உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.

ஏசா 27:6. யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/eH2Dewchkjg

ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் அநேக இடங்களில் அக்காலத்திலே என்று வருவதை பார்க்கலாம். மேல் குறிப்பிட்ட அதிகாரத்தின் முதல் வசனமும் கூட அக்காலத்திலே என்று எழுதப்பட்டிருக்கிறது. கடைசி நாட்களில் சாத்தானின் வீழ்ச்சியை குறித்து இந்த அதிகாரத்தில் வாசிக்கலாம். அதே நேரத்தில் யாக்கோபின் சந்ததி வேர்பற்றி எழும்பும். இஸ்ரவேல் பூத்து காய்க்கும். யார் இந்த யாக்கோபின் சந்ததியார்? யார் இந்த இஸ்ரவேலர்கள்? ஆவியின்படி இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவரே மேசியா என்று விசுவாசிக்கிற நீங்கள் தான் இஸ்ரவேலர்கள். சத்தியத்தை கைகொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி (ஏசா 26:2) அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவர்கள்(ஏசா 26:3); இவர்கள் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள்.

இவர்கள் பூத்து காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்புவார்கள். ஒரு ஆலமரம் இருக்கிறதென்றால் அதனுடைய வேர் மிகவும் ஆழத்தில் இருக்கும். அதன் வேர் ஆழத்தில் இருப்பதால் அவ்வளவு சுலபமாக அது சாய்ந்துவிடாது. பெரும் காற்று அடித்தாலும், புயல் வந்தாலும் அது சேதமில்லாமல் நிற்கும். அதிக நாள் கெம்பீர தோற்றத்துடன் இருக்கும். காரணம் அதன் வேர் ஆழத்தில் பற்றியிருப்பதால் தான். அதுபோல தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நீங்கள் கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டு, மாளிகையாக எழும்புவீர்களென்றால் அசையாமல் நிலைத்துநிற்கும் சீயோன் பர்வதத்தை போல இருப்பீர்கள். ஆலமத்தின் நிழலிலே அநேகர் வந்து இளைப்பாறுவார்கள். அதுபோலத்தான் நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமான வாய்க்காலாக இருப்பீர்கள். நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும் (ஓசியா 14:5,6) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும். கடைசிக்காலத்தில் சம்பவிக்கப்போகிறவைகளில் ஒன்று தான் உலகத்தை பலனால் நிரப்பும் நாட்கள். யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள் (2 இராஜா 19:30). நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள் (எரே 12:2) என்று வசனம் சொல்லுகிறது.

வேர்பற்றி பூத்து காய்த்து கனிகொடுங்கள். வசனத்தில் வேர்பற்றி வளருங்கள்; ஜெபத்தில் வேர்பற்றி வளருங்கள். அபிஷேகத்தில் வேர்பற்றி வளருங்கள். அப்பொழுது நீங்கள் உலகத்தைப் பலனால் நிரப்புவீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org