மெய்யான போஜனமும், மெய்யான பானமும் (Genuine Food, Genuine Drink).

யோவான் 6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PP0xshJQpXs

பிடித்த போஜனம், பிடித்த பானம் உலகத்தில் அநேகருக்கு அநேக விதங்களில் காணப்படுகிறது. சிலருக்கு இந்தியர்களின் உணவு பிடிக்கும், சிலருக்கு சீன தேசத்து உணவு வகைகள் பிடிக்கும், சிலருக்கு மேலைநாட்டு தேசத்து உணவு வகைகள் பிடிக்கும். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான குளிர்பானங்கள் பிடிக்கும். பிடித்த பொருட்கள் என்பது ஒன்று, மெய்யான பொருட்கள் என்பது மற்றொன்று. கடைக்கு நமக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லும்போது நமக்கு பிடித்த பொருள் தரம் இல்லாததாக இருக்குமென்றால், அதனால் வரும் பலன் நீண்ட நாட்கள் நிற்காது. ஆனால் மெய்யான தரம் வாய்ந்த பொருட்களென்றால், அதன் பலன் அதிகமாக காணப்படும். அதுபோல மெய்யான போஜனம் ஒன்றும், மெய்யான பானம் ஒன்றும் காணப்படுகிறது. அது சிலுவையில் இயேசுகிறிஸ்து உங்களுக்காக பிய்க்கப்பட்ட அவருடைய சரீரமும், சிந்தப்பட்ட அவருடைய இரத்தமுமாய் காணப்படுகிறது.

இயேசுகிறிஸ்துவின் மாம்சம் மெய்யான போஜனம். அவருடைய சரீரத்தை பிய்த்து கொடுக்கும்போது, அதை ஆசீர்வதித்து கொடுத்தார். கர்த்தருடைய பந்தியில் பங்குகொண்டு அவருடைய சரீரத்தை புசிக்கும்போது மெய்யான ஆசீர்வாதம் நமக்குள்ளாக கடந்துவருகிறது. அவருடைய தழும்புகளால் சுகமானோம் என்று வசனம் சொல்லுகிறது. இயேசு சிலுவையில் பட்ட காயம் நம்முடைய சரீரங்களுக்கும், ஆவிக்கும், ஆத்துமாக்கும் சுகத்தை கொண்டுவருகிறது. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் (எபி 10:10) என்று வசனம் சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டு காலத்தில் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று பிராமணங்கள் இருந்தது, பாவத்திற்கு ஆடு மாடுகளை பலி செலுத்தி வந்தார்கள். காலப்போக்கில் அது வெறும் சடங்காச்சாரமாக மாறிவிட்டது. ஆனால் நாம் பரிசுத்தமாய் ஜீவிப்பதற்கு இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் நமக்காக பலியிடப்பட்டது. ஆகையால் தான் இன்று நாம் பரிசுத்தமாய் நீதிமானாய் இந்த பாவம் நிறைந்த உலகத்தில் ஜீவிக்கமுடிகிறது.

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பிள்ளை என்று வேத வசனம் சொல்லுகிறது. ஒரே மனிதனுடைய மீறுதலினாலே இந்த உலகத்தில் பாவம் கடந்து வந்திருக்க, ஒரே மனிதனுடைய கீழ்ப்படித்தலினாலே இயேசுவின் இரத்தத்தாலே நாமெல்லாருக்கும் பாவ மன்னிப்பு கிடைத்திருக்கிறது. இயேசு சிலுவையில் இரத்தத்தை சிந்தும்போது நமக்காக சந்தோசத்துடன், நன்றி நிறைந்த இதயத்துடன் ஸ்தோத்திரத்தோடே இரத்தத்தை ஊற்றி கொடுத்தார். அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும் (சக 13:1) என்ற வசனத்தின்படி நமக்காக இன்று எப்பொழுதும் ஒரு திறக்கப்பட்ட ஊற்று காணப்படுகிறது. அது சிலுவையில் இருந்து புரண்டு வரும் இயேசுகிறிஸ்துவின் இரத்தமாய் காணப்படுகிறது.

ஆகையால் இயேசுகிறிஸ்துவின் மாம்சமே நமக்கு மெய்யான போஜனம். இயேசுகிறிஸ்துவின் இரத்தமே நமக்கு மெய்யான பானமாய் காணப்படுகிறது.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org