யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம், பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான் (பிர. 9:18).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/fBO9FlrXmpo
ஒருநபரால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளைக் குறித்து வரலாறு அனேக காரியங்களை நமக்கு கற்றுத்தருகிறது. ஒரு ஹிட்லர் அறுபது லட்சத்திற்கு மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்தான். சீனா தேசத்து மாவோ என்ற மனிதர் சுமார் ஐந்து கோடி ஜனங்கள் பட்டினியால் சாவதற்குக் காரணமாயிருந்தான். 1999ம் வருடம் ஒரு எகிப்திய விமான ஒட்டியின் தற்கொலையின் நிமித்தம் அவனுடன் விமானத்தில் பயணம் செய்த 217 பயணிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். உலகத்தில் மாத்திரமல்ல வேதத்திலும் அப்படிப்பட்ட நபர்களைப் பார்க்கிறோம். ஒரு ஆதாமின் கீழ்ப்படியா மையின் பாவத்தினிமித்தம் இன்றும் ஆதாமுக்குள் பிறக்கிற அத்தனை பேரும் பாவத்தில் பிறக்கிறார்கள். தாவீது, தேவனுடைய சித்தமில்லாதபடி, சாத்தான் தூண்டினதின் நிமித்தம் ஜனங்களை தொகையிடும்படி செய்ததினால் எழுபதினாயிரம் பேர் தாண் முதல் பெயர்செபா மட்டும் மரித்துப் போனார்கள்.
ஒருநபரால் உண்டான ஆசீர்வாதங்களைக் குறித்தும் நாம் அனேக காரியங்களை அறிந்திருக்கிறோம். ஜான் பென்னி குயிக் என்ற மனிதர் 1895ல் தன் ஆஸ்திகளையெல்லாம் விற்று முல்லைப்பெரியாறு நீர் தேக்கத்தைக் கட்டியதால் இன்றைக்கும் சுமார் ஆறுமாவட்டங்கள் நீர்ப்பாசன வசதியைப் பெற்றிருக்கிறது. ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் என்ற மனிதனின் கண்டுபிடிப்பின் மூலம் மின்சாரம் உலகெங்குமுள்ள ஜனங்களுக்குக் கிடைக்கிறது. ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்ததின் நிமித்தம் இன்று நாம் உலகெங்கும் போய்வருகிறவர்களாய் காணப்படுகிறோம். பிந்தின ஆதாமாகிய இயேசுவின் கீழ்ப்படிதலின் நிமித்தம் இரட்சிப்பு உலகத்தின் குடிகளுக்கு இலவசமாய் வந்தது, இப்படி அனேக காரியங்களைக் கூறமுடியும்.
கர்த்தருடைய பிள்ளைகளே! நீங்கள் அழிவைக் கொண்டுவருகிற நபர்களாய் காணப்படுகிறீர்களா? இல்லையேல் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருகிற பாத்திரங்களாய் காணப்படுகிறீர்களா? சபைகளில் ஒருமனதைக் கெடுக்கிற ஒரு நபராய் காணப்பட்டு, இஸ்ரவேல் பாளயத்தில் தோல்வியைக் கொண்டுவந்த ஆகானைப் போலக் காணப்படுகிறீர்களா? இல்லையேல் பாளயத்தைப் பரிசுத்தப்படுத்தி அழிவைத் தடுத்து நிறுத்துகிற ஒரு பினெகாசாய் காணப்படுகிறீர்களா?. ஒரு தீனாளைப் போல, கெட்ட குமாரனாய் குடும்பத்தின் சமாதானக்கேட்டிற்கு காரணமாய் இருக்கிறீர்களா? இல்லையேல் பாடுகளில் தேற்றுகிற ஒரு நோவாவைப் போலக் காணப்படுகிறீர்களா?. பாவியாகிய ஒரு நபரால் மிகுந்த கேடு உண்டாகும் என்பதையறிந்து நன்மையை உண்டாக்குகிற பாத்திரங்களாய் காணப்படுங்கள். இடித்த தள்ளுகிறவர்களாய் அல்ல, ஊன்ற கட்டுகிறவர்களாய் காணப்படுங்கள். கூடாரங்கள் விழுந்து போவதற்கு காரணமாயிராதிருங்கள், அதற்கு பதிலாக எடுத்தக் கட்ட முயற்சியுங்கள். வேதனைகளை உண்டாக்குகிறவர்களாய் காணப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்யை கொண்டுவருகிறவர்களாய் காணப்படுங்கள். ஆபிரகாமுடைய கீழ்ப்படிதலின் நிமித்தம் நாமெல்லாரும் அவனுக்குள் தேவனால் ஆசீர்வாதங்களைப் பெறுகிறவர்களாய் காணப்படுகிறோம். தேவனைச் சார்ந்து ஜீவித்த பவுலின் நிமித்தம் கப்பல் பிரயாணத்தில் காணப்பட்ட 276 பேர் பாதுகாக்கப்பட்டார்கள். வேதம் காட்டுகிற பரிசுத்தவான்களைப் போல ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாய் நாமெல்லாரும் காணப்படக் கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar