ஏசாயா 14:24. நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0pSbpAya5fc
ஏசாயா 14: 1 முதல் 24 வசனங்களில் அற்புதமான தீர்க்கதரிசனம் அடங்கியிருக்கிறது. கர்த்தர் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு செய்யப்போகும் நன்மையையும், சாத்தானின் (பாபிலோனியரின்) விழுகையையும் குறித்து தீர்க்கதரிசி தெளிவாக கூறுகிறார். பாபிலோனை சாத்தானுக்கும் அவனுடைய கூட்டத்திற்கும் ஒப்பிட்டு பார்க்கும்போது இவ்வசனங்களை நன்கு புரிந்துகொள்ளமுடியும். அதுமட்டுமல்ல, இன்றைய நாட்களில் நம் கண்களால் பார்ப்பதையும் மேற்கண்ட வசனங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது, கர்த்தர் சாத்தானால் ஏவப்படும் ஒவொருவருக்கும் வைத்திருக்கும் முடிவையும் அறிந்துக்கொள்ள முடியும்.
உலக தலைவர்கள் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, சாத்தான் தந்திரமாக அவர்களை கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய பிள்ளைகளுக்கு விரோதமாகவும் பயன்படுத்துவதைப் பார்க்கமுடியும். அதாவது, அவர்கள் இயற்றும் சட்டம் கர்த்தருக்கும் வேதத்திற்கும் முரணாக இருப்பதைப் பார்க்க முடியும். ஆதியிலே மனுஷனை சிருஷ்டித்த தேவன், நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்று ஆசீர்வதித்தார் (ஆதி 1: 28). நம்முடைய முற்பிதாக்களை ஆசிர்வதிக்கும்போது, உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போல் இருக்கும் என்கிறார் (ஆதி 15:5). ஆனால் கருவிலே குழந்தைகளை அழிப்பது தவறில்லை என சில நாடுகள் கூறுகிறது. இவ்விதமான சட்டம் தங்கள் தேசத்து ஜனங்களை கவர்வதாக இருந்தாலும், இது கற்பனைக்கும் கர்த்தருடைய வார்த்தைக்கும் முரணானது. ஜனங்களை பிரியப்படுத்தும் இச்செயல்களுக்கு பின்னால் சாத்தான் இருக்கிறான் என்பதை நாம் மறந்துபோகக்கூடாது.
முழு இஸ்ரவேல் ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள். ஆதலால் கர்த்தர் அவர்களை சிட்சிக்கும் படியாக அந்நியர்களின் கையில் ஒப்பு கொடுக்கிறார்.
மனதுருக்கமுள்ள தேவன், தம்முடைய வாக்குத்தத்தை நினைவுகூர்ந்து தம்முடைய உண்மையினிமித்தம் இஸ்ரவேலுக்கு இரங்கினார். (a) “கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவேன்” என்றும் (b) அவர்கள் தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள். என்றும், (c) கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணுவேன்” (ஏசா 14:1-3) என்றும் தம்முடைய பிள்ளைகளுக்கு தீர்க்கதரிசிகள் மூலம் வாக்குப்பண்ணினார். அப்படியே நடந்தது! இக்காலத்திலும் நடக்கப்போகிறது!!
தேவ ஜனமே, நம்மை சுற்றிலும் நடக்கும் சத்ருவின் கிரியைகளுக்கு முடிவு வந்துவிட்டது. இதோ, நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக்கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார் (எரேமியா 12:14) ; கர்த்தர் உங்கள் எதிரிகளை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கும் இந்நாட்களிலே, உங்களுடைய துக்கம், தத்தளிப்பு, கடினமான அடிமைத்தனம் மாறி, நீங்கள் இளைப்பாறுதலில் பிரவேசிக்கப் போகிறீர்கள். பூமிமுழுதும் கர்த்தருக்குள் இளைப்பாறி, கெம்பீரமாய் முழங்கப் போகிறது.
ஆம் கர்த்தர் நினைத்திருக்கிறபடியே நடக்கும்! கர்த்தர் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்!! மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் நடந்து செல்லுங்கள்.கர்த்தரின் வாக்குத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
மீண்டும் சத்துரு எழும்பி உன் சுதந்திரத்தைத் தொடாதபடி, அவனை முற்றிலுமாக சங்காரம் பண்ணிவிடுங்கள். ஏனென்றால் கர்த்தரின் வருகை மட்டும் சத்துரு தலை தூக்க முயலுவான் ஆனால் நீயோ இயேசுவின் நாமத்தில் முன்னேறிச்செல். ஜெயம் கார்தருடையது.
Bro. John Finny
Word of God Church
Doha – Qatar
www.wogim.org