அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா(God who sees you in secret):-

மத் 6 : 4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/vsrApl_ugx4

மலை பிரசங்கத்தில் இயேசு மத்தேயு 6ம் அதிகாரத்தில் மூன்று முறை (மத்தேயு 6 :4,6,17) அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் என்று சொல்வதை பார்க்கிறோம்.

முதலாவது, நீங்கள் தர்மம் செய்யும்போது அந்த தர்மம் அந்தரங்கமாயிருக்க வேண்டும் என்று பிதாவானவர் விருப்பமுடையவராயிருக்கிறார். அநேக சபைகளில் ஒரு மின்விசிறி, நாற்காலி, மேசை போன்றவற்றை வாங்கி தரும்போது, அவற்றில் அவர்களுடைய பெயர் வெளியரங்கமாய் தெரிய வேண்டுமென்று தங்களுடைய பெயர்களை பொறித்துக்கொள்கிறவர்களாய் காணப்படுகிறார்கள். யாருக்காவது பண உதவி செய்தால் அது எல்லாருக்கும் தெரியும் வண்ணமாக கொடுப்பது, கொடுத்ததை மற்றவர்களுக்கு அறிவித்து தம்பட்டம் அடிக்கிறவர்களாகவும் காணப்படுவதுண்டு. பிதாவானவர் இப்படிப்பட்ட வெளியரங்கத்தை விரும்புவதில்லை. அவர் விருப்பம் நம்முடைய தர்மம் அந்தரங்கமாய் காண்ப்படவேண்டுமென்பதாக. அப்படி அந்தரங்கமாயிருக்கும்போது அவர் உங்களுக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.

இரண்டாவதாக, உங்களுடைய ஜெபம் மாயக்காரர்களை போல, மனுஷர் காணும்படியாக, வீதிகளிலும், சந்திகளிலும் நின்று வீண் வார்த்தைகளில் அலப்பகூடாது என்று பிதாவானவர் எதிர் பார்க்கிறவராய் காணப்படுகின்றார். மாறாக, பிதாவானவர் விரும்புவது உங்களுடைய ஜெபம் அறைவீட்டுக்குள் புகுந்து, அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவை நோக்கி காணப்படவேண்டுமென்பதாக. அப்படி அந்தரங்கமாயிருக்கும்போது அவர் உங்களுக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.

மூன்றாவதாக, நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்கார்களை போல மனுஷர் காணப்படும்படி இருக்கலாகாது என்று பிதாவானவர் எதிர்பார்க்கிறவராய் காணப்படுகின்றார். அநேகர் நான் இன்று உபவாசம் என்று தம்பட்டை அடிக்கிறவர்களாகவும், நான் மூன்று நாள், நாற்பது நாள் உபவாசம் இருக்கிறேன்; லெந்து நாட்களை அனுசரிக்கிறவனாக முழுவதுமாக நான் உபவாசம் இருக்கிறேன் என்று வெளியில் எல்லாரும் தெரியும் வண்ணமாக அதில் பெருமைகொள்பவர்களாக காணப்படுவதுண்டு. ஆனால் பிதாவானவர் விரும்புவது நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் உபவாசம் அந்தரங்கமாயிருக்க வேண்டுமென்பதாக. அப்படி அந்தரங்கமாயிருக்கும்போது அவர் உங்களுக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.

நீங்கள் ஆண்டவருக்காக எதை செய்தாலும் மனுஷர் காணும்படியாக, அவர்களுடைய புகழ்ச்சிக்காக அல்ல மாறாக அந்தரங்கமாய் பிதா ஒருவருக்கு மாத்திரம் தெரியும்படியாக காணப்படட்டும். அப்போது பிதா உங்களுக்கு வெளியரகமாய் பலனளிப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org