உபா 4:7. நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rsWk4sosaGU
உலகத்தில் நாங்கள் தான் பெரிய வல்லரசு நாடு என்று சொல்லக்கூடிய நாடுகள் உண்டு, நாங்கள் தான் பணக்கார நாடுகள், நாங்கள் தான் உயர்ந்த நாடு என்று சொல்ல கூடிய நாடுகள் உண்டு. அதுபோல நம்முடைய தேசங்களில் எங்க ஜாதி தான் பெரிய ஜாதி என்று சொல்லக்கூடிய பல பாகுபாடுகளும் உண்டு. நாங்கள் இன்ன தொழிலை செய்கிறவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுகிற ஜனங்களும் ஜாதிகளும் உண்டு. கிறிஸ்த்துவர்களாகிய நமக்குள் உலகத்துக்குரிய இந்த வேற்றுமை இல்லாமல் இருந்தாலும், நாம் பெரிய ஜாதி என்று வசனம் சொல்லுகிறது. நாம் பெரிய ஜாதி என்று சொல்வதற்கான அடையாளம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் தேவாதி தேவனை சமீபமாய் கொண்டிருக்கிறோம் என்பதே.
நாம் கர்த்தரை தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்கு சமீபமாய் இருக்கிறார். ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், நான் மிகப்பெரிய பாவி, நான் கர்த்தரை தொழுதுகொள்ள முடியுமா? கர்த்தர் அவருடைய பிரசன்னதினால் என்னை நிரப்புவாரா என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். வேத வசனம் சொல்லுகிறது, கர்த்தரை தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், எந்த நேரமாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும், யார் கைவிட்டாலும், பாவத்திலிருந்து விடுதலையடைய கர்த்தருடைய சமூகத்தில் வரும்போதும், எல்லா சூழ்நிலையிலும் தேவனை தொழுதுகொள்ளும்போது, அவர் உங்களுக்கு சமீபமாய் இருக்கிறார். அவர் பல கோடி மயிலுக்கு அப்பால் இருந்து உங்கள் சத்தத்தை கேட்கவில்லை, மாறாக, உங்கள் அருகாமையிலிருந்து, உங்கள் சமீபமாய் வந்து, உங்கள் சத்தத்தை கேட்கிறவராய் இருக்கிறார். தம்மை அண்டிக்கொள்ளுகிற யாவரையும் சேர்த்துக்கொள்ளுகிறவர், யாரையும் புறம்பே தள்ளாதவர். ஆகையால் தேவாதி தேவன் உங்கள் சமீபமாய் இருக்கிறார் என்ற சிந்தை எப்பொழுதும் இருக்கட்டும்.
தாவீது சொல்லுகிறான் கர்த்தரை எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்பதாக. அதுபோல தான் கர்த்தர் உங்கள் முன்பாக இருக்கிறார், அவர் கிருபை உங்கள் முன்பாக கடந்து செல்லுகிறது. வசனம் சொல்லுகிறது அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் (உபா 7:21) என்று. உங்கள் கர்த்தர் உங்களுக்குள் ஜீவிக்கிறார். மகிமையின் நம்பிக்கையாக கிறிஸ்து உங்களுக்குள் வாசம் செய்கிறார்.
உலகத்து ஜனங்கள் உங்களை பார்த்து சொல்லுவார்கள் இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்று (உபா 4:6). நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார் (உபா 7:6). நீங்கள் தேவனுக்கு சொந்தமான ஜனமாயிருக்கிறபடியால், கர்த்தரை சமீபமாய் கொண்டிருப்பதால், நீங்கள் தாழ்ந்த ஜாதியல்ல, மாறாக, நீங்களே பெரிய ஜாதி. ஜாதிகளுக்கு தகப்பனாய் உங்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் உயர்த்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org