சகலமும் பரிபூரணமாயிருக்கையில் உன் தேவனைச் சேவி.

சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்…. (உபா. 28:47).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/nQ3m5HYDOLA

கர்த்தருடைய சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுக்கும் போது,  அவர் கொடுக்கிற ஆசீர்வாதங்களும்,  அவருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் போனால் வருகிற சாபங்களைக் குறித்தும் உபாகமம் 28ல் எழுதப்பட்டிருக்கிறது. அதே வேளையில்,  சகலமும் பரிபூரணமாயிருக்கையில்,  மனமகிழ்ச்சியோடும் களிப்போடும்  தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற் போனாலும் நாம் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. கர்த்தருடைய ஜனங்கள்,  பல்வேறு உபத்திரவங்களையும்,  பாடுகளையும் சந்திக்கும் போது ஆண்டவரை நெருங்குவதும்,  சகலமும் நன்மையும் செம்மையுமாய் காணப்படும் போது அவரை விட்டு விலகுவதையும்,  உற்சாகமாய் அவரை சேவியாமல் இருப்பதையும்; வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் நன்கு வாழ்ந்திருக்கும் போது கர்த்தரை உத்தம இருதயத்தோடு சேவிப்பது தான்,  நம்முடைய குறைச்சல்களிலும்,  தாழ்விலும்,  பலகீன நேரங்களிலும் ஆண்டவருடைய உதவியைப் பெற்றுக் கொள்ளுகிற வழியாய் காணப்படுகிறது.

தாவீது,  சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாகக் காணப்பட்ட வேளையிலும்,  அவனுடைய வாஞ்சையெல்லாம் கர்த்தருடைய ஆலயமாகக் காணப்பட்டது. ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று யாராகிலும் சொன்னால் அவனுக்குள்ளாகக் குதுகலமும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும்,  கர்த்தருடைய ஆலயத்தின் வாசல்படியில் காத்திருப்பதே அவனுடைய வாஞ்சையாக இருந்தது. வசனத்தைக் கைக்கொள்ளாதவர்களைக் கண்டால் அவனுக்குக் கண்ணீர் வந்துவிடும். வேதமே அவனுடைய மனமகிழ்ச்சியாகக் காணப்பட்டது. கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டில் அவன் வாசம் செய்யும் போது,  கர்த்தருடைய பெட்டி திரைச்சீலைகளுக்குப் பின்னால் காணப்பட்டதைக் கண்டு, அவனுடைய இருதயம் அவனை வாதித்தது. கர்த்தருக்காக ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற வாஞ்சையுடையவனாகக் காணப்பட்டான். ஆகையால் தாவீதோடு கர்த்தர் இருந்தார். தாவீதின் எதிரிகளைக் கர்த்தர் அவனுக்கு கீழ்ப்படுத்தினார். தாவீது தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து,  தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டான் என்று வேதம் கூறுகிறது. தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்,  எனக்கு சித்தமானவற்றையெல்லாம் அவன் செய்தான் என்று கர்த்தரும் சாட்சி கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே,  எல்லாம் பரிபூரணமாய் காணப்படும் போது கர்த்தரைத் தேடுங்கள். தாவீதைப் போலக் கர்த்தர் உங்களை இம்மையிலும் மறுமையிலும் செம்மையாய் நடத்துவார்.

தாவீதின் குமாரனாகிய சாலொமோனுடைய நாட்களிலும் தேசம் எங்கும் சமாதானம் காணப்பட்டது. யுத்தங்கள் இல்லாமல் அமைதியும் செழிப்பும் எங்கும் காணப்பட்டது. அவனுடைய கீர்த்தி தேசங்கள் எல்லாம் பரம்பியிருந்தது. சேபாவின் ராஜஸ்திரீ அவனைக் குறித்து கேள்விப்பட்ட உடன்,  விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,  மிகுந்த பரிவாரத்தோடும்,  கந்தவர்க்கங்களையும்,  மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும்,  எருசலேமுக்கு வந்தாள்,  அவள் சாலொமோனிடத்தில் வந்து,  தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். அவள் கேட்டவற்றையெல்லாம் விடுவித்தான்,  அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு,  ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. கர்த்தர் அவனை ஞானத்தினால் நிறைத்திருந்தார். ஒரு நாள் அவனுடைய பந்தியின் செலவு அவனுடைய ஐசுவரியத்தின் மிகுதியை வெளிப்படுத்துகிறது. அவனுடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாகவே எண்ணப்படவில்லை.  ஆனால் அவனுக்கு சகலமும் பரிபூரணமாயிருந்த வேளையில் மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவில்லை. துவக்கத்தில் கர்த்தா பேரில் கொண்ட அன்பை விட்டான். புறஜாதி ஸ்திரீகளைத் திரளாய் விவாகம் செய்து,  அவர்களுடைய தெய்வங்களை ஆராதித்தான்,  ஆகையால் கர்த்தர் அவனைக் கைவிட்டு,  அவனுடைய ராஜ்யத்தில் பிரிவினை உண்டாக்கினார். இஸ்ரவேல் தேசத்தின் வீழ்ச்சிக்கு முதல் காரணமானான். ஆகையால் நீங்கள் வாழ்ந்திருக்கும் போது கர்த்தரை உண்மை மனதுடன் சேவியுங்கள்,  கர்த்தரை கனம் பண்ணுங்கள்,  சுஅவருடைய சமூகத்தை நாடுங்கள். அப்போது,  உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் உங்களோடு கூட இருந்து நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar