சங் 18:35. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/GTl6Ej2zk_Y
ஆண்டவருக்கு அநேக குணாதிசியங்கள் உண்டு. அவர் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர், நீடிய சாந்தமுள்ளவர், கிருபையுள்ளவர், மன்னிக்கிறவர், தயவு செய்கிறவர் என்று அநேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோல அவருக்கிருக்கும் ஒரு குணாதிசயம் அவர் காருண்யம் உள்ளவர். காருண்யம் என்றால் உங்களை அவர் ஒரு முக்கியமான நபராக பார்க்கும் மனதை, கண்களை கொண்ட குணாதிசயம் உடையவர் என்பதாய் காணப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவரையும் அவர் மற்றெல்லா நபர்களை காட்டிலும் மிக முக்கிய நபர்களாக பார்க்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இந்த சங்கீதத்தை எழுதியவர் தாவீது. தாவீதை சவுல் துரத்தினபோது, கர்த்தர் அவனை எல்லா தீங்கிற்கும் தப்புவித்து விடுவித்தபோது பாடின சங்கீதமாய் காணப்படுகிறது. தாவீதுக்கு கர்த்தருடைய காருண்யம் வெளிப்பட்டது. சாதாரண ஆடு மேய்கிறவனாக காணப்பட்டவனை கர்த்தருடைய காருண்யம் சந்தித்தது. சாமுவேல் தாவீதின் சகோதரர்களை இராஜாவாக அபிஷேகம்பண்ணும்படி முயற்சித்தான். தாவீதின் சகோதரர்களுக்கு கிடைக்காத ஒரு ஆசீர்வாதம் தாவீதுக்கு கிடைத்தது. அது கர்த்தருடைய காருண்யமாய் காணப்படுகிறது. அந்த காருண்யம் தாவீதை சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாகும்படி உயர்த்தியது. அதே காருண்யம் உங்களையும் உயர்த்தும்.
ஒரு ஊழியக்காரர் கவற்சியினால் ஜனங்களை ஆலயத்திற்கு கொண்டு வரலாம் என்று முயற்சித்தார். இன்றும் அநேக ஊழியர்கள் தாங்கள் கவர்ச்சியான உடை உடுத்தியும், கைக்கடிகாரம் கட்டியும், நான் இந்த விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையில் பயணிக்கிறேன் என்று தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு ஜனங்களை இழுக்க நினைக்கிறார்கள். கர்த்தர் அந்த ஊழியக்காரரிடம் கேட்டாராம், நான் என் ஜனங்களை கவர்ச்சியினால் சேர்த்துக்கொள்ளுவேனா இல்லை என்னுடைய காருண்யத்தினால் சேர்த்துக்கொள்ளுவேனா என்று கேட்டாராம். அப்பொழுது தான் அந்த ஊழியக்காரருக்கு குத்துதல் உண்டானது. அதுமுதல் அந்த ஊழியக்காரர் கிறிஸ்துவின் காருண்யத்தை முன்வைத்து பிரசங்கிக்கிறவராய் காணப்பட்டார். அவருடைய காருண்யம் உலகத்தின் ஜனங்களை சந்திக்கும்.
உலகத்தில் அநேகர் நான் சொந்த காலில் நிற்கிறேன், சொந்த முயற்சியால் நான் உயர்ந்தேன் என்று சொல்லுவார்கள். ஆனால் உங்களுக்கோ கர்த்தருடைய காருண்யம் மாத்திரமே உங்களை பெரியவனாக்கும். உங்கள் வேலை ஸ்தலங்களில், இல்லற வாழ்வில், தொழிலில், ஊழியங்களில் கர்த்தருடைய காருண்யம் உங்களுக்கு வெளிப்படும். அந்த காருண்யம் உங்களை உயர்த்தும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org