யோசு 5:9. கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/4higp0L8bug
இஸ்ரேல் ஜனங்கள் யோர்தானை கடந்து வந்த பிறகு கில்கால் என்னும் இடத்தில் பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்கள் எல்லாரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். கடினமான வேதனை மிகுந்த விருத்தசேதனத்திற்கு இஸ்ரேல் ஜனங்கள் கீழ்ப்படிந்தார்கள் என்பதை கர்த்தர் கண்டார். அதன் பின்பாக யோசுவாவை நோக்கி கர்த்தர் சொன்னார் இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்பதாக. இஸ்ரேல் ஜனங்கள் அடிமைத்தனத்தில் சுமார் நானூறு வருடங்கள் எகிப்தில் இருந்தார்கள். அவர்கள் அங்கே பட்ட அவமானமும், வேதனையும், பாடுகளும் அதிகம். பார்வோனால் வந்த வேலைப்பளுவும் மிகவும் அதிகம். சிலர் சொல்லுவார்கள் என்னுடைய வேலை ஸ்தலங்களில் என்னை அடிமை போல என்னை நடத்துகிறார்கள்; எனக்கு பின்னால் வந்தவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஆனால் என்னை என் மேல் அதிகாரிகள் இன்னும் அதிகமாக மட்டம் தட்டுகிறார்கள் என்பதாக. கர்த்தர் சொல்லுகிறார் இப்படிப்பட்ட நிந்தைகள் உங்கள் வாழ்வில் புரட்டப்படும் என்பதாக.
விருத்தசேதனம் செய்வது வேதனையானது என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, கானானின் சுதந்தரத்திற்குள் நுழைவது முற்றிலும் அவசியம். ஆகையால் ஜனங்கள் விருத்தசேதனத்தினால் வரும் வேதனையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார்கள். உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது (ரோம 2:29) என்ற வசனத்தின்படி ஆவியின்படி விருத்தசேதனம் உள்ளவர்களாய் நாம் அனைவரும் காணப்படவேண்டும். பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கவேண்டும். அப்பொழுது உங்கள் நிந்தையை கர்த்தர் புரட்டிபோடுவார்.
சத்துருவால் வரும் நிந்தனை, மனிதர்களால் வரும் நிந்தனை, அதிகாரிகளால் வரும் நிந்தனை அனைத்தையும் கர்த்தர் புரட்டிபோடுவார். இயேசுவின் சரீரம் ஒருவரும் வைக்கப்பட்டிராத கல்லறையில் வைக்கப்பட்டிருந்தது. மூன்றாம் நாள் அதிகாலையில் சில ஸ்திரீகள் கல்லறையினிடத்திற்கு வந்தார்கள். அவர்கள் கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதை கண்டார்கள். கல்லறையை அடைத்திருந்த கல் என்றோ புரட்டி தள்ளப்பட்டாயிற்று என்பது உண்மையிலும் உண்மை. அதுபோல கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எல்லா நிந்தைகளையும் புரட்டி தள்ளுவார். யாரும் புரட்டமுடியாத நிந்தைகளை கர்த்தர் புரட்டி தள்ளுவார். உங்கள் வாழ்க்கையில் கில்கால் உண்டாகும், நிந்தைகள் புரட்டப்படும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org