பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்(I desire mercy and not sacrifice).

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால்,    குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள் (மத். 12:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qI0A84u0f74

இயேசு ஊழியத்தின் நாட்களில்  சீஷர்களுடனே  ஓய்வுநாளில்  பயிர்வழியே போனார். சீஷர்கள் பசியாயிருந்ததினால் பயிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினார்கள். இயேசுவும் கூட பசியோடுதான் இருந்திருக்கக் கூடும். அந்நாட்களில் காணப்பட்ட மதத்தலைவர்களாகிய பரிசேயர் அதைக் கண்டு விசனப்பட்டு உம்முடைய சீஷர்கள் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே என்று இயேசுவிடம் கூறினார்கள். பசியாயிருந்தவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்குப் பதிலாக,    பழைய ஏற்பாட்டின் சட்டதிட்டங்களை மாத்திரம் அதின் எழுத்தின்படி சுட்டிக்காட்டிக் குற்றஞ்சுமத்துகிறவர்களாய் காணப்பட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து  தாவீதும்  அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து,    ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே என்றார். பின்பு ஒரு ஓய்வுநாளில்,    இயேசு ஜெப ஆலயத்திற்குக் கடந்து சென்றார். அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது,    அவர்மேல் குற்றஞ்சாட்டும் படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள் (மத் 12:10). அதற்கு இயேசு ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயந்தான் என்று கூறி அவனைச் சொஸ்தமாக்கினார்.  மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை,    ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது,    ஆகையால் ஆண்டவருக்கு அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன்தான் முக்கியமானவனாய் காணப்பட்டான். ஒருமுறை இயேசு ஆயக்காரர்களோடும்,    பாவிகளோடும்  போஜனம்பண்ணுதை கண்டு  ஏன் அப்படிச்செய்கிறார் என்று கேட்ட பரிசேயர்களுக்கு,    இயேசு பிணியாளிகளுக்கு  வைத்தியன்  வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதல்ல என்று கூறி அங்கேயும் பலியையல்ல இரக்கத்தை விரும்புகிறேன் என்று   கூறினார்.

கர்த்தருடைய பிள்ளைகள்,    நம்முடைய ஆண்டவரைப் போல இரக்கமுடையவர்களாய் காணப்பட வேண்டும். அதை அவர் விரும்புகிறார்,    பலியை அல்ல இரக்கத்தையும்,    தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும்,    விரும்புகிறேன் (ஓசியா 6:6). இரக்கமில்லாத சந்ததி எங்கும் காணப்படுகிறது.  ஆகையால்தான்  பெண்  பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்வதும்,     பாலியல்  ரீதியாக  துன்பப்படுத்துவதும்,    பொருளாதார ரீதியாக ஏழைகளை  நசுக்கப்படுவதையும்,    சாதி,    மொழி,    மதங்களின் பெயரால் ஈவிரக்கமின்றி அடித்து நொறுக்கப்படுவதையும் எங்கும் பார்க்கிறோம். பட்டணத்து மெகாசபைகளின் ஊழியர்களும் கிராமத்து ஏழை ஊழியர்களுக்கு இரக்கம் பாராட்டுவதில்லை.  நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும் படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்ட நியாயசாஸ்திரியிடம்,    நல்ல சமாரியனைப்பற்றிய உவமையை ஆண்டவர் கூறி நீயும் போய்  சமாரியனைப்  போல  பிறருக்கு இரக்கஞ்செய் அப்பொழுது நீ பிழைப்பாய்,    நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பாய் என்று   கூறினார். நீங்கள் பிறருக்குச் செய்கிற இரக்கம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்குக் கூட உங்களுக்கு உதவிசெய்யும். நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும் என்றும் வேதம் கூறுகிறது. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,    அவர்கள் இரக்கம் பெறுவார்கள் என்ற வசனத்தின்படி நீங்கள் மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டும் போது,    கர்த்தர் உங்களுக்கு இரக்கம் பாராட்டி உங்களை ஆசீர்வதித்து,    வாழவைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar