என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர் (சங். 30:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EQEexNSoHvA
தாவீது நன்றியுள்ள இருதயத்தோடு அவனுடைய புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாற்றின தேவனைத் துதித்துப் பாடின பாடலாக இந்த சங்கீதம் காணப்படுகிறது. அவனுடைய வீட்டின் கிரகப்பிரதிஷ்டையின் பாட்டு என்று சங்கீதத்திற்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், பின்னாட்களில் அவனுடைய குமாரனாகிய சாலொமோனால் கட்டப்படுகிற தேவாலயத்தின் பிரதிஷ்டையைத் தீர்க்கதரிசனக் கண்களில் கண்டு நன்றியோடு பாடினப் பாடலாகவும் கருதப்படுகிறது. தாவீது பல ஏற்றத்தாழ்வுகளை தன் வாழ்க்கையில் கண்டவர். தேவனுடைய அன்பின் மேன்மையையும், அவருடைய கோபத்தின் விளைவையும் கண்டவர். ஆட்டிடையனாய், பெற்றோர்களால் கூட ஒதுக்கப்பட்டவனாய் காணப்பட்ட தன்னை கர்த்தர் சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினதையும், பின்பு பத்சேபாளோடு பாவம் செய்ததின் விளைவையும், தன்ஜனங்களை தொகையிடும்படிக்கு ஏவின சாத்தானுக்குச் செவிகொடுத்ததினால் உண்டான தண்டனையையும் அனுபவித்தவர். ஆகையால்தான், கர்த்தருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும் என்றும் இதே சங்கீதத்தில் எழுதினார்(சங். 30:5).
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுகிறவர், உங்கள் துக்க வஸ்திரங்களைக் களைந்து போடும் படிக்குச் செய்து உங்களை மகிழ்ச்சியால் இடைக் கட்டுவார். எசேக்கியா ராஜா வியாதிப்பட்ட வேளையில், நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன், என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின, கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன், என் காரியத்தை மேற்போட்டுக் கொள்ளும் என்று ஜெபித்தான். கர்த்தர் அவனுடைய புலம்பலைக் கேட்டு ஆயுசின் நாட்களில் பதினைந்து வருஷங்களைக் கூட்டிக் கொடுத்தார். யோபு பாடுகளின் பாதையில் கடந்து சென்ற வேளையில் அவனிலும் இளவயதானவர்கள் அவனைப் பரியாசம் செய்தார்கள். அவனுடைய வாழ்க்கை புலம்பலாகவும், அழுகிறவனுடைய ஓலமாகவும் மாறின என்று யோபு 30:31ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர் அவனுடைய புலம்பலையும் ஆனந்தக் களிப்பாக மாற்றி, இரட்டிப்பான ஆசீர்வாதங்களைக் கொடுத்து அவனை மகிழச்செய்தார். மொர்தெகாயின் நாட்களில், ஆமானின் தந்திரத்தினால், யூதர்களை ஒரே நாளில் அழிப்பதற்கு அகாஸ்வேரு ராஜாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அறிந்த யூத ஜனங்களுக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாகி, அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட நாள் வந்தபோது கர்த்தர் காரியங்களை மாறுதலாய் முடியப்பண்ணினார், யூதர்கள் தங்கள் எதிரிகளை அழித்தார்கள். கர்த்தர் அவர்களை களிகூர்ந்து மகிழும் படிக்குச் செய்தார்.
இயேசு உங்கள் புலம்பலைச் சந்தோஷமாக மாற்றுப்படிக்கு இந்த பூமியில் வந்தார், சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கவும், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கூட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் வந்தார் என்று ஏசயா 61:1-3ல் எழுதப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தையும் சமயத்தையும் கர்த்தர் வைத்திருக்கிறார். அழ ஒரு காலமுண்டு என்றால் நகைக்கவும் ஒரு காலமுண்டு, புலம்ப ஒரு காலமுண்டு என்றால் நடனம் பண்ணவும் ஒரு காலமுண்டு. ஆகையால் நீங்கள் என்றும் புலம்பலோடும், துக்கத்தோடும் காணப்படவேண்டிய அவசியமில்லை. கர்த்தர் உங்களுக்கு ஒரு அற்புதத்தைச் செய்து உங்களை மகிழப்பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar