என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே, அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை, அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள், குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள், ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள் (உன். 6:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RZ8hb1CJc-E
சாலொமோன் மூவாயிரம் நீதிமொழிகளையும், ஆயிரத்து ஐந்து பாடல்களையும் எழுதினான். அந்தப் பாடல்களில் சிலபாடல்கள் தான் உன்னதப்பாட்டாய் காணப்படுகிறது. மணவாளனாகிய இயேசு மணவாட்டி சபையை உத்தமி என்று அழைப்பதைப் பார்க்கமுடிகிறது. சபை என்பது வெறும் கட்டிடமல்ல, அது சபை மக்களை, விசுவாசிகளை, உங்களைக் குறிக்கிறது. ஆண்டவருடைய பார்வையில் மணவாட்டி விலையேறப்பெற்றவள். ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு, கன்னியருக்குத் தொகையில்லை, ஆனாலும் என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தி என்று ஆண்டவர் கூறுவதிலிருந்து கிறிஸ்துவின் மணவாட்டியாகிய உங்களை, மற்றவர்களைவிட உயர்வாகவும், விஷேசித்தவர்களாகவும் கர்த்தர் பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிறவள் என்று ஆண்டவர் உங்கள் அழகை குறித்து கூறுகிறார். உங்களை சம்பாதிக்கும்படிக்கு கர்த்தர் தன் இரத்தத்தைச் சிலுவையில் ஊற்றிக் கொடுத்தார், நீங்கள் கிரயத்திற்குக் கொள்ளப்பட்ட கர்த்தருடைய யௌவன ஜனம். இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? என்று வேதம் உங்களைக் குறித்துக் கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் தான் பூமியில் கர்த்தருடைய ஸ்தானாதிபதிகள். கிறிஸ்துவின் வாசனையை வீசவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காய் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். பூமியில் தேவனுடைய ராஜ்யம் சபை, அந்த ராஜ்யத்தின் பிரதிநிதிகளாகிய நீங்கள் ஆளுகை செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நீங்கள் பாவத்தின் கிரியைகளைத் தடைசெய்து ஜீவிக்க வேண்டும் என்ற கர்த்தர் உங்களைக் குறித்து எதிர்பார்க்கிறார். பிசாசையும் அவன் கிரியைகளையும் மிதித்து, ஜீவிக்க அழைக்கப்பட்டவர்கள், சர்ப்பங்களையும் தேள்களையும் நீங்கள் மிதிப்பீர்கள் என்று கர்த்தர் கூறினார். கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும், எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள், திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து, நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள், ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். சபையும், அதின் மக்களும் மலைமேலிருக்கிற பட்டணமாய், விளக்குத் தண்டின் மேலிருக்கும் விளக்காய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
காலப்போக்கில் சபை, தேவஜனங்கள் தங்கள் சாரத்தை இழந்து போனார்கள். உப்பு தன் சாரத்தை இழந்து போனால் வெளியே கொட்டப்படுவதற்கும், காலால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி வேறொன்றிற்கும் உதவாது. அந்த நிலையில் நான் சபை இந்நாட்களில் காணப்படுகிறது. சீயோனின் சபையாய் கறைதிரை ஒன்றுமில்லாமல், கற்புள்ள கன்னிகையாய், கிறிஸ்து என்னும் ஒரேபுருஷனுக்காய் நியமிக்கப்பட்டவளாய் காணப்படுவதற்குப் பதிலாக பாபிலோனியச் சபைகளாய், பாவத்தினால் கறைபட்டுப் போன் நிலையில் சபை காணப்படுகிறது. உலகத்தின் பழக்கவழக்கங்கள் சபைக்குள் வந்துவிட்டது. அனேகர் அரசியல் செய்வதற்காகவே சபைக்குப் போகிறார்கள். பவுல் பிலிப்பிய சபை மக்களுக்கு நிருபத்தை எழுதும் போது, அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள், அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் என்று எழுதினார். இந்நாட்களிலும் சிலுவைக்குப் பகைஞராய் காணப்படுகிற விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளுகிற சிலரால் சபை தன் மதிப்பை இழந்து நிற்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, தேவனுடைய ஆதீனத்தில் சபை விலையேறப் பெற்றது, நீங்கள் விலையேறப் பெற்றவர்கள். அந்த அந்தஸ்தோடு நீங்கள் ஜீவிக்கும் போது, கர்த்தருடைய வருகையின் எக்காள சத்தம் தொனிக்கும் போது, நீங்கள் அவரோடு எந்நாளும் காணப்பட, மகிமையில் எடுத்துக் கொள்ளப் படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar