உன்  உபத்திரவங்களை அறிந்த கர்த்தர் (God knows your affliction).

அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து,    ஆளோட்டிகளினிமித்தம்  அவர்கள் இடுகிற  கூக்குரலைக் கேட்டேன்,    அவர்கள் படுகிற  வேதனைகளையும்  அறிந்திருக்கிறேன் (யாத். 3:7).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/YSF9zVfpMYc

தேவன் உங்களுடைய உபத்திரவங்களையும்,    வேதனைகளையும்  அறிகிறவர்,    கூக்குரலைக்  கேட்கிறவர்.  ஒருநாள் ஆபிரகாம்  ஒரு துருத்தியில் தண்ணீரைக் கொடுத்து,    ஆகாரையும் அவன்  பிள்ளையையும் அனுப்பிவிட்டான். துருத்தியின் தண்ணீர் ஒன்றிரண்டு நாட்களில் தீர்ந்துவிட்டது. மனுஷனுடைய துருத்தியின் தண்ணீரும்,   அவனுடைய உதவிகளும்  தீர்ந்துபோய் விடும்.  தண்ணீர் தவனத்தினால்  வனாந்திரத்தில் ஆகாரும்,    பிள்ளையும் அழுதார்கள். ஆண்டவர்  பிள்ளையின் அழுகையைக் கேட்டு துரவைக் காண்பித்தார். ஆசாரியனாகிய ஏலியால் கூட அன்னாளுடைய அங்கலாய்ப்பை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் கர்த்தர் அவளுடைய வேதனையைக் கண்டு அவளுடைய விண்ணப்பத்திற்குப் பதில் கொடுத்தார்,   அதன்பின்பு  அவள் துக்கமுகமாய்  காணப்படவில்லை.  சிலவேளைகளில் நாம் ஆண்டவரைப்  பார்த்து கேள்வி கேட்கிறோம். என்னுடைய வேதனையும்,    பாடுகளையும் கர்த்தர்  அறிந்திருக்கிறாரா என்றும் கேள்வி  கேட்கிறோம். நீதிமானாகிய யோபு கூட,    நான் அவரை எங்கே  கண்டு சந்திக்கலாம்  என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்,  அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,     என் நியாயத்தை அவருக்கு முன்பாக  வரிசையாய் வைத்து,    காரியத்தை ரூபிக்கும்  வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்,    இதோ,    நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை,    பின்னாகப்போனாலும்  அவரைக் காணேன்.  இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்,    வலது புறத்திலும் நான் அவரைக்  காணாதபடிக்கு  ஒளித்திருக்கிறார் என்றான். ஆனால் ஆண்டவர் நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் அறிந்தவர்,    அவர் நம்மைக் காண்கிற தேவன் அவர்,    நாம் கடந்து செல்லுகிற  பாதையை   நன்கு அறிந்தவர்.   நீதிமானுக்கு வரும் உபத்திரவங்கள்  அனேகமாயிருந்தாலும்  அவைகள் எல்லாவற்றிலிருமிருந்து அவனைத் தப்புவிக்கிறவர். ஆகையால் தேவன் உங்கள் காரியங்களை அறிந்திருக்கிறார் என்ற திடவிசுவாசம் உங்களுக்குள் காணப்படட்டும்.

இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவரை நோக்கி  முறையிட்டார்கள். அவர்களுடைய சத்தமும்,    பெருமூச்சும் தேவனுடைய சமூகத்தில் எட்டினது. அவ் வேளையில் அவர்களை விடுவிக்கும் படிக்குக் கர்த்தர் சித்தம் கொண்டார். மோசையை அனுப்பி கர்த்தர் அவர்களை பார்வோன் கரங்களிலிருந்து விடுவித்தார். உபத்திரவப்படுகிறவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும்,    தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து,    தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருள்வார் என்று சிலுவையின் பாட்டாகிய சங்கீதம் 22:24 கூறுகிறது. ஆகையால் கர்த்தருடைய  பிள்ளைகளே,    உங்கள் சூழ்நிலைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள்.  உங்கள் உபத்திரவங்களையும்,    பாடுகளையும்,    வேதனைகளையும் கர்த்தர் மாற்றுவதற்கு வல்லமையுள்ளவர். இயேசு கூட  மாம்சத்திலிருந்த நாட்களில்,    தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி,    பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி,     வேண்டுதல்செய்தார் என்று வேதம் கூறுகிறது. ஆகையால்  அவர் உங்களுடைய கண்ணீரையும்,    வேதனையையும் நன்கு  அறிந்தவர்.  உங்கள் கண்ணீரை கணக்கில் வைத்திருக்கிறார்.  இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் கையிலிருந்து விடுவித்தவர்,     நிச்சயமாய் உங்களையும் உங்கள் எல்லா கடினமான சூழ்நிலையிலிருந்து,     வியாதியிலிருந்து,    பாடுகளிலிருந்து,    கஷ்டங்களிலிருந்து விடுவித்து  தப்புவிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar