மேன்மேலும் ஆசீர்வாதம் (More and more blessings).

எஸ்தர் 9:4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/R1WZlBCk4MU

ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பதில் அவர் எல்லையை போடுவதில்லை. நாளுக்கு நாள் விருத்தியாக வேண்டும், நாளுக்குநாள் பெறுக வேண்டும், நாளுக்கு நாள் உயர வேண்டும் என்றே கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். தாவீது வரவர விருத்தியடைந்தான் என்று வேதம் கூறுகிறது. அதுபோல மொர்தெகாயை கர்த்தர் எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக உயர்த்தினார். அரண்மனையின் வெளியே நின்ற அவனை, இராஜாவின் அரண்மனைக்குள்ளாக அழைத்துவந்து சகல கண்களும் காண உயர்த்தினார். அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமானது. இந்நாட்களில் தங்கள் பெயர் வெளியே வரவேண்டும் என்று சுய விளம்பரத்தை நாடுகின்ற தலைவர்கள், ஏதாவது பேட்டி கொடுத்து தன்னை ஊடகங்களில் வரும்படியாக செய்கிற திரளான அரசியல் தலைவர்கள் உண்டு. ஆனால் மொர்தெகாயின் பெயர் எல்லா நாடுகளிலும் பிரச்சித்தம் ஆகும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை; அவன் எதிர்பார்த்தது இஸ்ரவேல் ஜனங்களுக்கு இரட்சிப்பு வரவேண்டும் எனபது மாத்திரம் தான். அப்படிப்பட்டவனை மென்மேலும் பெருகும்படி கர்த்தர் செய்தார். அதுபோல உங்களையும் மென்மேலும் பெருகும்படி கர்த்தர் செய்வார்.

ஒரு நாள் கர்த்தர் ஆபிரகாமையும் சாராளையும் அழைத்து அவர்களுடைய பெயரை மாற்றினார். ஆபிராம் என்பதற்கு அர்த்தம் உயர்ந்த தகப்பன் (Exalted Father) என்று அர்த்தம். ஏற்கெனவே அவனுடைய பெயர் நல்ல பெயராக தான் இருந்தது. அவனுடைய பெயரின் அர்த்தம் எத்தன் என்றோ, ஏமாற்றுபவன் என்றோ, திருடன் என்றோ இல்லை. ஏற்கெனவே அவன் பெயர் நல்ல பெயராக இருந்தாலும் ஆபிராமின் பெயரை கர்த்தர் ஆபிரகாம் என்று மாற்றினார். ஆபிரகாம் என்பதற்கு திரளான ஜனங்களுக்கு தந்தை (Father of Multitude) என்று அர்த்தம். ஏற்கெனவே ஆசீர்வாதமாக இருந்த ஆபிரகாமை இன்னும் மென்மேலும் ஆசீர்வதிக்கிற தேவனாக கர்த்தர் காணப்பட்டார். அதுபோல சாராய் என்பதற்கு இளவரசி (My Princess) என்று அர்த்தம். ஏற்கெனவே அவளுடைய பெயர் நல்ல பெயராக, எல்லாரும் நேசிக்கிற பெயராக தான் இருந்தது. இந்த பெயரை மாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இருப்பதில்லை. அநேக தகப்பன்மார்கள் தங்களுடைய பெண்பிள்ளைகளை, இவள் என் இளவரசி என்று சொல்லிக்கொள்ள பெருமிதப்படுவார்கள். ஆனால் கர்த்தர் சாராயை சாராள் என்று மாற்றினார். சாராள் என்பதற்கு தேசங்களுக்கெல்லாம் தாய் (Mother of Nations) என்று அர்த்தம். ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தை அவர்களுக்கு அருளுவதை கர்த்தர் அவர்களுடைய பெயரை மாற்றியதிலேயே தெரிகிறது.

அதுபோல உங்களுக்கும் ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தை அருளுவது தேவனுடைய சித்தமாய் காணப்படுகிறது. வேலை ஸ்தலங்களில் நீங்கள் ஒரு நிலைமையில் பல வருடங்களாக இருப்பதில்லை. ஏற்ற காலத்தில் கர்த்தர் உங்களை உயர்த்துவார். சாலொமோனுக்கு ஞானத்தோடு ஐஸ்வரியத்தையும் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார். அதுபோல உங்களையும் ஆசீர்வதிப்பார். உங்கள் தலைமுறைகள் தாண்டி திட்டம் கொடுத்து மென்மேலும் ஆசீர்வதித்து உங்களை உயர்த்துவார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org