உபா 7:13. உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/GK7FpQ_3jEI
பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். இயேசு நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்று சொன்னார். மாத்திரமல்ல வசனம் சொல்லுகிறது நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோம 5:7,8) என்பதாக. நாம் பாவியாயிருக்கையில், தேவன் நம் மீது அன்பு வைத்தார். அன்பு வைத்தது மாத்திரமல்ல, அவர் நம்மை ஆசீர்வதிக்கிறவராய் காணப்படுகிறார். என்னென்ன விதத்தில் ஆசிர்வதிப்பாரென்றால்:
முதலாவது, கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணுவார். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்குச் செல்லும்போது வெறும் 75 பேராய் கடந்து சென்றார்கள். சிறுகூட்டமாக தான் அவர்கள் அந்த தேசத்திற்குக் கடந்து சென்றார்கள். ஆனால் அவர்கள் திரும்ப வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானைச் சுதந்தரிக்க வரும்போது கர்த்தர் அவர்களை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகபண்ணியிருந்தார். அதுபோல உங்களையும் பெருகப்பண்ணுவார். உங்கள் வாழ்க்கையில் எல்லா காரியங்களிலும் கர்த்தர் பெருக்கத்தைக் கட்டளையிடுவார்.
இரண்டாவதாக, உங்கள் கர்ப்பக்கனியை கர்த்தர் ஆசீர்வதிப்பார். உங்கள் பிள்ளைகள் ஒலிவமரக்கன்றுகளாய் உங்கள் பந்தியைச் சுற்றிலும் இருப்பார்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீர்கள். பிள்ளைகள் சமாதான கூடாரங்களில் வாசம்பண்ணுவதையும், உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதையும் உங்கள் கண்கள் காணும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பத்திரமாகக் கர்த்தருடைய கரத்தில் இருக்கும். உங்கள் பிள்ளைகள் உலகத்தால் கறைபடாமல், கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்காக நியமிக்கப்பட்ட கன்னிகைகளாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
மூன்றாவதாக, உங்கள் நிலத்தின் கனிகளைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார். நீங்கள் கையிடும் வேலையைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார். யோசேப்பு கையிட்டு செய்த எல்லா வேலையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். உங்கள் வேலையில், தொழிலில் யூகித்துச் செய்யும் ஞானத்தையும் அறிவையும் கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பார். யாக்கோபின் ஆட்டு மந்தையைப் பெருக்கி ஆசீர்வதித்தவர் உங்கள் தொழிலையும், உங்கள் வேலையையும் பெருக்கி ஆசீர்வதிப்பார்.
இப்படியாகக் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். சாதாரணமாக அல்ல, உங்கள் மீது அன்பு வைத்து ஆசீர்வதிப்பார். இளைய குமாரன் தன் தகப்பனிடம் திரும்பி வந்த போது எப்படி அன்பு கூர்ந்து, அவனுக்குக் கொடுக்க வேண்டியவைகளை கொடுத்தானோ, அதுபோல, கர்த்தர் உங்கள் மீது அன்பு வைத்து உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org