ஆதி 32:31. அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3rjpSz0NRRE
யாக்கோபின் வாழ்க்கையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பாக சூரியன் அஸ்த்தமானது (ஆதி 28:11). யாக்கோபு என்றாலே எத்தன், ஏமாற்றுக்காரன் என்று அர்த்தம். அவன் தன்னுடைய சகோதரனின் ஆசீர்வாதங்களை வஞ்சகமாய் தகப்பனிடுமிருந்து பெற்றுக்கொண்டவன், சேஷ்டபுத்திர பாகத்தை அபகரித்துக்கொண்டவன். கர்த்தர் யாக்கோபை தெரிந்துகொண்டபடியால் அவனை புடமிட்டு சரிபடுத்தவேண்டுமென்று சித்தம் கொண்டார். ஒரு சில வேளைகளில் உங்களுடைய வாழ்க்கையிலும் கர்த்தர் உங்களை புடமிடுகிறாரென்றால், நீங்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். யாக்கோபு நினைத்தான் அவன் தன்னுடைய திறமையால் தன் சகோதரன், தகப்பனை ஏமாற்றியாயிற்று என்பதாக. ஆனால் கர்த்தர் அவனைக்காட்டிலும் மேலான ஏமாற்றுக்காரனாகிய லாபானிடம் அனுப்பினார். லாபான் யாக்கோபுடைய சம்பளத்தை பத்து முறை மாற்றினான், ராகேலுக்கு பதிலாக லேயாளை கொடுத்து யாக்கோபை ஏமாற்றினான், ராகேலுக்காக மழை, வெயிலென்றும் பாராமல் கடினமாக வேலை செய்தான். இப்படியாக இருப்பது வருடங்கள் தன்னுடைய மாமனாராகிய லாபானிடம்வேலை செய்தான்.
கடைசியாக யாக்கோபு தன்னுடைய மாமன் லாபானை ஏமாற்றும்படியாக ஆடுகளினிமித்தம் புத்திசாலித்தனமாகவும், சுயநலமாகவும் செயல்பட்டான். சுமார் இருபது வருடங்கள் கழித்தும் அவனுக்குள்ளாக இருந்த அந்த ஏமாற்றும் குணம் மாறவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கர்த்தர் தம் தேவ தூதனை அனுப்பி அவனை சந்தித்தார். இந்த உலகத்திலிருக்கும் எந்த நிறுவனமும் இப்படிப்பட்ட நபரை வைத்துக்கொள்ளாது. ஆனால் நமக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய காரியமென்னவென்றால் இப்படிப்பட்ட பெரிய ஏமாற்றுக்காரன், சுயநலவாதியை கூட கர்த்தர் மீண்டுமாக அவரே போய் சந்திக்கிறார் என்பதே. உங்களையும் கர்த்தர் வந்து சந்திப்பார், உங்களோடு கூட பேசுவார்.
ஆனால் இன்னும் யாக்கோபு தன்னுடைய சுயநலத்தை விட்டு மனம் திரும்பவில்லை. தன்னுடைய சகோதரன் ஏசா அவனை தேடி வரும்போது தன்னை கொன்றுவிடுவானென்று அஞ்சி அவனுடைய குடும்பங்களை மூன்று பகுதியாக பிரித்து பிரயாணம் பண்ணினான். முதல் இரண்டு பகுதியில் தனக்கு பிடிக்காத தன்னுடைய வேலைக்காரிகளையும், லேயாளையும் அனுப்பினான். கடைசியில் தனக்கு பிரியமான ராகேலோடு கூட அவன் நடந்து வந்தான். ஒருவேளை தன்னுடைய சகோதரன் அவர்களை அழித்துப்போட்டால் கடைசியில் அவனும் ராகேலும் தப்பித்துக்கொள்ளலாம் என்று சதித்திட்டம் பண்ணினான். இங்கேயும் நமக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய காரியமென்னவென்றால் இப்படிப்பட்ட மிகப்பெரிய சுயநலவாதியை கர்த்தர் தெரிந்துகொண்டு, புடமிட்டு தன்னுடைய சித்தத்தை நிறைவேற்றினார் என்பதே. கர்த்தர் உங்களைக்கொண்டும் பெரிய காரியங்களை செய்யமுடியும்.
முடிவில் அவன் கர்த்தரோடு தனித்திருக்கையில் அவனுடைய தொடைச்சந்தை கர்த்தர் தொட்டார். அவனுடைய மாம்சீகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை கர்த்தர் வைத்தார். அவனுடைய சுயநலம், ஏமாற்றுவேலை எல்லாவற்றிற்கும் ஒரு முற்று புள்ளியை வைத்தார். பிறகு கர்த்தர் யாக்கோபை ஆசிர்வதித்தார். அவனுடைய பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். அவனை கர்த்தர் புடமிட்டு, சீர்படுத்தி, மாம்சீகம் சாகும்படி செய்து, பின்பு கர்த்தர் ஆசிர்வாதித்த பிறகு அவனுடைய வாழ்க்கையில் சூரியன் உதயமானது. உங்கள் வாழ்க்கையிலும் சூரியன் அஸ்தமனதாக இருக்குமென்றால், மீண்டும் சூரியன் உதிக்கும்படி கர்த்தர் செய்வார். நீதியின் சூரியனாகிய கர்த்தரே உங்கள் வாழ்க்கையில் உதிப்பார். யாக்கோபை நடத்தின தேவன் உங்களையும் நடத்துவார்.
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் (மல்கியா 4:2) என்ற வசனத்தின்படி கர்த்தர் உங்கள் மேல் உதிப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org