வேதம் அருளப்பட்டதின் நோக்கம்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது, தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும்,  எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,  அவைகள் உபதேசத்துக்கும்,  கடிந்துகொள்ளுதலுக்கும்,  சீர்திருத்தலுக்கும்,  நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது  (2 தீமோத். 3:16,17).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/61adXzr3KC0

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி,  ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்,  அவன் ஜீவாத்துமானான் என்று மனுஷனுடைய சிருஷ்டிப்பைக் குறித்து வேதம் கூறுகிறது.  அது போலக் கர்த்தருடைய வேதமும் அவருடைய சுவாசத்தினால் அருளப்பட்டது(God-breathed) என்று  மேற்குறிப்பிடப்பட்ட  வசனத்தின் மூலபதம் கூறுகிறது.  இயேசுவும் சீஷர்கள் மேல் அதே சுவாசத்தை ஊதி,  பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார் (யோவான் 20:22). அப்படி பரிசுத்த ஆவியைப் பெற்ற தேவனுடைய மனுஷர்கள் அவரால் ஏவப்பட்டு எழுதினவை தான் தேவனுடைய வார்த்தையாகக் காணப்படுகிறது. உலகத்தில் காணப்படுகிற மற்ற புஸ்தகங்கள் தகவல்களைக் கொடுக்கலாம்,  ஆனால் தேவனுடைய வார்த்தைக்குள் மாத்திரம் அவருடைய சுவாசம் காணப்படுகிறது,  ஆகையால் அது நம்மை உயிர்ப்பிக்கிறது,  நமக்கு ஜீவன் கொடுக்கிறது. கர்த்தருடைய வார்த்தையை வாசித்து,  தியானிக்கும் போது,  நம்முடைய சரீரங்களில் காணப்படுகிற பலவீனப்பட்ட பாகங்களும்,  செத்துப் போன அவயவங்களும் உயிரடையும். உலர்ந்து போய்,  பின் மாற்றத்திற்குள்ளாகக் காணப்படுகிற ஜீவியங்கள் உயிர்ப்பிக்கப்படும். கர்த்தருடைய பிள்ளைகள்,  அவருடைய வார்த்தையை வாசிக்கும் போதும்,  தியானிக்கும் போதும்,  இது அவருடைய ஜீவன் என்ற சிந்தையோடு காணப்பட வேண்டும். 

கர்த்தருடைய வார்த்தை நம்முடைய பிரயோஜனத்திற்காக அருளப்பட்டிருக்கிறது என்று மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. முதலாவது,  அவைகள் நமக்குக் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய உபதேசமாகக்  காணப்படுகிறது. உலகத்தின் தோற்றத்தைக்  குறித்துக்  கற்றுக்கொடுக்கிறது,  மனுஷனுடைய சிருஷ்டிப்பைக் குறித்தும்,  பாவத்தினால் வந்த வீழ்ச்சியைக் குறித்தும்,  இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்தும்,  நம்மை அவரோடு சேர்த்துக் கொள்ள வரப்போகிறார் என்றும்,  இன்னும் அனேகக் காரியங்களையும் கற்றுத் தருகிறது. இதில் எழுதப்பட்டவை நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் போதுமானது. இரண்டாவது,  கர்த்தருடைய வார்த்தை நம்மைக் கடிந்துகொள்ளுவதற்காகவும் அருளப்பட்டிருக்கிறது. ஆவியானவர்  பாவத்தையும் நீதியையும்  நியாயத்தீர்ப்பையும்  குறித்துக் கண்டித்து உணர்த்துகிறவர். அப்படிப்பட்ட கடிந்துகொள்ளுதலின் உபதேசத்தை இந்நாட்களில் யாரும் விரும்புவதில்லை. ஆனால் வேதம் அருளப்பட்டதே நம்மைக் கடிந்துகொண்டு,  சிட்சித்து உபதேசிப்பதற்காக என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டும். மூன்றாவதாக,  கர்த்தருடைய வேதம்  நம்முடைய  சீர்திருத்தலுக்காகவும்,  அதாவது நம்மைச் சரிப்படுத்துவதற்காகவும் அருளப்பட்டிருக்கிறது. பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும், அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்,  அதுபோல,  வேத வார்த்தைகள் நம்மைச் சரிசெய்வதற்கு பிரயோஜனமுள்ளவையாய்   காணப்படுகிறது. கர்த்தருடைய வார்த்தை கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டிருப்பதால் நம்மில் காணப்படுகிற குறைகளை அவைகள் சுட்டிக்காட்டும் போது தன்னை சரிசெய்துகொள்ளுகிறவர்கள்  பாக்கியவான்கள். நான்காவதாக,  வேதவாக்கியங்கள்  நீதியைக் நமக்கு கற்றுத்தருகிறது. அநீதியும்,  துன்மார்க்க கிரியைகளும்,  உண்மையின்மையும்  நிறைந்து காணப்படுகிற உலகத்தில் நீதிக்குரியவர்களாகவும்,  கிறிஸ்துவின் வாசனையை வீசுகிறவர்களாகவும்,  பூமிக்கு  உப்பாகவும்,  உலகத்திற்கு வெளிச்சமாக ஜீவிக்கவும் நமக்கு கற்றுத் தருகிறது.

வேதவாக்கியங்களைக் கைக்கொண்டு ஜீவிக்கும் போது,  அவைகள் நம்மைக் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக நிறுத்தும்,  அதுபோல எல்லா நற்கிரியைகளைச் செய்யத் தகுதியுள்ளவனாகவும் மாற்றும். கர்த்தருடைய வார்த்தை உங்களைப் பரலோகத்திலிருக்கிற பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல் பூரண சற்குணராக மாற்றி,  அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar