ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு (வெளி. 2:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/GZAh0NRywuw
எபேசு சபை அப்போஸ்தலனாகிய பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தில் நிறுவப்பட்ட சபை. அங்கே பவுல் யோவான் ஸ்நானகனுடைய சீஷர்கள் 12 பேரைக் கண்டு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்கதரிசனஞ் சொன்னார்கள் (அப். 19:1-7). அவர்கள் எபேசு சபையின் முதல் விசுவாசிகளாய் மாறினார்கள். பவுலுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தில், பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணினேன் (அப். 20:20) என்றும், தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் (அப். 20:26) என்றும் கூறுவதிலிருந்து எபேசு சபை மக்கள் சகல ஆவிக்குரிய காரியங்களையும் கற்று வளர்ந்தவர்கள் என்பதை அறியமுடிகிறது. கிறிஸ்துவுக்கு பின்பு 68-வது வருடத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் மரித்து விடுகிறார், ஆனால் யோவான் பத்மு தீவில் தேவ வசனத்தின் நிமித்தமும், அவரைப் பற்றிய சாட்சியினிமித்தமும் சிறைப்பட்டு காணப்பட்ட நாட்களில், அவர் கிறிஸ்துவுக்கு பின்பு 98-ம் வருஷம் மரிப்பதற்கு முன்பு கண்ட தரிசனங்களில் எபேசு சபை இயேசு கிறிஸ்துவில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட நிலையில் காணப்பட்டது. சுமார் முப்பது வருட இடைவெளியில் எபேசு சபை விசுவாசிகள் ஆண்டவரில் இருந்த அன்பை முழுவதுமாய் விட்டார்கள். அன்பு குறைந்தது, தணிந்தது என்று எழுதப்படவில்லை, மாறாக அன்பை விட்டார்கள் என்பதாய் எழுதப்பட்டிருக்கிறது.
ஆண்டவருக்கென்று வல்லமையாய் நின்ற சபை காலப்போக்கில் ஆண்டவர் பேரில் வைத்திருந்த அன்பை விட்டு விலகினது. இவை கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு எச்சரிப்பாகக் காணப்படுகிறது. இரட்சிக்கப்பட்ட, அபிஷேகிக்கப்பட்ட காலகட்டத்தில் ஆண்டவரிடம் நாம் கொண்டிருந்த அன்பு, வைராக்கிய வாஞ்சையானது காலப்போக்கில் குறைந்து கொண்டு போகிறதா? அல்லது இன்னும் அதிகமாகிறதாய் காணப்படுகிறதா? சூலமித்தி தன் மணாளன் மேல் கொண்ட நேசம் மரணத்தைப் போல வலிது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது என்று கூறுகிறதை உன்னதப்பாட்டில் வாசிக்கிறோம். அதுபோல கர்த்தரில் நாம் கொண்ட அன்பானது எல்லா சூழ்நிலைகளிலும் வளர்கிறதாய் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவர் சமூகத்தைத் தேடுவதில் இன்னும் ஆர்வம் காட்டவேண்டும். ஜெப நேரமானது கூடிக்கொண்டு காணப்படவேண்டும். ஆண்டவர் பேரில் கொண்ட அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறதினால் இன்னும் அதிகமாக ஊழியம் செய்யவேண்டும். இவைகள் ஒன்றும் காலப்போக்கில் குறைந்து போகாமல் நாம் காத்துக்கொள்ளவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
ஏன் கர்த்தர் பேரில் கொண்ட அன்பு கடைசி நாட்களில் தணிந்துபோகிறது? உலகத்தின் முடிவிற்கும் உம்முடைய வருகைக்கும் அடையாளமென்ன? என்று கேட்ட சீஷர்களுக்கு இயேசு பதில் கூறும்போது, அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம் (மத்தேயு 24:12) என்று கூறினார். கர்த்தருடைய வருகையின் நாட்கள் நெருங்கும் போது அக்கிரமம் அதிகமாகும். பிசாசு தனக்குக் கொஞ்ச நாட்கள் காணப்படுகிறது என்பதையறிந்து அக்கிரமங்களும், துணிகரமான பாவங்களும் செய்யும்படிக்கு ஜனங்களைத் தூண்டுகிறவனாய் காணப்படுகிறான். சோம்பலும், நிர்விசாரத்தின் ஆவிகளும் அனேகரை அடிமைப்படுத்துகிறது. சத்துருவின் அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது, ஆகையால் அனேகருடைய அன்பு தணிந்துபோகிறது. அனேகர் கர்த்தர் பேரில் கொண்ட அன்பை முழுவதுமாய் விட்டுவிட்டார்கள்.
ஆகிலும், நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே. 2:2). ஆண்டவர் பேரில் துவக்கத்தில் நாம் கொண்டிருந்து நேசத்தை நினைத்து, அந்த ஆதி அன்பிற்கு நேராக மீண்டும் நாம் திரும்புவதற்கு நமக்கு உதவிசெய்கிறவர். நேச அக்கினியை நமக்குள்ளாக மீண்டும் பற்றவைத்து அவரில் அன்புகூறும்படிக்கு செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar