நீதி 1:33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ZtDzPix80Pg
இந்த உலகத்தில் பயம் அநேகரை அநேக விதங்களில் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. எதை பார்த்தாலும் பயம், எதிர் காலத்தை குறித்து பயம், உறவினர்களை பார்த்து பயம், அதிகாரிகளை பார்த்து பயம், தாங்கள் செய்த பாவத்தின் விளைவை நினைத்து பயம், தங்களை தாங்களே பார்த்து பயம், கொள்ளை நோயை பார்த்து பயம், விபத்துகளை பார்த்து பயம் என்று அநேக விதங்களில் இந்த பயம் அநேகரை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. ஆனால் இங்கே கர்த்தர் உங்களை பார்த்து சொல்லுகிறார் நீங்கள் ஆபத்திற்கு பயப்படாமல் இருப்பீர்கள். ஆபத்து வருகிறதை போல காணப்படலாம், ஆனால் பயப்படமாட்டீர்கள்.
யார் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் இருப்பார்கள்? கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவர்களே!. என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார் (II சாமுவேல் 22:19 ), என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். ( சங் 18:18) என்று வசனம் சொல்லுகிறது. மாத்திரமல்ல கர்த்தர் சொல்லுகிறார் என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும் (ஏசாயா 32:18).
கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவர்களாய் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும். நீங்கள் ஒரு காரியத்தை விரும்பும்போது அதை செய் என்று கர்த்தர் சொன்னால் அதற்கு கீழ்ப்படிந்து அதை செய்வது எளிது. ஆனால் நீங்கள் விரும்பாததை, நீங்கள் எதிர்பார்க்காததை, உங்களுக்கு இந்த காரியம் கடினமாக இருக்கும் என்பவைகளை கர்த்தர் செய் என்று சொல்லும்போது, அந்த வார்த்தைக்கு செவிகொடுத்து அதன்படி செய்வதே மேலான காரியம். கர்த்தர் எதை செய்ய சொன்னாலும் செய்ய எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
ஆபிரகாமை பார்த்து கர்த்தர் சொன்னார் ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு என்று சொன்னார்.கிதியோனை பார்த்து கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே என்று சொன்னார். இப்படி ஆண்டவர் அநேகரை பார்த்து மீண்டும் மீண்டும் பயப்படாதே என்று சொல்லுகிறார். ஆகையால் நீங்கள் ஆபத்தை பார்த்து பயப்படலாகாது. நான் பயந்தது எனக்கு நேரிட்டது என்று சொல்லத்தக்கவண்ணம் இருக்கலாகாது. மாறாக கர்த்தருக்கு செவிகொடுக்கும்போது நீங்கள் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் இருப்பீர்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org