மனுஷர்மேல்  விழுந்த கடமை (Duty fell upon men)

காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக,   தேவனுக்குப் பயந்து,   அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே (பிரசங்கி 12:13).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LVupmcda0H4

சாலொமோன் ஞானி தேவனுக்குப் பயப்படுதலை மனுஷர் மேல் விழுந்த கடமையென்று கூறுகிறார். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து,    பிரசங்கி புத்தகத்தை எழுதி முடிக்கும் போது,   எல்லாவற்றிற்கும் முடிவுரையாகத் தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்,   இது எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை என்று எழுதுகிறார். நாம் ஆராதிக்கிற தேவன் பயப்படத்தக்கவர்,   அவர் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில்  மிகவும் பயப்படத்தக்கவர்,   தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.  கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள புயத்தினால் செங்கடலைப் பிளந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தின வேளையில்,   மோசே ஆண்டவரைப் பார்த்து,   கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார் என்றும்,   நீர் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர்,   துதிகளில் பயப்படத்தக்கவர் என்றும் கூறினார். அதுபோல சீனாய் மலையில்,   தேவன் இறங்கி வந்த வேளையில்; இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய வல்லமையின் பராக்கிரமத்தைக் கண்டு பயந்து நடுங்கினார்கள் என்று வேதத்தின் மூலம் அறியமுடிகிறது. கர்த்தருடைய மகிமையையும்,   பராக்கிரமத்தையும்,   வல்லமையையும் அறிந்த அவருடைய ஜனங்கள் அவருக்குப் பயந்து ஜீவிக்க நம்மை முழுவதும் அர்ப்பணிக்கவேண்டும். 

கர்த்தருக்குப் பயந்து ஜீவிப்பது என்பது என்ன? ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து,   தன் குமாரனாகிய ஈசாக்கை அழைத்துக்கொண்டு,   அவனை பலிசெலுத்த மோரியா மலைக்குப் போன வேளையில்,   கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து நீ எனக்குப் பயப்படுகிறவன் என்பதை இப்போது அறிந்திருக்கிறேன் என்றார். நாமும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கும் போது,   அவருக்குப் பயப்படுகிறவர்களாய் காணப்படுகிறோம். அதுபோல தீமையை விட்டு விலகுவது கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் என்று வேதம் கூறுகிறது (நீதி. 8:13). ஆகையால்  பொல்லாங்காய் தோன்றுகிற எல்லாக் காரியங்களையும் விட்டு விலகுங்கள். ஒருவனுக்கும் தீமைக்கு தீமை செய்யாதிருங்கள். உலகம் பொல்லாங்கனுக்குள் காணப்பட்டாலும்,   நம்மைச் சுற்றிக் காணப்படுகிற ஜனங்களின் இருதயத்தின் நினைவுகள் நித்தமும் பொல்லாததாய் காணப்பட்டாலும்,   கர்த்தருடைய ஜனங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும்,   பொல்லாப்பாய் தோன்றுகிற எல்லாக் காரியங்களையும் விட்டு விலகி ஜீவிக்க வேண்டும். பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு பூரணப்படுத்த வேண்டும் என்று வேதம் கூறுகிறது,   ஆகத் தேவனுக்குப் பயப்படுகிறவன் பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறவனாய் காணப்படுவான். யோசேப்பு தேவனுக்குப் பயந்ததினால்,   போத்திபாரின் மனைவி பாவம் செய்யத் தூண்டின வேளையிலும்,   அந்த இடத்தைவிட்டு விலகியோடினான். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து,   நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து,   அவர் வழிகளிலெல்லாம் நடந்து,   அவரிடத்தில் அன்புகூர்ந்து,   உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,    நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல்,   வேறெ எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளே,   கர்த்தருக்குப் பயந்த ஜீவியம் செய்வதைத் தவிர வேறொன்றையும் கர்த்தர் உங்களிடத்தில் கேட்கவில்லை என்பதை உணர்ந்து அவருக்குப் பயந்த ஜீவியம் செய்யப் பூரணமாய் உங்களை ஒப்புக்கொடுங்கள்.

கர்த்தருக்குப் பயந்து,   அவருடைய வழிகளில் நடக்கும் போது,   அவர் உங்களைப் பாக்கியவான்களாய் மாற்றுவார். உங்கள் கைகளின் பிரயாசத்தைச் சாப்பிடும் படிக்குச் செய்வார்,   உங்கள் குடும்பத்தையும்,   பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பார்.  கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை என்று வேதம் கூறுகிறது. அவருடைய தூதர்கள் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையம் இறங்கி அவர்களை விடுவிக்கிறார்கள். கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயசு நாட்களைப் பெருகப்பண்ணும்,   அவனுக்கு தன் வழிகளைக் கர்த்தர் போதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar