இரவு தூங்கும் முன்… (Before going to sleep at night…)

சங் 4:8. சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/CZJiSYVAcQU

இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பிரயாணப்படும்போது மோசே இப்படியாக கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவான்: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான் (எண் 10:35). அதேபோல பிரயாணத்தை முடித்து தங்கள் கூடாரங்களுக்கு திரும்பும்போது மோசே மீண்டும் கர்த்தரிடம் இப்படியாக ஜெபம் செய்வான் கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான் (எண் 10:36).

தாவீது அந்தி சந்தி மத்தியான வேளைகளில் கர்த்தரை நோக்கி துதிக்கிறவனாக காணப்படுவான். தானியேல் தினமும் தவறாமல் கர்த்தரை நோக்கி மூன்று முறை ஜெபிப்பான். தேவ மனிதர்கள் பலர் தேவனோடு உள்ள உறவை சீராக வைத்திருந்ததினால் கர்த்தர் அவர்களை கொண்டு பெரிய காரியங்களை செய்தார். அதுபோல, நீங்களும் எப்பொழுதும் கர்த்தரோடு தொடர்பலையில் இருக்க உங்களை அர்பணித்துக்கொள்ளுங்கள்.

தாவீது இரவு தன் படுக்கையில் தூங்கும் முன் கர்த்தரை நோக்கி ஜெபிக்கிற, அந்த நாளுக்கான கடைசி ஜெபமாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. நீங்களும் ஒரு நாளை ஓடி முடித்தவுடன், உங்கள் படுக்கைக்கு போவதற்கு முன்பாக கர்த்தரோடு பேசிவிட்டு தூங்க செல்லுங்கள். அநேகர் இந்நாட்களில் கர்த்தரோடு பேசிவிட்டு தூங்க செல்லும் முன் மற்ற உலக காரியங்களோடு பேசிவிட்டு, வேண்டாத காரியங்களை கேட்டு பார்த்து விட்டு படுக்கைக்கு செல்வதால் தான் பல பொல்லாத விரும்பத்தகாத சொப்பனங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு வருவதாய் காணப்படுகிறது. கெட்ட சொப்பனங்கள் உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும், உடலிலும் ஆரோக்கியத்தை அது திருடிவிடும் என்பதை கர்த்தருடைய ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சிலருக்கு பயமுறுத்துகிற சொப்பனங்கள், இச்சைகளை தூண்டும் சொப்பனங்கள், ஊரும் பிராணிகள் கடிக்க வருகிறது போல சொப்பனங்கள் வருவதற்கு காரணம் தூங்கும் முன் ஆண்டவரோடு பேசிவிட்டு கடந்து செல்லாமல் இருப்பது தான் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

தாவீது சொல்லுகிறான் சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன் என்பதாக. இப்படியாக உங்கள் தூக்கம் சமாதானத்தோடு இருக்கும்படியாக, சொப்பனங்கள் தரிசனங்கள் மூலமாக கர்த்தர் உங்களோடு பேச வேண்டும் என்று ஜெபித்துவிட்டு படுக்கைக்கு செல்ல பழகுங்கள். சில வேளைகளில் தூங்கும்போது கர்த்தரை ஆராதிக்கும் நல்ல தருணங்களை ஆவியானவர் கொடுப்பார். அது உங்கள் உடலுக்கும் ஆத்துமாக்கும் நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறதாய் காணப்படும். மாத்திரமல்ல, தாவீது சொல்லுகிறான் நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர் என்பதாக. வேர் யாரும் தூங்கும்போது சுகமாய் தங்கும்படி உதவி செய்யமுடியாது. கர்த்தர் ஒருவரே உங்களை சுகமாய் சமாதானத்தோடு படுத்து தூங்கும்படி செய்ய முடியும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org