனையும் அவர்களுக்கு வரவில்லை. ஆனால் இயேசு அந்த சிறு பெண் பசியாய் இருக்கிறாள் என்பதை அறிந்து, அவளுக்கு உண்ண ஆகாரம் கொடுங்கள் என்று சொன்னார். அவ்வளவு கரிசனையுள்ள ஆண்டவர் நம்முடைய இயேசு.
யாக்கோபிற்கும் அவன் பிள்ளைகளுக்கும் ஆகாரம் இல்லாமல் போனது. அப்பொழுது ஆண்டவர் யோசேப்பின் மூலம் அவர்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் ஒருநாளும் பட்டினியாக இல்லாமல், வானத்து அப்பங்களை கொடுத்து போஷித்தார். எலியாவை காகங்களை கொண்டு போஷித்தவர், உங்களை போஷிக்காமல் விட்டு விடுவாரா? காட்டு புஸ்பங்களையே உடுத்துவிக்கிறவர் உங்களை உடுத்துவியாமல் போவாரா?. உங்களுக்கு இன்னது வேண்டும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். உங்கள் பசியை இயேசு அறிந்திருக்கிறார். வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று வசனம் சொல்லுகிறது. கர்த்தருக்காக ஓடுகிற, உழைக்கிற, பிரயாசப்படுகிற ஒருவரையும் பட்டினியாக இருக்கும்படி அனுமதிக்க மாட்டார். விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார் (2 கொரி 9:10).
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org