காலை வணக்கம் (Good Morning)

சங் 3:5. நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rDvH_G7jZ4U

தாவீது தன் குமாரன் அப்சலோமுக்கு தப்பி ஓடிப்போகையில் சொன்ன வார்த்தையாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. ஒரு நபர் இப்படியாக சொன்னார் எனக்கிருக்கும் கவலைகள் நிமித்தம் என்னால் சரியாக இரவு தூங்கமுடியவில்லை என்பதாக. வேறொருவர் சொன்னார் எனக்கு மது அருந்தினால் தான் தூக்கம் வரும் என்பதாக. சில பெரிய தலைவர்களுக்கு தூக்க மாத்திரை சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். ஒரு பிரபலமான விளையாட்டு வீரரை பற்றி தன்னுடைய புத்தகத்தில் தனக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பதாக அவர் சொன்னார். சில பெரிய தலைவர்கள் ஆளுகிறவர்களுக்கு தூங்கும் போது பயம் மற்றும் திகில் தங்களை ஆட்கொண்டு விடுகிறது. ஆனால் தாவீது அவனுக்கிருந்த எல்லா பிரச்சனைகளின் மத்தியிலும் நன்றாக படுத்து உறங்கினான். அவனுக்கு எதிராக சத்துருக்குள் பெருகியிருக்கும்போது, அவனுக்கு விரோதமாய் அநேகர் எழும்பியபோது எப்படி அவனால் படுத்து தூங்கமுடிந்தது. காரணம் தாவீது சொல்லுகிறான் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர் என்பதாக.

அவன் விழித்திருக்கும்போது மாத்திரமல்ல, தூங்கும்போதும் கர்த்தர் அவனுக்கு கேடகமாக இருந்து அவனை பாதுகாக்கிறார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. நாம் இரவு தூங்கும்போது என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்பதை அறியாமல் இருக்கிறோம். திடீரென்று இரவில் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது குண்டு மழை பொழிகிறது. ஏராளமான மக்கள் தூங்கி கொண்டிருக்கும்போதே மரித்துவிடுகிறார்கள். திடீரென்று தூங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் அநேக ஜனங்கள் காலை விடியலை காணாமல் இப்பூவுலகை விட்டு கடந்து சென்று விடுகிறார்கள். இதையெல்லாம் அறிந்து தாவீது சொல்லுகிறான் நான் விழித்துக்கொண்டேன் என்பதாக. நன்றாக வேண்டிய அளவு தூங்கி அவன் விழித்துக்கொண்டான். நாமும் வேண்டிய அளவு மாத்திரம் ஒரு நாளைக்கு தூங்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி தூங்குகிறவர்களாக கர்த்தருடைய பிள்ளைகள் காணப்படலாகாது. நீங்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் விழித்துக்கொள்வது கர்த்தருடைய அளவற்ற கிருபையாய் காணப்படுகிறது. கர்த்தருடைய கிருபை காலைதோறும் புதிதாய் இருக்கிறது. ஆகையால் காலையில் விழிக்கும்போதே ஒரு நன்றி நிறைந்த இருதயத்தோடு ஸ்தோத்திரத்தோடு எழுந்திருக்க கர்த்தருடைய பிள்ளைகள் பழகி கொள்ள வேண்டும். தேவ மனிதர் பென்னி ஹின் காலை எழுந்தவுடன் பரிசுத்த ஆவியானவரே உமக்கு காலை வந்தனம் என்று சொல்லுவாராம். அதுபோல காலை எழுந்தவுடன் கர்த்தர் என்னை விழிக்க பண்ணினதால் நன்றி என்று சொல்ல வேண்டும்.

மாத்திரமல்ல, தாவீது காலை எழுந்தவுடன் சொல்லுகிறான் கர்த்தர் என்னை தாங்குகிறார் என்பதாக. இதை காலை ஜெபம் என்றும் சிலர் சொல்லுவார்கள். கர்த்தர் ஒவ்வொருநாளும் உங்கள் ஒவ்வொருவரையும் தாங்கி நடத்துகிறார். இன்னும் சொல்லபோனால், அவர் தாங்கி நடத்துவதால் தான் நீங்கள் நிம்மதியாக தூங்கி எழமுடிகிறது. கர்த்தர் உங்களை நித்தமும் நடத்துகிறவர். தகப்பன் பிள்ளையை சுமந்து செல்வதுபோல உங்கள் ஒவ்வொருவரையும் தோளில் சுமந்து செல்லுவார். காலை எழுந்தவுடன் WhatsApp, Facebook மற்றும் வங்கி கணக்கை பார்க்காமல், கர்த்தரிடம் சொல்லுங்கள் நீர் என்னை தாங்கி நடுத்துகிறீர் என்பதாக. நன்றி நிறைந்த இதயத்துடன் இந்த நாள் கர்த்தர் தந்த நாள், இதிலே மகிழ்ந்து களிகூரக்கடவோம் என்ற வார்த்தையோடு மகிழ்ச்சியோடு உங்கள் நாளை துவங்குங்கள். கர்த்தர் நீங்கள் கையிட்டு செய்யும் எல்லா காரியங்களிலும் உங்களோடு இருப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org