காண்பியாதவை ஒன்றும் இல்லை.

அப்பொழுது அவன்:  உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான்.  அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்,  என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக்  காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான் (2 இரா. 20:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9FmW_PQPlfs

எசேக்கியா ராஜா மரணத்திற்கு ஏதுவான வியாதிப்பட்டிருந்தான். கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியை அனுப்பி அவன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் படிக்குக் கூறினார். உத்தமமாய்  கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களுக்கு அவர்கள் மரணத்தைக் கூட முன்னறிவிக்கிற கர்த்தர். இச்செய்தியைக் கேட்ட உடன்,   எசேக்கியா இராஜா கர்த்தரை நோக்கி என் உண்மையையும்,   என் மன உத்தமத்தையும்,   உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று கண்ணீரோடும் அழுகையோடும் விண்ணப்பம் பண்ணினான். ஏசாயா பாதி முற்றத்தைத் தாண்டுவதற்கு முன்பு கர்த்தர் அவனைத் திரும்ப அனுப்பி உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்,   கண்ணீரைக் கண்டேன்,   உன்னைக் குணமாக்குவேன் என்று வாக்கு கொடுத்தார். அவனுடைய ஆயுசின் நாட்களோடு பதினைந்து வருஷங்களைக் கூட்டிக் கொடுத்து அவனுக்கு ஆதரவாயிருந்தார். கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் உண்மையும்,   உத்தமமும்,   தேவனுக்கு பிரியமான ஜீவியமும் உங்கள் இக்கட்டுகளிலிருந்து உங்களைத் தப்பப்பண்ணும்,   உங்கள் ஆயுசின் நாட்களைப் பெருகப்பண்ணும்

எசேக்கியா வியாதியாய் காணப்பட்டதைக் கேள்விப்பட்ட பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனிய ராஜா,   அவனுக்குக் கடிதங்களையும்,   வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கீகரித்தான் என்று வசனம் கூறுகிறது,   அதுவே அவனுடைய சந்ததிகளுக்குக் கண்ணியாய் முடிந்தது. கர்த்தருடைய பிள்ளைகளே,   உங்கள் பார்வைக்கும்,   சூழ்நிலைகளுக்கும் நலமாகத் தோன்றுகிறவர்களை நீங்கள் அங்கீகரித்து நட்பு பாராட்டினால்,   சில வேளைகளில் அதுவே உங்கள் குடும்பத்திற்குக் கண்ணியாகவும் சாபமாகவும் முடியும். எசேக்கியா அவர்களை அங்கீகரித்தது மாத்;திரமல்ல தன்னுடைய மேட்டிமையை வெளிப்படுத்துவதற்காக அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும்,   வெள்ளியையும்,   பொன்னையும்,   கந்தவர்க்கங்களையும்,   நல்ல பரிமளதைலத்தையும்,   தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்,   தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. அவனைப் போல் உங்கள் மேன்மைகளையும் மேட்டிமைகளையும் வெளிப்படுத்துவதற்காக எல்லாரிடமும் எல்லாவற்றையும் காண்பியாதிருங்கள். உங்களுக்கு  உண்டானவை அத்தனையும் கிருபையாய் கர்த்தர் கொடுத்தது என்ற உணர்வோடும்,   தேவபயத்தோடும் அனுதினமும் ஜீவியுங்கள். ஒரு மனுஷனை ஆசீர்வதித்து ஐசுவரிய வானாய் மாற்றுகிறவர் கர்த்தர்,   அதுபோல,   ஒரே நாளில் யோபுவைப் போலத் தரித்திரனாக மாற்றவும் அனுமதிக்கிறவர் அவர். ஆகையால் பொருள்களை வாங்கும் போதும்,   செலவுகள் செய்யும் போதும் கர்த்தரை முன்னிறுத்திச் செய்யுங்கள். உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்களைப் போலப் பொருட்களை வாங்கவும்,   வசதியாக வாழவும் ஆசைப்படாதிருங்கள்.

எசேக்கியா ராஜாவிற்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி,   இதோ நாட்கள் வரும்,   அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும்,   உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்றார். சகல ஆஸ்தி ஐசுவரியங்களையும் மாத்திரமல்ல,   அவனுடைய சந்ததிகள் கூட வேலைக்காரர்களும்,   அடிமைகளாகவும்  பாபிலோனில் காணப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய ராஜாவின் நாட்களில் அப்படியே சம்பவித்தது.   பிள்ளைகளுக்குப் பெற்றோர் ஆசீர்வாதத்தையும்,   சாபத்தையும் வைத்துப் போவார்கள்,   ஆனால் எசேக்கியாவோ சாபத்தையும்,   தரித்திரத்தையும்,   பஞ்சத்தையும் வைத்துப்போனான். கர்த்தருடைய பிள்ளைகளே,   ஆண்டவருடைய சரியான உபதேசத்தை  ஒருவன் உங்களிடத்தில் கொண்டுவராமலிருந்தால்,   அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும்,   அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் என்று வேதம் எச்சரிக்கிறது. யாரிடத்தில் எதைப் பேசவேண்டுமோ,   எதைக் காண்பிக்க வேண்டுமோ,   அதைக் காண்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும்,   சந்ததிகளுக்கும் ஆசீர்வாதத்தையும்,   நல்ல ஈவுகளையும் வைத்துச் செல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar