முற்றிலும் பரிசுத்தம் (Complete sanctification).

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும்,     நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்ற தாயிருக்கும்படி காக்கப்படுவதாக (1 தெச. 5:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/e9K25-jVIA8

பரிசுத்தமாய் ஜீவிக்கமுடியுமா என்பது இந்த நாட்களில் காணப்படுகிற ஒரு பெரிய கேள்வியாகும். திரும்புகிற திசைகளிலெல்லாம் அசுத்தமான காரியங்கள் காணப்படுகிறது,     ஊடகங்கள் வாயிலாகவும் அசுத்தங்கள் விதைக்கப்படுகிறது. ஆனால் நாம் ஆராதிக்கிற தேவன் நம்மை முற்றும் முழுவதுமாக பரிசுத்தமாக்குகிறவர். முற்றிலும் பரிசுத்தம் என்பது புதிய ஏற்பாட்டில் இந்த ஒரு இடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. அவர் நம்முடைய ஆவி,     ஆத்துமா,     சரீரத்தைக் குற்றமற்றதாக காக்கிறவர். ஆவி,     ஆத்துமா,     சரீரம் என்று இந்த இடத்தில் எழுதப்பட்ட வார்த்தையிலிருந்து தான் மனுஷனில் திரித்துவம் காணப்படுகிறது என்பது தெளிவாய் வெளிப்படுத்தப்பட்டது. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்,     இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்,     ஆத்துமாவையும் ஆவியையும்,     கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்க தாக உருவக் குத்துகிறதாயும்,     இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது (எபி.4:12) என்ற வசனத்திலும் ஆவி,     ஆத்துமா,     மற்றும்  சரீரத்தின் பகுதியாகிய கணுக்களையும் ஊனையும் குறித்து,     நம்மில் காணப்படுகிற திரித்துவத்தைப்பற்றி மறைமுகமாக எழுதப்பட்டிருக்கிறதை அறியமுடிகிறது. தேவன் திரித்துவராய் காணப்படுவது போல அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாமும் திரித்துவமாகக் காணப்படுகிறோம். நாம் மரிக்கும் போது,     ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும் என்று எழுதப்பட்டிருக்கிறது,     இருப்பினும் ஆவியும் குற்றமற்றதாக காக்கப்படவேண்டியது அவசியமாய் காணப்படுகிறது. உள்ளான மனுஷனாய் நித்தியத்திற்குள் செல்லுகிற ஆத்துமாவும் குற்றமற்றதாக காக்கப்படவேண்டும். சரீரம் என்பது மண்ணாய் காணப்படுகிறது,     மண் மண்ணுக்கே   திரும்பும்,     இருந்தாலும் அதுவும் கூட குற்றமற்றதாக பரிசுத்தமாய் காக்கப்பட வேண்டும். 

பரிசுத்தம் என்பது பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியத்தைக் குறிக்கிறது. நாம் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும்,     உலகத்தில் காணப்படுகிற ஜனங்கள் செய்கிற காரியங்களைக் கற்று அவர்களுக்குரிய வேஷத்தைத் தரிக்காதபடிக்கு காணப்படுகிற ஜீவியமே பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியமாகும்.  இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பிரயாணம் செய்த வேளையில் பலஜாதிகள் நடுவில் அவர்கள் காணப்பட்டாலும்,     மலையுச்சியில் நின்று பிலேயாம் அவர்களைப் பார்த்தபோது அவர்கள் தனியே வாசம் பண்ணுகிற ஜனங்களாய் காணப்பட்டார்கள். அதுபோல நாமும் பலதரப்பட்ட ஜனங்கள் நடுவில் காணப்பட்டாலும்,     குடும்பமாய்,     சபையாய் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.   தனிப்பட்ட நம்முடைய ஜீவியத்திலும் பரிசுத்தமாய் காணப்பட வேண்டும்,     எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது,     அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம் பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்,     அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம் பண்ணும்படி அங்கே வந்து தங்குவான். அவள் தன் புருஷனை நோக்கி: இதோ,     நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி,     அதில் அவருக்கு ஒரு கட்டிலையும்,     மேஜையையும்,     நாற்காலியையும்,     குத்துவிளக்கையும் வைப்போம்,     அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள். எலிசா தீர்க்கதரிசி பரிசுத்தமுள்ள ஒரு நபராய் வாழ்ந்தார் என்பதை அறியமுடிகிறது. பவுல் தன்னைக் குறித்து தெசலோனிக்கேயா சபை மக்களுக்குக் கூறும்போது,     விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி,     தேவனும் சாட்சி (1 தெச. 2:10) என்று கூறினார்.  நாமும் பரிசுத்த ஜீவியத்திற்காய் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     இயேசு சீக்கிரத்தில் வரப்போகிறார். அவருடைய வருகையில் உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும்,     குற்றமற்றதாயிருக்கும்படிக்கு காக்கப்படவேண்டும். ஆகையால் இப்பொழுதிலிருந்தே பரிசுத்தத்தை வாஞ்சியுங்கள். கர்த்தருடைய வார்த்தையை அதிகமாய் வாசித்துத் தியானியுங்கள். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு,     உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்ற சங்கீதக்காரனைப் போல நம்முடைய இருதயம் அவருடைய வார்த்தையினால் நிரம்பியிருக்கட்டும். பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னத்தில் நிரம்பியிருங்கள்.  நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று வாக்களித்த தேவனைப் பற்றிக் கொண்டு அவரோடு சஞ்சரியுங்கள். அப்பொழுது இயேசு கிறிஸ்துவின் வருகையில் குற்றமற்றவர்களாய் காணப்படுவோம்,     என்றென்றைக்கும் அவரோடு கூட வாசம் பண்ணுவோம். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar