ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை, இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப் போனாய் (ஏசாயா 43:22).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/VY-QUnLTuEI
கர்த்தரைப் பின்பற்றுவதைக் குறித்த மனஞ்சலிப்பு, அனேக கிறிஸ்தவர்களிடம் இந்நாட்களில் அதிகமாகக் காணப்படுகிறது. ஆலயங்களுக்குச் செல்லுவதிலும், பரிசுத்தவான்களோடு ஐக்கியம் கொள்ளுவதிலும் சோர்வு காணப்படுகிறது, ஜெபிக்க வேண்டும், ஜெபக் கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வமில்லை. வேதவார்த்தைகளை வாசிப்பதையும், தியானிப்பதையும் பாரமாகக் கருதுகிறார்கள். ஊழியங்கள் செய்வதிலும் உற்சாகமின்மைக் காணப்படுகிறது, ஆகையால் கடமைக்காக, வெறுப்போடு ஊழியம் செய்பவர்கள் உண்டு. ஆராதனைகளுக்கு நேரத்திற்கு வரவேண்டும் என்பதிலும் வாஞ்சையில்லை. இதே நிலையில் யாக்கோபின் சந்ததியாகிய இஸ்ரவேல் ஜனங்கள் காணப்பட்ட போது, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய் என்று ஆண்டவர் வேதனையோடு கூறினார்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆண்டவர் செய்த மேன்மையான ஆசீர்வாதங்களை அதே அதிகாரத்தில் பட்டியலிட்டு காண்பித்தார். உன்னைச் சிருஷ்டித்தவரும், உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் நீ பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப்பேர் சொல்லி அழைத்தேன், நீ என்னுடையவன் என்று தெரிந்து கொள்ளுதலின் மேன்மையைக் குறித்து வெளிப்படுத்தினார். அவர்களைப் போலவே ஊரில் ஒருவனாய், வம்சத்தில் இரண்டு பேராய் கர்த்தர் நம்மைத் தெரிந்தெடுத்து, அவருடையவராக்கினார் என்பதைக் கர்த்தருடைய ஜனங்கள் நினைவில் கொள்ளவேண்டும். நம்மை விட நல்லவர்கள் கோடிக்கணக்கில் காணப்பட்டிருந்தும், நம்மை அவருக்காகத் தெரிந்தெடுத்தாரே அதைப் பாக்கியமாகக் கருதவேண்டும். இஸ்ரவேல் ஜனங்களுடைய சோதனையான வேளைகளில் கர்த்தர் அவர்களோடிருந்து, நீ தண்ணீர்களைக் கடக்கும்போதும், ஆறுகளைக் கடக்கும்போதும், அக்கினியில் நடக்கும்போதும், நான் உன்னோடு இருப்பேன், தண்ணீர் உன்மேல் புரளுவதில்லை, அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது என்று வாக்களித்து, அப்படியே அவர்களைப் பாதுகாத்து நடத்தினார். அதுபோல, நாமும் பலவிதமான சோதனைகளிலும், வேதனைகளிலும், பாடுகளிலும் கடந்து சென்ற வேளைகளில் நம்முடனிருந்து சோதனைகள் நம்மை மேற்கொள்ளாதபடிக்கு பாதுகாத்து தப்புவித்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக எழும்பின இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் ஒருமித்து விழுந்து கிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும் செய்தார். அதுபோல நம்மை மேற்கொள்ளும்படிக்கு பலமுறை வந்த சத்துருக்களை ஒரு திரியைப் போல் அணைத்துப் போட்டுத் தேடியும் காணாதிருக்கும் படிக்குச் செய்த தேவன் அவர். இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் இவ்விதமாக அனேக நன்மைகளைச் செய்து, இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஆண்டவரிடம் காணப்பட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்த ஒவ்வொரு காரியங்களிலும், அவர் அளித்த அத்தனை ஆசீர்வாதங்களிலும் அவருடைய எதிர்பார்ப்பும் காணப்படுகிறது என்பதை மறந்து விடாதிருங்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள், அவரை நோக்கிக் கூப்பிடவில்லை, அவரைக் குறித்து மனஞ்சலித்துப்போனார்கள் என்று ஆண்டவர் வேதனைப்பட்டார். அவர்களுடைய மனஞ்சலிப்பை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதைக் குறித்து கர்த்தர் கூறும் போது, உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை, உன் பலிகளாலே நீ என்னைக் கனம் பண்ணவுமில்லை என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் ஏற்றெடுக்கிற ஒவ்வொரு துதியும் ஸ்தோத்திரமும் பலியாய் காணப்படுகிறது. கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி என்று சொல்லுவதும் பலிசெலுத்துவது என்பதை மறந்து போகாதிருங்கள். நாம் செலுத்தும் காணிக்கைகள் பலியாகக் காணப்படுகிறது. நம்மை ஜீவபலியாக அர்ப்பணித்துச் செய்யும் ஆராதனைகளும் பலியாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்ட பலிகளைச் செலுத்துவதில் தோய்வுகள் வரும் போதும், நாம் கர்த்தரைத் தேடுவதில் சோர்வுகள் வரும் போதும், கர்த்தரைக் குறித்து மனஞ்சலித்துப் போன இஸ்ரவேல் ஜனங்களைப் போலக் காணப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால் உற்சாகமாய் கர்த்தரைச் சேவியுங்கள், வாஞ்சையோடு அவருடைய சமூகத்தில் கூடிவாருங்கள், கர்த்தரிடத்தில் வைத்த அன்பில் அனுதினமும் வளர்ந்து பெருகுங்கள்!
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar