ஒரு காற்று (A wind):-

எண் 11:31. அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/6XT9ZtfgSJQ

இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் வானத்து அப்பத்தினால் போஷித்துவந்தபோதும், தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று முறுமுறுகிறவர்களாய் காணப்பட்டார்கள். அப்பொழுது ஆண்டவர் சொன்னார் அவர்கள் ஒரு மாதம் அளவும் தெவிட்டுப்போகும் அளவிற்கு நான் இறைச்சியை கொடுப்பேன் என்று. மோசே சொன்னான் என்னோடிருக்கிற காலாட்கள் மாத்திரம் ஆறுலட்சம்பேர். மொத்த ஜனங்கள் இருபது லட்சம் பேர். எல்லாரும் வைத்திருக்கிற ஆடு மாடுகளை அடித்தாலும், ஒரு நாள் சாப்பிடத்தக்க இறைச்சி கூட கிடைக்காது. இந்த சூழ்நிலையில் எப்படி மாதம் முழுவதும் இருபது லட்சம் ஜனங்கள் சாப்பிடுவார்கள் என்று கேள்வி கேட்டான். ஆண்டவர் சொன்னார்: மோசே, என்னுடைய கரம் குறுகிபோயிற்றோ? என்று. இதே கேள்வியை நாம் அநேக வேளைகளில் கேட்கிறோம்; இந்த காரியம் ஆகுமா? சூழ்நிலைகள் எல்லாம் நேர்மாறாக இருக்க, இந்த காரியம் கைகூடி வருமா ? என்ற கேள்வி நமக்குள்ளாக வருகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, எதிர்மறையான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம், கர்த்தருடைய கரம் குறுகிப்போகவில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தரிடத்திலிருந்து ஒரு காற்று புறப்பட்டு வந்தது. நாம் அநேக காற்றுகளை குறித்து கேள்விப்படுகிறோம். சூறாவளி, ஓகி புயல் என்று அநேக விதமான காற்றுகள் நம்முடைய தேசங்களில் அவ்வப்போது வருகிறதாய் காணப்படுகிறது. சாதாரணமான புயல் காற்று வீசுமென்றால், ஐந்து நிமிடங்களில், நாம் வீதிகளில் காண்கிற அனைத்துமே மாறியிருக்கும். கடந்த காலங்களில் வீசின புயல் காற்றால், பெரிய பெரிய மரங்களும் கீழே விழுந்து கிடந்தது. அமெரிக்கா தேசத்தில் வீசிய காற்று, வாகனத்தையே புரட்டிக்கொண்டு சென்றது. சில வகையான காற்று பெரிய பாறைகளையும் உருண்டுபோகும்படி செய்துவிடும். நாம் காண்கிற இந்த காற்றுக்கே இவ்வளவு பெரிய வல்லமை காணப்படுமென்றால், கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்டு வரும் ஒரு காற்று எவ்வளவு பெரிய வல்லமை உள்ளதாய் காணப்படும். கர்த்தரிடத்திலிருந்து புறப்படும் காற்று, பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறதாய் காணப்படுகிறது. எப்படி ஒரு காற்று காடைகளை அடித்துக்கொண்டு வந்ததோ, அதுபோல நம்முடைய தேசத்தில் ஆவியானவர் காற்றாய் வீசும் போது திரளான ஜனங்கள் சபையில் வந்து சேர்வார்கள். ஒருவேளை நாம் நினைப்போம், இப்பொழுது காண்கிற சூழ்நிலைகள் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராய் காணப்படுகிறது, எப்படி இடிக்கப்பட்ட எரிக்கப்பட்ட சபைகள் மீண்டும் கட்டப்படும், எப்படி ஜனங்கள் சபையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள், தேசத்தில் சபைக்கு விரோதமாக பல சக்திகள் செயல்படுகிறதே என்று நினைக்கலாம். எப்பேர்ப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் ஒரு காற்று கர்த்தரிடத்திலிருந்து நம்முடைய தேசத்தில் வீசும். அந்த ஒரு காற்று திரள் திரளான ஜனங்களை சபையில் கொண்டு வரும். அந்த ஒரு காற்று ராஜாக்கள் பிரபுக்களை சபைக்கு நேராய் அழைத்துவரும். அந்த ஒரு காற்று சபைக்கு எதிராக செயல்பட்டவர்களை, சபைக்கு அழைத்துவந்து ஆண்டவரை தொழுது கொள்ளும்படி செய்யயும். அந்த ஒரு காற்று நிச்சயமாய் கர்த்தரிடத்திலிருந்து வரும். நம்முடைய தேசம் மிகப்பெரிய எழுப்புதலை சந்திக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org