மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்( For the Lord does not see as man sees).

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும்,     இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம், நான் இவனைப் புறக்கணித்தேன்,     மனுஷன்  பார்க்கிறபடி  நான் பாரேன்,  மனுஷன் முகத்தைப் பார்ப்பான்,     கர்த்தரோ  இருதயத்தைப்  பார்க்கிறார் என்றார் (1 சாமுவேல் 16:7).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/3WVAe-Ql34U

வெளித்தோற்றத்தை வைத்துக் கணிப்பது மனித இயல்பு. நல்ல நிலையில் ஐசுவரிவான்களாகவும்,     அழகானவர்களாகவும்,     படித்தவர்களாகவும்,     உயரமாகவும்,     அதிகாரத்திலும் காணப்பட்டால் அவர்களை  கனத்திற்குரியவர்களாய் கருதுவோம். ஆனால் ஆண்டவருக்கு மட்டும் என்று காணப்படுகிற ஒரு தனிசுபாவம்,     அவர் இருதயங்களைப்   பார்க்கிறவர்,     இருதயத்தின் நினைவுகளின் தோற்றத்தை அறிகிறவர். இஸ்ரவேலின் முதல் ராஜாவாய் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் துவக்கத்தில்  தாழ்மையோடு ஆட்சியைத் துவங்கினான். காலப்போக்கில் அவனுக்குள்ளாய் மேட்டிமையும், கீழ்ப்படியாமையும் வந்தது,     பொய்  சொல்லுகிறவனாயும்  மாறிவிட்டான்.  அவனுடைய இருதயத்தின் நினைவுகளை அறிந்த கர்த்தர்,     அவனை ராஜாங்கத்திலிருந்து தள்ளினார். அதன்பின்பு தன் இருதயத்திற்கு  ஏற்ற,      தனக்கு சித்தமானவைகளைச் செய்கிற  தாவீதை ராஜாவாக  ஏற்படுத்துவதற்கு,     சாமுவேல் தீர்க்கதரிசியைப் பார்த்து உன்  கொம்மை  தயிலத்தால்  நிரப்பிக் கொண்டு வா,     நான் உன்னை  பெத்லெகேமியனாகிய  ஈசாவினிடத்தில் அனுப்புவேன்,     அவனுடைய குமாரர்களில்  ஒருவனை ராஜாவாகத்   தெரிந்துகொண்டன்  என்றார். சாமுவேல்  தீர்க்கதரிசி சவுலைக் கண்டு பயந்தான்,     அதற்குக் காரணம் தோவேக்கு என்ற  புறஜாதியானை அனுப்பி எண்பத்தைந்து ஆசாரியர்களைக் கொன்றவன்,     தன்னையும் கொன்று போடுவான்  என்று பயந்தான். ஆகையால் கர்த்தர் நீ  காளையைப் பலிசெலுத்தும்படிக்கு  போ,     பலிவிருந்திற்கு ஈசாயின்  குடும்பத்தாரை  அழைப்பி,     நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காய்  அபிஷேகம் பண்ணு என்றார்.


 சாமுவேல் தீர்க்கதரிசி கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமிற்கு வந்தான். ஈசாயின் குடும்பத்தாரை பலிவிருந்திற்கு அழைத்தான்,     சாமுவேல் கேட்டுக் கொண்டதின்படி ஈசா தன்னுடைய குமாரர்களில் ஒவ்வொருவனாய் ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்படுவதற்கு அனுப்பினான். மூத்த குமாரன் சவுலின் ராணுவத்தில் வேலைப் பார்த்துக்கொண்டு காணப்பட்டான். உயரமான அவனுடைய வெளித்தோற்றத்தைக் கண்ட சாமுவேல்,     இவனா என்று ஆண்டவரிடத்தில் விசாரித்தான். சாமுவேல் நம்மைப் போல  அவனுடைய வெளித்தோற்றத்தையும் தகுதியையும் பார்த்தான். இப்படிhய் ஈசா தன்னுடைய ஏழு குமாரர்களையும் அனுப்பினான்,     சாமுவேலும் இவனா,     இவனா என்று தேவனிடத்தில் விசாரித்த வேளையில் அவர் இல்லை,     இல்லை என்றார். கர்த்தருடைய பிள்ளைகளே,     ஊழியர்களே நீங்கள் நீங்களாய் இருங்கள். சிலர் மற்றவர்களைப் போலப் பேச பழகுவது,     பாடப் பழகுவது,     நடை உடைகளை மாற்றுவது,     அனேகரைத் தங்களுடைய முன்மாதிரியாய் வைத்து அவர்களைப் போல தங்களை மாற்றுவதற்கு மாமிசத்தில் முயற்சிக்கிறவர்களாய்  காணப்படுவதுண்டு. ஆண்டவர் உங்கள் வெளித் தோற்றத்தை வைத்து உங்களைக் கணிப்பதில்லை. அவர் உங்கள் உள்ளிந்திரியங்களைப் பார்க்கிறார்.

கர்த்தர் ஈசாயின் ஏழு குமாரர்களையும் தள்ளினதினால்,     வேறு குமாரர்கள் உண்டா என்று சாமுவேல் விசாரித்த வேளையில் இன்னொருவன் இருக்கிறான் அவன் வனாந்தரத்தில் ஆடுகளை மேய்க்கிறான் என்றான். அவனை உடனே அழைத்து வரும்படிக்குச் சொல்லி,     தாவீது வந்த போது,     கர்த்தர் இவன் தான் இவனை எனக்காக அபிஷேகம் பண்ணு என்றார்.  ஈசா தன் கடைசி குமாரனுடைய  பெயரைச் சொல்லுவதற்குக் கூட வெட்கப்பட்டான். முன்னாட்களில் வடதழிழ்நாடு பகுதிகளில் பெண்பிள்ளைகளாய் பிறந்தால் வேண்டா என்ற பெயரை வைத்துவிடுவார்கள்,     வேண்டா வெறுப்பாய் பிறந்தவர்கள் என்று அர்த்தம்.  அனேக ராஜகுடும்பங்களில் கூட முதல் பிறந்த பாலகனை  அரியணையின் வாரிசு என்றும்,     அடுத்தடுத்து பிறக்கிறவர்களை உதிரிகள்  என்றும் சொல்லுவதுண்டு. ஆனால் ஒதுக்கப்பட்ட தாவீதின் இருதயத்தைக்  கண்ட கர்த்தர் அவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்.  கர்த்தருடைய பிள்ளைகளே,     ஒருவேளை புறக்கணிக்கப்பட்டவர்களாய் காணப்படுகிறீர்களோ,     உங்கள் இருதயம் கர்த்தருக்கு ஏற்றதாய் காணட்டும்,     உங்கள் இருதயத்தைக் கண்டு,     கர்த்தர் உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பது உறுதி.  ஆகையால் கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக நீதிக்குரிய ஜீவியத்தைச் செய்யுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar