அப் 27:15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/hhSlpES3Aho
பவுலும் அவனோடிருந்தவர்களும் சுவிசேஷத்தினிமித்தம் கப்பல் பிரயாணம் மேற்கொண்டார்கள். அப்பொழுது, கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று (அப் 27:14). இதில் எழுதியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சற்று ஆழமாக சிந்தித்து பாருங்கள். பவுலும், அவனோடுகூட இருப்பவர்களும் கப்பலில் பிரயாணப்பட்டபோது கொஞ்சநேரத்தில் அவர்கள் விரும்பாத சம்பவம் நடைபெறுகிறது. சிலவேளைகளில் ஊழிய பாதையில், கிறிஸ்துவுக்காக செயல்பட ஆரம்பிக்கும்போது கொஞ்சநேரத்தில் சத்துரு உள்ளே புகுந்து அதை சீர்குலைக்க எத்தனிக்கிறவனாய் காணப்படுவான். யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று கொஞ்சநேரத்தில் கப்பலில் மோதிற்று. கடுமையான காற்று கப்பலில் வீசியது என்று எழுதப்படவில்லை; மாறாக, மோதிற்று என்று எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் இப்படி கடுங்காற்று மோதுகிற சூழ்நிலை ஒருவேளை வரலாம்.
இந்த காற்றினிமித்தம் கப்பல் அகப்பட்டுக்கொண்டது. இன்று அநேகர் சத்துரு அனுப்பும் கடுங்காற்று நிமித்தமாக அநேக மணி நேரங்கள் கர்த்தரோடு செலவிடாமல், தொலைபேசியில் அகப்பட்டுவிடுகிறார்கள். தொலைபேசியில் மணிக்கணக்கில் தேவையில்லாத காரியங்களை பார்ப்பதும், விளையாடுவதும் என்று நேரத்தை வீணாக்கி அதில் அகப்பட்டுவிடுகிறார்கள். சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைபேசியில் உள்ள அணைத்து விதமான விளையாட்டுகளையும் விளையாடி அதில் அகப்பட்டு விடுகிறார்கள். ஒரு நபர் சொன்னார் எனக்கு ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வேலை செய்யவேண்டும். அப்படி செய்தால் தான் எனக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று சொன்னார். இப்படி சிலர் வேலை வேலை என்று அதில் அகப்பட்டுவிடுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமான காரியங்களில் கர்த்தருடைய பிள்ளைகள் அகப்பட்டுவிடுகிறார்கள். இதை வாசித்துக்கொண்டிருக்கிற கேட்டுக்கொண்டிருக்கிற உங்களுக்கு தெரியும் நீங்கள் எந்த காரியத்தில் தற்போது அகப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் மனமும் நேரமும் பணமும் எந்த காரியத்தில் அகப்பட்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். கர்த்தர் உங்களை அழைத்த அழைப்பின் மேன்மையை உணர்ந்து அகப்பட்டிருக்கிற காரியங்களில் இருந்து வெளியே வாருங்கள்.
இவ்வளவு பெரிய ஆபத்திலும் பவுல் சொன்னான் ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்பதாக. அதுபோல தான் நீங்கள் அநேக காரியங்களில் அகப்பட்டிருந்தாலும், சில சில சிட்சைகளை கர்த்தர் அனுமதித்திருந்தாலும் பிராணச்சேதம் வராமல் கர்த்தர் பார்த்துக்கொண்டார். காரணம் பவுலிடம் ஆண்டவர் சொன்னார் பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும் என்பதாக. கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொருவரும் இராயனுக்கு முன்பாகவும், பெரிய பெரிய தலைவர்களுக்கு முன்பாகவும் இயேசுவின் நாமத்தினிமித்தம் நிற்க அழைக்கப்பட்டவர்கள். ஆகையால் பயப்படாமல் இருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். கடுங்காற்று உங்கள் வாழ்க்கையில் வீசி, அநேக விதமான காரியங்களில் அகப்பட்டிருந்த உங்களை இயேசு மீட்டெடுத்தார். இனி நீங்கள் இராயனுக்கு முன்பாக நிற்க ஆயத்தமாகுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org