சீஷன் என்பவன் தன் சிலுவையை சுமந்து, இயேசுவை பின்பற்றுபவன் (A disciple is one who carries his cross and follows Jesus )

லுக் 14:27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fGsqTEUJWQU

லூக்கா 14வது அதிகாரத்தில் சீஷனாய் இருப்பதற்கு மூன்று தகுதிகள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் இரண்டாவதாக குறிப்பிட்டிருப்பது தான் மேற்குறிப்பிட்ட வசனமாய் காணப்படுகிறது.

பொதுவாக நமது தேசங்களில் ஒரு ஊழியக்காரரையோ, விசுவாசியோ சந்தித்தால், நீங்கள் எங்கே இரட்சிக்கப்படீர்கள்? வேதாகம கல்லூரியில் படித்தீர்களா? எங்கே அபிஷேகம் பெற்றீர்கள் என்று கேட்பார்கள். ஆனால் சீனா தேசத்தில் விசுவாசிகளோ இல்லை ஊழியர்களோ சந்திக்கும்போது, எத்தனை வருடம் இயேசுவின் நாமத்தினிமித்தம் சிறையில் இருந்தீர்கள்? எந்த சிறையில் இருந்தீர்கள் என்று கேட்பார்களாம். இயேசுவின் நாமத்தினிமித்தம் சிறைக்கு செல்வதே அடிப்படை தகுதி போல சூழ்நிலை அங்கே இருக்கிறது. இருந்தாலும் இந்த நெருக்கத்தின் மத்தியிலும் சீனா தேசத்தில் வெளியே தெரியாமல் எழுப்புதல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திரளான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு வருகிறார்கள்.

வாட்ச்மன் நீ என்ற தேவ மனிதர் சீனா தேசத்தை அசைத்தவர். பெரிய எழுப்புதல் நாயகனாக அந்த தேசத்தில் செயல்பட்டவர். அவர் எழுதிய The Normal Christian Life என்ற புஸ்தகம் பல வெளிநாடுகளில் வெளியாகி, அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்தது. இதை அறிந்த சீனா தேசத்து அதிகாரிகள் வாட்ச்மன் நீ மீது பொய் குற்ற சாட்டுகளை சாட்டி அவரை சிறையில் அடைத்தார்கள். சுமார் 15 வருடங்கள் இயேசுவின் நாமத்தினிமித்தம் சிறையில் பல கொடிய பாதைகளை சந்தித்தார். யாரும் அவரை பார்க்க அந்த தேசத்து அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இருட்டறையில் அடைக்கப்பட்டவராய், சரியான உணவு இல்லாமல் காலப்போக்கில் அவர் பெலவீனமடைந்தார். சரீரம் பல வியாதிகளால் தாக்கப்பட்டிருந்தது. சில தபால்கள் அவர் எழுதியதை வைத்து அவர் கிறிஸ்துவுக்குள் எப்படி சந்தோசமாக இருந்தார் என்பதை அறிய முடிந்தது. இந்த கடினமான சூழ்நிலையில் அவர் இப்படியாக எழுதியிருந்தார் என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார் (யோவா 8:29) என்பதாக. இப்படியாக பல சவால்களை சந்தித்து, அவர் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றினார்.

ஒருமுறை கிறிஸ்தவன் ஒருவன் நெஞ்சில் இராணுவ அதிகாரி, கூறிய வாளை வைத்து நீ கிறிஸ்தவனா சொல் என்று சொல்லி அச்சுறுத்தினான். அவன் ஆம், நான் கிறிஸ்தவன் தான் அன்று கொஞ்சமும் பயப்படாமல் சொன்னான். அதை பார்த்த இராணுவ அதிகாரி அவனை காப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அவன் மனநோயாளி என்று சொல்லி அனுப்பிவிட்டான். சிறிது நாள் கழித்து அவனிடம், அவர் கேட்டாராம் உன் நெஞ்சில் வாள் வைத்தபோதும், நீ எப்படி நான் கிறிஸ்தவன் என்று அஞ்சாமல் சொன்னாய் என்று. அதற்கு அந்த கிறிஸ்தவன் சொன்னானாம், நான் பேதுருவின் சம்பவத்தை படித்திருக்கிறேன். இயேசுவை மறுதலித்து விட்டு பின்பு மனங்கசந்து அழ விரும்பவில்லை என்று சொன்னானாம்.

அருமையானவர்களே, என்னதான் பெரிய போராட்டங்கள் இயேசுவினிமித்தம் வந்தாலும், தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உங்கள் சிலுவையை எடுத்து, இயேசுவை பின்பற்றி, இயேசுவின் சீஷன் என்று அழைக்கப்படுங்கள். அப்பொழுது மறுமைக்குரிய நன்மைகளினால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org