1 கொரி 3:10. எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/misGrdYlGIs
கர்த்தர் உங்களுக்கென்று தனிப்பட்ட விதத்தில் கிருபையைக் கொடுத்திருக்கிறார். சிலருக்கு அவர் கொடுத்த கிருபையின் வரத்தின்படி பாடும் தாலந்தோ, இசைக் கருவியை வாசிக்கும் தாலந்தோ, சபையை நடத்தும் தாலந்தோ, எழுதும் தாலந்தோ, ஆராதனையை நடத்தும் தாழந்தோ, பிறருக்காக ஜெபிக்கும் தாலந்தோ, சபையின் கட்டுமான காரியங்களைப் பார்க்கும் தாலந்தோ அவர் கொடுக்கிறார். ஆகையால் கர்த்தர் உங்களுக்கு அளிக்கப்பட்ட கிருபையின்படி உங்கள் தாலந்தை கர்த்தருக்கென்று பயன்படுத்தவும், தேவனுடைய இராஜ்யத்தை கட்டவும் நீங்கள் செயல்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
சிலர் தேவன் எனக்கு என்ன கிருபையைக் கொடுத்திருக்கிறார் என்று அறியாமலே இருக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் எனக்குக் கொடுத்த தேவ கிருபை என்ன என்று அறியாமல் இருக்கிறேன் என்று சொல்வீர்களென்றால், முதலாவது தேவனுடைய பாதத்தில் அமர்ந்து உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவ கிருபையை அறிந்துகொள்ளுங்கள். பின்பு, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கிருபையின் படி தேவ இராஜ்ஜியத்தை கட்ட செயல்படுங்கள்.
இந்நாட்களில் கிருபை என்பது பாவம் செய்துவிட்டு வந்தால் மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள ஒரு கருவி என்று அநேகர் அதை ஒரு இயந்திரம் போல எண்ணிவிடுகிறார்கள். தேவனுடைய கிருபையை நாம் விருத்தாவாக்கிவிடக்கூடாது. தேவனுடைய கிருபை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அருளப்படுகிறது. பவுல் சொல்லும்போது சொல்லுகிறான் எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபை என்பதாக. அவனுக்கென்று தனிப்பட்ட விதத்தில் கர்த்தர் தேவ கிருபையை அளித்திருக்கிறார் என்பதை அவன் நன்றாய் அறிந்திருந்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட கிருபை என்னவென்றால் புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போடுவது மாத்திரமே. அஸ்திபாரத்தின் மேல் கட்டும் கிருபையைக் கர்த்தர் பவுலுக்கு கொடுக்காமல் வேறொருவருக்குக் கொடுத்திருந்தார். பவுல் நட்டான், அப்பொல்லோ நீர்பாய்ச்சினான் என்று வசனம் சொல்லுகிறது. பவுல் அவனுக்கு அளிக்கப்பட்ட கிருபையின்படியே அவன் வேலை செய்கிறவனாகக் காணப்பட்டான்.
இயேசுவின் தாயாகிய மரியாளுக்குக் கிடைத்த கிருபை அவளை ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவளாக மாற்றியது. ஆயக்காரனுக்குக் கிடைத்த கிருபை அவனை நீதிமானாக்கி உயர்த்தியது. அப்போஸ்தலர்களின் மேல் பூரண கிருபை இருந்ததால், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள். பர்னபா தேவனுடைய கிருபையைக் கண்டபோது எல்லாருக்கும் புத்தி சொல்லுகிறவனாய் காணப்பட்டான். கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக பவுல் மூலமாகக் கர்த்தர் இக்கோனியா பட்டணத்தில் அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார். அப்பொல்லோ என்பவன் பெற்றுக்கொண்ட கிருபையினிமித்தம், அவன் விசுவாசியானவர்களுக்கு உதவியாக இருந்தான்.
இப்படி ஒவ்வொருவருக்கும் கிருபையை வெவேறு விதத்தில் கர்த்தர் கொடுக்கிறார். உங்களுக்கும் தேவ கிருபை அருளப்பட்டிருக்கிறது. அதைக் கிருபையை அறிந்து, தேவனுக்காகச் செயல்படுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org