வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity).

ஏனெனில்,     நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும்,     எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,      அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க,     ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம் (ரோமா. 12:4,    5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_t7cTD79si0

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது பாரத தேசத்தின் முழக்கமாகும். கர்த்தர் நமக்குக் கொடுத்த நல்ல தேசத்தில் இருபத்திரண்டு அலுவலக மொழிகளும்,     பத்தொன்பதினாயிரத்து ஐந்நூற்று அறுபத்தொன்பது தாய் மொழிகளும் காணப்படுகிறது. பலவிதமான கலாச்சாரங்களையும்,     பழக்கவழக்கங்களையும் கொண்ட நம்முடைய தேசத்தில் நூற்றிநாற்பது கோடி ஜனங்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது கர்த்தருடைய ஈவாகக் காணப்படுகிறது. நம்முடைய சரீரத்திலும் ஏழாயிரத்து ஐந்நூறு சரீர உறுப்புகள் காணப்படுகிறது. எல்லா அவயவங்களுக்கும் ஒரே வேலையைச் செய்வதில்லை,     ஒரே மாதிரியானதும் இல்லை. ஆகிலும் எல்லாம் இணைந்ததே ஒரு சரீரமாய் காணப்படுகிறது. அதுபோல கிறிஸ்துவின் சரீரமாகிய சபையும் அனேக விதமான வித்தியாசமான பின்னணிகளைக் கொண்ட ஜனங்களைக் கொண்டது,     அனேகராகிய நாம் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகவும் ஒருவருக்கொருவர் அவயவங்களாகவும் காணப்படுகிறோம், அப்படி நாம் இணைந்து செய்வதே புத்தியுள்ள ஆராதனையாகும். 

கர்த்தருடைய ஜனங்களின் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் காத்துக் கொள்ள நம்மை ஜீவபலியாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ஒருவருக்கொருவர் விரோதமாக போர்செய்கிற அவயவங்களைச் சிலுவை என்னும் பலிபீடத்தில் அனுதினமும் தகனிக்கவேண்டும். பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷங்களாகிய ஜாதி,    மத,     மொழி பிரிவினைகளைக் கொண்டு வருகிற காரியங்களை நம்மை விட்டு அகற்றி,     ஒருமைப் பாட்டில் நாம் தேறினவர்களாய் காணப்படும் படிக்கு இயேசு  யோவான் 17ல்  ஏறெடுத்த ஆசாரிய ஜெபத்தை நினைவில் கொள்ளவேண்டும். இந்நாட்களில் ஒருமனக்கேடும்,     ஐக்கியமின்மையும் எங்கும் காணப்படுகிறது. சபைகளுக்குள்ளாய் பலவிதமான அரசியல் காணப்படுகிறது,     பாரம்பரிய சபைகளும்,     ஆவிக்குரிய சபைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான் கோள் சொல்லுகிறவன் பிராண சினேகிதரையும் பிரித்துவிடுகிறான் என்று நீதிமொழிகள் 16:17ல் எழுதப்பட்டிருக்கிறது. மாறுபாடுள்ள நேர்மையற்றவர்களால் தங்களது  சுயலாபத்திற்காய் பிரிவினைகளைத் தூண்டுகிறார்கள். நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து,     அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறினார்.  பிலிப்பிய சபையில் எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் கர்த்தருக்குள் ஒரே சிந்தையில்லை என்று பவுல் கடிந்துகொண்டார். 

கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்ளும் போது,     பந்தி நம்மை ஐக்கியப்படுத்துகிறது. நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?  அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால்,     அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம் என்று 1 கொரி. 10:16,    17ல் எழுதப்பட்டிருக்கிறது. சிலுவை, பிரிவினையாகிய தடுப்புச் சுவரை தகர்த்து,     பகையைக் கொன்றது என்று வேதம் கூறுகிறது,     இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்கி நமக்குள் சமாதானத்தைத் தருகிறது. உலகமும்,     சத்துருவும் நம்மைப் பிரிக்க வஞ்சகமான வலைகளை விரிக்கிற இந்த நாட்களில் இயேசுவின் சிலுவை நம்மை ஐக்கியப்படுத்துகிறது.  சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?  அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார் என்று சங்.133ல் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனம் ஒன்றித்துக் காணப்படும் போது நாம் ஆசீர்வதிக்கப்படுவது உறுதி.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318