உபாக 10:1. அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/civkkCETxi4
கொடைக்கானல் ஊட்டி போன்ற மலைகளில் பெரிய பெரிய பர்வதங்கள் போன்ற சுற்றுலா தளங்கள் காணப்படும். அவற்றில் மேலே நடந்து செல்ல கடினமாக தான் இருக்கும். ஆனால் மேலே ஏறிச்சென்ற பிறகு அங்கிருந்து இயற்கை வளங்களை பார்க்கும்போது மிகவும் அருமையான காட்சியாக இருக்கும்; அதை பார்க்கும்போது நம்முடைய உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
சோதோம் கொமோரா பட்டணங்களின் செழிப்பும், இச்சையும் லோத்தை பிடித்திருந்தது. கர்த்தருடைய தூதன் அவனை பார்த்து நீயும் உன் குடும்பமும் உன் ஜீவன் தப்ப நான் காண்பிக்கும் மலைக்கு ஓடிப்போங்கள் என்று சொல்லுவார். ஆனால் லோத்தோ அந்த மலை வேண்டாம் நாங்கள் காண்கிற அந்த சிறிய பட்டணத்தில் தங்கும்படி எங்களை அனுமதிக்கும்படி செய்யும் என்று சொல்லுவான். என்னால் மலை ஏறமுடியாது, எனக்கு வயதாகிவிட்டது, மலையில் ஏறுவது என்பது கடினம், அதுவும் என் குடும்பத்தோடு மலையேறுவது என்பது கடினம், எங்கள் கால்கள் வலிக்கும், நாங்கள் சோர்ந்துபோய் விடுவோம் என்று நொண்டி சாக்குப்போக்கை சொல்லுகிறவனாய் காணப்பட்டான். இதினிமித்தம் சோவார் என்ற பட்டணத்தில் அவன் தங்கினான். சோவார் என்றால் சமபூமி என்று அர்த்தம். மலையை சுதந்தரிப்பதை காட்டிலும் சமபூமியை சுதந்தரிப்பது இலேசானது. மலையில் அநேக நாட்கள் வாழ்வதை காட்டிலும், சமபூமியில் வாழ்வது இலேசானது. இப்படித்தான் கர்த்தருடைய பணிகளை நாம் கடினம் என்று சொல்லி சாக்குபோக்குகளை சொல்லுகிறவர்களாய் அநேக வேளைகளில் நாம் காணப்படுகிறோம்.
ஆனால் காலேப் அவனுடைய முதிர்வயதிலும் எனக்கு அந்த மலைநாட்டை தாரும் என்று சொல்லி அதை சுதந்தரித்துக்கொள்ளுவான். இயேசு தன் ஊழியத்தை மலையில் தான் ஆரம்பித்தார். அவருடைய மலை பிரசங்கம் மிகவும் பிரதானமானது என்று இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியடிகளே கூறியிருக்கிறார். இயேசு தன் ஜீவனை விட்டதும் கொல்கதா என்னும் மலையில் தான். தன்னுடைய சிலுவையை மலையை நோக்கி தான் சுமந்து கொண்டு சென்றார். நாமும் நம்முடைய ஜீவன் தப்ப கொல்கதா மலைக்கு நேராக கடந்து செல்லவேண்டும். நம்முடைய சிலுவையை அனுதினமும் சுமக்கிறவர்களாக காணப்பட வேண்டும். இயேசு மீண்டும் இந்த உலகத்திற்கு வரும்போதும் அவருடைய பாதங்கள் ஒலிவ மலையில் தான் வந்து இறங்கும்.
ஆகையால், கர்த்தர் உங்களை மலையில் ஏறும் அனுபவத்திற்குள்ளாக வரும்படி சொல்லுகிறார். மோசேக்கு நியாப்பிரமானத்தை அவன் மலையில் ஏறிச்சென்றபோது தான் கொடுத்தார். அதுபோல நீங்கள் உங்கள் ஜெபங்களில், ஊழியம் செய்வதில் எல்லாவற்றிலும் கடினம் என்று சமபூமியில் தங்கிவிடாதிருங்கள். மலையில் ஏறிச்செல்லும் அனுபவத்திற்குள்ளாக கடந்து செல்லும்போது, கர்த்தர் உங்களுக்கு அநேக வெளிப்பாடுகளை கொடுத்து, தேசத்திற்கு ஆசீர்வாதமாக வைப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org