எனக்குச் சாட்சிகளாயிருங்கள்(Be my witnesseses) .

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும்,    யூதேயா முழுவதிலும்,    சமாரியாவிலும்,    பூமியின் கடைசிபரியந்தமும்,    எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்(அப். 1:8).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/fYBt-_zwQc8

கர்த்தருடைய ஜனங்கள் ஒரு காரியத்தை அறிந்துகொள்ள வேண்டும்,    நாம் எல்லாரும் கர்த்தருடைய வருகையை எதிர் நோக்கி,    அதற்காய் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறவர்கள். பரலோகத்தில் நாம் சென்ற பின்பு ஒரு காரியத்தை அங்குச் செய்யமுடியாது,    இயேசுவைப் பற்றி யாருக்கும் சாட்சி சொல்ல முடியாது,    அதற்கு அவசியமும் அங்கு இல்லை. ஆண்டவரைப் பற்றி சாட்சி சொல்லுவதற்கு இந்த பூமியில் மாத்திரம் தான் முடியும். ஆகையால் இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்களில் கர்த்தருக்குச் சாட்சியாக வாழ்ந்து,    அதோடு அவரைப் பற்றி மற்றவர்களுக்கும் சாட்சி சொல்லுகிறவர்களாய் நாம் காணப்பட வேண்டும். வேறுயாரும் இயேசுவைக் குறித்து சாட்சி சொல்ல முடியாது,    தேவதூதர்களால் கூட இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சாட்சி சொல்லமுடியாது,    இயேசுவும் மனுஷகுமாரனாய் மீண்டும் வந்து தன்னைப் பற்றி சாட்சி பகிர முடியாது. இயேசுவின் அன்பை ருசித்த நாம்,    இரட்சிப்பைப் பெற்ற நாம்,    அதற்காய் ஆண்டவர் கொடுத்த கிரயத்தை அறிந்திருக்கிற நாம் மாத்திரம் அவரைப் பற்றி மற்றவர்களுக்குக் கூற முடியும்.  ஆகையால் நாம் சாட்சியாய் வாழ்ந்து ஆண்டவரைப்பற்றி மற்றவர்களுக்குச் சாட்சி கூற நம்மை அர்ப்பணிக்க வேண்டும். 

உயிர்தெழுந்த ஆண்டவர்,    பரமேறுவதற்கு முன்பு தன்னுடைய சீஷர்கள் ஒரு முக்கியமான காரியத்திற்காய் காத்திருக்கும் படிக்குச் சொன்னார். பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவரின்  வருகைக்காகக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அவர் வரும் போதுதான் நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும்,    யூதேயா முழுவதிலும்,    சமாரியாவிலும்,    பூமியின் கடைசி பரியந்தமும்,    எனக்குச் சாட்சிகளாயிருக்கமுடியும் என்றார். இயேசுவின் வார்த்தையின் படி சீஷர்கள் காத்திருந்தார்கள். பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது,    அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,    வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்க முண்டாகி,    அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும்  நிரப்பிற்று,    அக்கினி மயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு,    அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது,    அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டார்கள். அதின்பின்பு தான்  பேதுரு பதினொருபேரோடு எழும்பி நின்று இயேசுவைத் தேவன் உயிரோடு எழுப்பினார்,    இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம் என்று பிரசங்கிக்கத் தொடங்கினான். எல்லா அப்போஸ்தலர்களும் கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள்,    அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது என்று அப். 4:33ல் எழுதப்பட்டிருக்கிறது. சாட்சியாயிருப்பீர்கள் என்ற மூல கிரேக்கப்பதத்தின் அர்த்தம் எந்த கிரயத்தைக் கொடுத்தும்,    மரணமே சம்பவிக்கும் என்றாலும் கூட சாட்சிகளாய் காணப்பட வேண்டும் என்பதாய் காணப்படுகிறது. ஆகையால் தான் சீஷர்களும்,    அப்போஸ்தலர்களும் உலகத்தின் பலபகுதிகளில் சிதறித் திரிந்து இயேசுவைக் குறித்து சாட்சி பகிர்ந்து,    அதினிமித்தம் தங்கள் ஜீவனையும் கோதுமை மணிகளாய்; விதைத்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த பல மிஷனரிகள் இயேசுவைப் பற்றி சாட்சி பகிரும்படிக்கு,    பரிசுத்தாவியின் பலத்தோடு தங்கள் மேலை நாட்டின் வசதி வாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு,    கீழ் தேசங்களுக்கு வந்தார்கள். அதனிமித்தம் கர்த்தருடைய அன்பைக் கண்டு கொள்ளவும்,    இரட்சிப்படையவும் நமக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரைக்கும் நெருக்கப்பட்டும்,    ஒடுக்கப்பட்டும்,    புறக்கணிக்கப்பட்டும் வாழ்ந்து கொண்டிருந்த நமக்கு கிறிஸ்துவின் சுவிஷேத்தின் ஒளி ஒரு விடுதலையைத் தந்தது.

கர்த்தருடைய பிள்ளைகளே,    ஆண்டவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சாட்சி சொல்ல நாம் கடமைப் பட்டவர்களாய் காணப்படுகிறோம். பரிசுத்தாவியானவருடைய பெலனைப் பெற்று ஒருவர் இன்னொருவருக்கு இயேசுவைப் பற்றி சாட்சி சொல்லுங்கள். இயேசுவைக் குறித்தும்,    அவருடைய அன்பைக் குறித்தும்,    அவருடைய சுவிஷேத்தைக்குறித்தும் சொல்லுவதற்கு ஒருநாளும் வெட்கப்படாதிருங்கள். நீங்கள் இயேசுவைப் பற்றி சாட்சி சொல்லுவதற்கு முன்பு சாட்சியாய் வாழவும் உங்களை அர்ப்பணியுங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar