உபாத்தியாயர்களும்,      தகப்பன்மார்களும் (Teachers and fathers).

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும்,      தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே,      கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன் (1 கொரி. 4:15).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-TVak7utr08

அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபை விசுவாசிகளுக்கு எழுதும் போது,      உங்களுக்குப் பதினாயிரம் உபாத்தியாயர்கள்,      பயிற்றுவிப்பார்கள் காணப்படலாம். அவர்கள் நல்ல காரியங்களைக்  கற்றுத்தந்து உங்களை நல்வழியில் கூட நடத்தலாம். ஆனால் என்னைப் போல அவர்கள் உங்களுக்குத் தகப்பன்மாராய் இல்லையே,      நான் உங்களை  சுவிஷேசத்தின் நிமித்தம் பெற்றேன் என்று எழுதுகிறார். பவுல் ஒரு தகப்பனுடைய இருதயத்தோடு சபைகளை ஸ்தாபித்து,      ஊழியம் செய்தார். ஒநேசிமுவைக் குறித்து,      நான் கட்டப்பட்டிருக்கையில்   பெற்ற என் மகன் என்றும்,      தீமோத்தேயுவை விசுவாசத்தில் என் உத்தம குமாரன் என்றும் எனக்குப் பிரியமான குமாரன் என்றும் கூறினார். கலாத்திய சபை விசுவாசிகளை என் சிறுபிள்ளைகளே என்று அழைத்து,      கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகிறேன் (கலா.4:19) என்றார். சபை மேய்ப்பர்களுக்கும்,       மற்ற ஊழியர்களுக்கும்,       உள்ள வித்தியாசம் என்னவென்றால்,      சபை மேய்ப்பர்கள் ஒரு தகப்பனைப் போன்ற இருதயம் உடையவர்களாய் காணப்படுவார்கள்.

உபாத்தியாயர்கள் மாணவர்களை உருவாக்குவதையே நோக்கமாய் கொண்டிருப்பார்கள்,      ஆனால் தகப்பன்மார்கள் ஆவிக்குரிய மகன்களையும்,      மகள்களையும் கர்ப்பம் தரித்து,      பெற்றெடுத்து,      உருவாக்குவதையே நோக்கமாய் கொண்டிருப்பார்கள். உபாத்தியாயர்கள் தன்னுடைய மாணவர்கள் அனேகக் காரியங்களைக் கற்றுத் தேறினவர்களாய் காணப்பட வேண்டும் என்றும் விரும்புவார்கள். ஆனால் தகப்பன்மார்களோ,      அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து கர்த்தருடைய வருகைக்குப் பாத்திரவான்களாய் காணப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு ஒருக் குறிப்பிட்ட காலத்தோடு முடிந்துவிடும்,      ஆனால் தகப்பன் பிள்ளை உறவானது அது இறுதி வரைக்கும் தொடர்ந்து வரும்.  தன்னுடைய ஆவிக்குரிய பிள்ளைகள் கடைசி எக்காளம் தொனிக்கும் போது,      மணவாட்டி சபை எடுத்துக் கொள்ளப்படும் வேளையில்  பரிசுத்தவான்களின் பவனியில் காணப்படுவதைக் கண்டு மகிழ்வதே தகப்பனுக்குச் சந்தோஷம்.  கர்த்தருடைய பிள்ளைகளே,      உங்களுக்குப் பதினாயிரக் கணக்கான உபாத்தியாயர்கள்  வசனங்களைக் கற்றுக் கொடுக்கலாம்,      ஊடகங்கள் வாயிலாக அனேக ஆசிரியர்கள்  வசனங்களைப் போதிக்கலாம்,      உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தி (Motivational speakers) போதிக்கிறவர்கள் திரளாய் காணப்படலாம். ஆனால் ஒரு தகப்பனுக்கு இணையாவதில்லை. சிலவேளைகளில் தகப்பன்மார் சிட்சிக்கலாம்,      அது உங்களை ஊன்றக்கட்டுவதற்கே ஒழிய,      இடித்துத் தள்ளுவதற்கு அல்ல. தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? என்று வேதம் கேட்கிறது.

இளைய குமாரன் தகப்பனை விட்டுப் பிரிந்து சென்றான். அனேக நாட்கள் கடந்து சென்று விட்டது,      அவனுக்குள் சந்தேகம் இனி திரும்பிச் சென்றால் தகப்பன் ஏற்றுக் கொள்வாரா என்று. ஆனாலும்  நான் எழுந்து,      என் தகப்பனிடத்திற்குப் போய்,      தகப்பனே,      பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்,      இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல,      உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று இருதயத்தில் சொல்லிக் கொண்டு வந்தான். ஆனால் அவன் தூரத்தில் வரும்போதே,      அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு,      மனதுருகி,      ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு,      அவனை முத்தஞ்செய்தான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,      நீங்கள் தகப்பன்மார்களோடு காணப்படுகிறீர்களா,      உபாத்தியாயர்களோடு காணப்படுகிறீர்களா  என்பதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் கேட்கிற வசனங்கள் உங்களை உருவாக்குகிறதா? இல்லையேல் அவைகள் உங்களுக்கு மேற்பூச்சாய் காணப்படுகிறதா? நல்ல ஆவிக்குரிய தகப்பன்மார்களோடு காணப்படுங்கள். அது இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar