2 கொரி 4:13. விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/DdqXSEZR3MU
ஒரு குடும்பத்திலிருந்த தாயாருக்கு வாயில் நல்ல வார்த்தையே ஒருபோதும் வராது. எப்பொழுது பார்த்தாலும் அவிசுவாசமான வார்த்தையையே பேசிக்கொண்டிருப்பார்கள். காலப்போக்கில் அந்த தாயாரின் சுபாவம் தன்னுடைய மகன்களுக்கும் வந்தது. யாராவது ஒருவர் விசுவாச வார்த்தை பேசினாலும், அதை மறுத்து அவிசுவாசமான வார்த்தையைப் பேசாவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாக இருக்காது. இதன் விளைவு அவர்களுடைய குடும்பமே சிதறடிக்கப்பட்டது. மகன்களின் வாழ்க்கை விவாகரத்தாகி அவர்களுடைய வாழ்க்கையே பாழாய்ப்போனது. விசுவாசத்தோடு பேசுவதற்கும், நேர்மறையான பேச்சுக்கும் (Positive speach) வித்தியாசம் உண்டு. என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று சொல்லவேண்டும் என்று உலகத்தார்கள் சொல்வார்கள். அது நேர்மையான பேச்சு. மறுபுறம், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்து இயேசுவால் நான் எல்லாவற்றையும் செய்வேன் என்பது விசுவாசத்தோடு பேசும் பேச்சாய் காணப்படுகிறது. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் விசுவாச வார்த்தைகளைப் பேச வேண்டும்.
லோத்தின் பிள்ளைகளுக்குள்ளாக விசுவாச ஆவி இல்லாமல் அவிசுவாச ஆவி செயல்பட்டதால், துன்மார்க்கமான சந்ததியை பெற்றெடுத்தார்கள். ஆண்டவர் சோதோம் கொமோரா போன்ற பட்டணங்களை அழித்தபின்பு, தாங்கள் திருமணம் செய்துகொள்ள வேறுபட்டணமே இல்லை என்ற அவிசுவாசம் அவர்களுக்குள்ளாக இருந்தது. ஒரு கதவு பூட்டப்பட்டால், அநேக கதவுகளை திறக்கிறவர் நம் ஆண்டவர் என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. திருமணத்திற்குக் குறிப்பிட்ட பட்டணத்தில் மாப்பிள்ளையோ இல்லை பெண்ணோ அமையவில்லையென்றால், வேறொரு பட்டணத்திலிருந்து ஏற்ற துணையைக் கர்த்தர் தருவார். ஒரு பட்டணத்தில் வேலை கிடைக்கவில்லையென்றால் வேறொரு பட்டணத்தில் நல்ல வேலையைக் கர்த்தர் தருவார். ஒரு நிறுவனத்தில் பதவி உயர்வு வரவில்லையென்றால், வேறொரு நிறுவனத்தில் கர்த்தர் நல்ல உயர்வைத் தருவார் என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆண்டவர் ஏவாளைப் படைக்கும் முன்பாகவே ஆதாமைப் படைத்தார். அவர்களை உண்டாக்குவதற்கு முன்பாகவே, அவர்களுக்கு வேண்டிய பழங்களை ஆகாரத்தை உண்டாக்கினார். அவர்கள் தங்குவதற்கு அழகான ஏதேன் தோட்டத்தை முன்பாகவே உண்டாக்கிவிட்டார். அதுபோலத் தான் உங்களுக்கு இந்த காலத்தில் இன்ன வேண்டும் என்பதை அறிந்து ஏற்கெனவே எல்லாவற்றையும் சரியாக நேர்த்தியாக உண்டாக்கிவிட்டார். இப்படியிருக்கக் கர்த்தருடைய பிள்ளைகள் ஒருபோதும் சோர்ந்துபோய் அவிசுவாச வார்த்தைகளைப் பேசுகிறவர்களாய் காணப்படலாகாது. காண்கிற சூழ்நிலைகளைப் பார்த்துப் பயந்துபோய்விடாதிருங்கள். விசுவாசத்திற்கு எதிரானது பயம். பயத்தைக் கொண்டுவருகிறவன் பொல்லாத சத்துரு. ஆகையால் உங்களுக்குள்ளாக ஒருநாளும் பயத்தின் ஆவி , அவிசுவாசத்தின் ஆவி செயல்பட இடம் கொடாதிருங்கள்.
பவுல் சொல்லுகிறான் விசுவாசித்தேன் ஆகையால் பேசுகிறேன் என்பதாக. அவனுக்குள்ளாக விசுவாச ஆவி அதிகமாய் காணப்பட்டது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் விசுவாசத்தோடு சொல்லுங்கள் எனக்கு இருக்கும் இந்த இலேசான உபத்திரவம் அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் என்பதாக. எப்பேர்ப்பட்ட உபத்திரவமாக, பாடுகளாக, பிரச்சனைகளாக இருந்தாலும், தைரியமாய் விசுவாசத்தோடு சொல்லுங்கள் இந்த உபத்திரவத்தை இயேசு என்னை விட்டு நீங்கும்படி செய்வார் என்பதாக.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org