உபா 32:2. மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ZVZTjBn3syY
கடினமாக உழைத்து, முதலீடு செய்து, பயிர்களை தங்கள் நிலத்தில் பயிரிட்டு, உழுத பின்பு விவசாயி மழைக்காக காத்திருப்பான். ஒருவேளை மழை பெய்யாமல் இருந்தால், அந்த நிலம் ஒன்றுக்கும் உதவாமலோ இல்லை எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சலோ இல்லாமல் போகும். ஏற்ற காலத்தில் மழை பெய்யுமே என்றால் விவசாயியின் உள்ளம் மகிழும். இந்த வசனத்தில் குறிப்பிட்ட மழை என்பது கர்த்தருடைய உபதேசம்; இளம்பயிர் என்பது தேசத்து ஜனங்கள். இந்நாட்களில் இளம்பயிர்களுக்கு அதாவது தேசத்து ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க பல தடைகள் கட்டுப்பாடுகள் தேசமெங்கும் இருக்கிறதை நாம் பார்க்கிறோம். இருந்தாலும் ஆவியானவர் தேசத்து ஜனங்கள் மீது மழையாய் பொழிவதை ஒருவராலும் தடுக்க முடியாது. கர்த்தருடைய உபதேசம் மழையாய் தேசத்து ஜனங்கள் மேல் இறங்கும். அப்பொழுது தேசத்து ஜனங்களும் தேசமும் ஆசிர்வதிக்கப்படும்; வறட்சி மாறி பசுமை உண்டாகும். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் பின்மாறி மழைக்காக வேண்டிக்கொள்ள வேண்டும். நம்முடைய தேசத்தில் கர்த்தர் மழையாய் பொழிய வேண்டும்.
அதுபோல, பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, கர்த்தருடைய வசனம் இறங்கும். பனித்துளிகள் என்பது கர்த்தருடைய வசனம். புல் என்பது கர்த்தருடைய சபை. தாவீது சொல்கிறான் கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது (2 சாமு 23:2) என்பதாக. கர்த்தருடைய வசனம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவ பிள்ளைகளின் நாவில் இருக்க வேண்டும். ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி (சங் 68:11). வசனத்தை கர்த்தர் உங்களுக்கு கொடுக்கும்போது அதை பிரசித்தம் பண்ணுகிற ஜனங்களாய் நீங்கள் காணப்பட வேண்டும். இந்நாட்களில் தேவையில்லாத காரியங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை காட்டிலும், கர்த்தருடைய வசனத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மற்றவர்களை குறைகூறி கொண்டும், அரசியல்வாதிகள் செய்யும் தவறை மீம்ஸ் மூலம் சுட்டிக்காட்டுவதையும் தவிர்த்து, வசனத்தை ஜனங்களுக்கு கொண்டு செல்லுங்கள். அந்த வசனம் பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவது போல, ஜனங்களின் மேல் இறங்கும். ஒரு அரசியல்வாதி சொன்னார், வேத வசனத்தில் உயிரோட்டம் காணப்படுகிறது. வேறெந்த புஸ்தகத்திலும், எழுத்திலும் உயிரோட்டம் இல்லை. ஆனால் வேத புஸ்தகத்தில் ஜீவன் இருக்கிறது என்பதாக.
வேத வசனம் ஒருவன் மீது இறங்குமென்றால், அது அவனை புடமிடும், பரிசுத்தமாகும், நீதிமானாக்கும், நடத்தும், இயேசுவை காணும்படி செய்யும். எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் வல்லமை வேத வசனத்திற்கு காணப்படுகிறது. ஆகையால் நம்முடைய தேசங்களில், ஜனங்களின் மீது, சபை மக்கள் மீது கர்த்தருடைய உபதேசம் மழையாய் பொழியும்படியாகவும், கர்த்தருடைய வசனம் பனித்துளிகளாய் இறங்கும்படியாகவும் ஜெபிப்போம். நம்முடைய தேசத்தை வளமிக்க நாடாக மாற்றுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org