எல்லரைக்காட்டிலும் இயேசுவை நேசிப்பவன் சீஷன் (A disciple is one who loves Jesus more than anyone else)

லுக் 14:26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/bsIKJpO4JgE

லூக்கா 14வது அதிகாரத்தில் சீஷனாய் இருப்பதற்கு மூன்று தகுதிகள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று தான் மேற்குறிப்பிட்ட வசனமாய் காணப்படுகிறது.

சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் என் வாழ்க்கையே என் குடும்பத்திற்காக தான் வாழ்கிறேன் என்று போடுவார்கள். தங்கள் குடும்பத்தை முதலிடத்திலும், இயேசுவை இரண்டாம் இடத்திலும் வைத்துக்கொள்பவன் உண்மையான சீஷன் அல்ல. உதாரணத்திற்கு கர்த்தர் உங்களோடு கூட பேசி குறிப்பிட்ட ஊருக்கு சென்று சுவிசேஷம் அறிவி என்று சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவ்வேளையில் உங்கள் தாயும் தகப்பனும், நீ அங்கே கடந்து செல்லாதே என்று தடுத்து, உங்கள் பெற்றோரின் சொல் கேட்டு அந்த குறிப்பிட்ட ஊருக்கு கடந்து செல்லாமல் இருப்பீர்களென்றால், நீங்கள் உங்கள் தகப்பனையும் தாயையும் வெறுக்கவில்லை என்று அறிந்துகொள்ளுங்கள். மாறாக, இயேசுவை வெறுக்கிறவர்களாக இருக்கிறீர்கள். அதுபோல, குறிப்பிட்ட சபையில் கர்த்தர் உங்களை உடன் ஊழியம் செய்ய அழைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேளையில் உங்கள் மனைவி அதற்கு இடையூறாக, அந்த வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்லி, அவர்களுக்கு செவிகொடுப்பீர்களென்றால், நீங்கள் இயேசுவுக்கு உண்மையான சீஷன் அல்ல.

ஒரு குடும்பத்தில் மனைவி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, இயேசுவையே தன் தெய்வமாக எண்ணி அவரை தொழுதுகொண்டு வந்தார்கள். அதை கண்ட, இயேசுவை ஏற்றுக்கொள்ளாத கணவன், தன் மனைவியை அடிக்கிறவனாகவும், துன்புறுத்துகிறவனாகவும் காணப்பட்டான். ஒவ்வொருநாளும் அவன் குடித்துவிட்டு தன் மனைவியை அடிக்கிறவனாக காணப்பட்டான். ஆனால், அந்த பெண்மணியோ, தன்னுடைய ஜெப நேரத்தை இவ்வேளையில் அதிகரிக்க தொடங்கினாள். ஒரு நாள் இரவு, கணவன் தூங்கினதின் பிற்பாடு, தன் தனி அறைக்கு சென்று, அந்த சகோதரி, தன் கணவன் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நெடு முழங்காலில் நின்று அழுதுகொண்டே ஜெபித்தாள். நடு இராத்திரியில் திடீரென்று எழுந்த கணவன் தன் மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று பார்க்க எழுந்து வந்தவன், அவள் கண்ணீர் விட்டு ஜெபிப்பதை பார்த்து, அவன் போய் தன் படுக்கை அறையில் படுத்து கொண்டான். மீண்டும் சுமார் காலை மூன்று மணிக்கு அவன் வந்து பார்த்தான். அவனுடைய மனைவி, அதே நெடு முழங்காலில் நின்று, தன் கணவருக்காக சத்தமிட்டு அழுது ஜெபித்துக்கொண்டே இருந்தாள். கணவன் மீண்டும் காலை ஐந்து மணிக்கு வந்து பார்த்தான். தன் மனைவி அதே வார்த்தையை சொல்லி, நெடு முழங்காலில் நின்று ஜெபித்தாள். அதை கண்ட கணவனின் உள்ளம் உருகி, மனைவி அறியாத வேளையில், அவள் அருகில் வந்து அவனும் முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தான். ஆறு மணிக்கு கண்விழித்து பார்த்த மனைவிக்கு, இன்ப அதிர்ச்சி, ஆனந்த கண்ணீர், சொல்லமுடியாத சந்தோசம். காரணம் தன் கணவன் கண்ணீர்விட்டு, அழுது தன் பாவங்களை அறிக்கையிட்டு ஜெபித்தான். அந்த சகோதரி, தன் கணவன் அவளை துன்புறுத்தினாலும், இயேசுவை நேசித்து ஜெபித்ததால், அவள் கணவனும் இரட்சிக்கப்பட்டான் . அவளே உண்மையான சீஷி. அப்படிபோல, நீங்கள் அனைவரும் தங்கள் சொந்த குடும்பங்களை நேசிப்பதை காட்டிலும் இயேசுவுக்கு முக்கியத்துவத்தை கொடுங்கள். உண்மையான சீஷராய் இருங்கள். அப்பொழுது பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷம் உண்டாகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org