ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான், அதனாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (ஆதி. 22:14).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RTXR4Gdusxw
கர்த்தர், ஈசாக்குக்கு பதிலாக, ஒரு ஆட்டுக்கடாவை பலிசெலுத்த ஆபிரகாமுக்குக் காண்பித்த வேளையில், அவன் தேவனுக்கு யேகோவாயீரே என்ற பெயரைப் போட்டான், கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்பது அதின் அர்த்தமாகும். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உங்கள் தேவைகளைச் சந்திக்கிறவர். ஒரு புதிய மாதத்தில் பிரவேசிக்கிற வேளையில் பலவித தேவைகள் உங்களுக்கு முன்பாக காணப்படக்கூடும். அதைக்குறித்துக் கலங்கிப்போனவர்களாய் கூட நீங்கள் காணப்படலாம், ஆண்டவர் உங்கள் தேவைகளைச் சந்திப்பார், ஆகையால் மனம் கலங்காதிருங்கள்.
ஆண்டவர் நம்முடைய தேவைகளைச் சந்திக்கிற யேகோவாயீரேவாக காணப்பட வேண்டும் என்றால், ஆபிரகாமைப் போல நமக்குள்ளாக மூன்று காரியங்கள் காணப்படவேண்டும். தேவன் ஆபிரகாமைப் பார்த்து நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்தில் போய் அங்கே உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை எனக்காய் சர்வாங்க தகனபலியாய்ச் செலுத்து என்று கூறி அவனைச் சோதித்த வேளையில், ஆபிரகாம் அப்படியே கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தான். அவன் ஊர் என்ற கல்தேயருடைய தேசத்தில் வாழ்ந்த வேளையிலும் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றுவுடன் கீழ்ப்படிந்து சென்றவன், பலவருடங்கள் கழித்து அவனுடைய குமாரனைப் பலியாய்ச் செலுத்தும் படிக்குக் கூறிய வேளையிலும் அப்படியே கீழ்ப்படிந்தான். கர்த்தருக்குக் கீழ்ப்படிதல் அவன் வாழ்க்கையின் முறைமையாகக் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே தேவன் உங்கள் தேவைகளைச் சந்திக்க, உங்கள் காரியங்களைப் பார்த்துக் கொள்ள முதலாவது உங்களிடத்தில் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார். பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம் என்று வேதம் கூறுகிறது. குடும்பத்தின் தலைவர்களும், தலைவிகளும் தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம் பண்ணி விழித்திருக்கிறபடியால் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதத்தையும் சமாதானத்தையும் கொண்டுவரும்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது விசுவாசத்தினாலே ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் என்று வேதம் கூறுகிறது. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று ஏற்கனவே கர்த்தர் அவனோடே சொல்லியிருந்தார், இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து அவனை எழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான், மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் காரியங்களைக் கர்த்தர் பார்த்துக் கொள்ள, இரண்டாவது விசுவாசம் உங்களுக்கு அவசியம். மனுஷகுமாரன் வரும்போது பூமியில் நம்மிடத்தில் விசுவாசத்தைக் காண்பாரோ என்று வேதம் கேட்கிறது, ஆகையால் விசுவாச ஜீவியம் அனுதினமும் செய்யுங்கள். விசுவாசத்தினால் வராதது எல்லாம் பாவம் என்று வேதம் கூறுகிறது. நீங்கள் விசுவாசிக்கிறவர் எந்த சூழ்நிலையிலும் உங்கள் தேவைகளைச் சந்திக்க வல்லமையுள்ளவர் என்ற திடநம்பிக்கை உங்களுக்குள்ளாகக் காணட்டும். நீங்கள் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் நிச்சயமாய்க் காண்பீர்கள்.
ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும் படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்த வேளையில், கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார், அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே, நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஓப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே, மூன்றாவதாகக் கர்த்தர் உங்களுடைய தேவைகளைச் சந்திப்பதற்குத் தேவனுக்குப் பயந்த ஒரு ஜீவியம் செய்யுங்கள். தேவபயம் இல்லாத ஒரு சந்ததி எங்கும் காணப்படுகிற இந்நாட்களில் நீங்கள் எப்பொழுதும் கர்த்தருக்குப் பயந்த ஒரு ஜீவியத்தைச் செய்யுங்கள். நீங்கள் கர்த்தருக்குப் பயந்து ஜீவிக்கும் போது நீங்கள் பாக்கியவான் காணப்படுவீர்கள், உங்கள் கைகளின் பிரயாசத்தை நீங்கள் சாப்பிடுவீர்கள், உங்களுக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். ஆபிரகாமுக்கு யேகோவாயீரேவாக வெளிப்பட்டு அவனுடைய தேவைகளைச் சந்தித்தவர், உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்து இந்த மாதம் முழுவதும் உங்களை நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar