ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோமர் 8:18).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/j6LN5HdRwiw
பாடுகளின் பாதையை ஒருவரும் விரும்புவதில்லை. யோபு பாடுகளின் வழியாகக் கடந்து சென்ற வேளையில் தான் பிறந்த நாளை சபித்தான். எலியா
தீர்க்கதரிசியை யேசபேல் பயமுறுத்தி கொலை செய்யும்படிக்குப் பின் தொடர்ந்த வேளையில், அவன் சாகவேண்டும் என்று விரும்பி, போதும் ஆண்டவரே என் ஜீவனை எடுத்துக்கொள்ளும் என்று வேண்டினான். பாடுகளும், வேதனைகளும் பல விதங்களில் வருகிறது. சில வேளைகளில் நம்முடைய பாவங்களினிமித்தம் தேவ கோபாக்கினையாக வருகிறது, தன் மாமிசத்திற்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினால் அழிவை
அறுப்பான் என்று வேதம் கூறுகிறது. சில வேளைகளில் யாரை விழுங்கலாமோ என்று கர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலச் சுற்றித்திரிகிற பிசாசினிடத்திலிருந்து வருகிறது. ஆனால் கர்த்தருடைய பிள்ளைகள் உத்தமமாய் நீதிக்குரிய ஜீவியம் செய்யும் போது, நமக்கு வருகிற பாடுகளும், கஷ்டங்களும் நமக்கு மகிமையாய் மாறுகிறது. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு
என்று நமது அருமை இரட்சகர் இயேசு கூறினார். அவர் மனுஷகுமாரனாய் இந்த பூமியில் காணப்பட்ட நாட்களில் பல பாடுகளின் பாதையில் கடந்து
சென்றார். ஆதி அப்போஸ்தலர்களும் அனேக பாடுகளின் வழியாகத் தான்
தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றார்கள். ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்தின் பாதைகளிலும் கடந்து வருகிற பாடுகளையும் உபத்திரவங்களையும் கண்டு சோர்ந்து போகாதிருங்கள்.
இனி நம்மிடத்தில் வெளிப்படப் போகிற மகிமையோடு ஒப்பிடும் போது,
இக்காலத்துப் பாடுகள் நமக்குப் பெரிதாய் தெரிவதில்லை. ஆகையால் அப்போஸ்தலனாகிய பவுல், நாங்கள் சோர்ந்து போகிறதில்லை, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று
உபத்திரவங்களை இலேசானது என்று கூறினார். தேவனுடைய தாசனாகிய மோசேயும் இனி வரும் பலன்கள் மேல்
நோக்கமாயிருந்ததினால் கிறிஸ்துவின் நிமித்தம் வரும்
நிந்தையையும் பாடுகளையும் பெரிதாய் பார்க்கவில்லை.
கர்த்தருடைய பிள்ளைகளே, பரிசுத்தத்தோடும், தாழ்மையோடும் நீதிக்குரிய ஜீவியம் செய்தும் ஏன் எனக்கு இத்தனைப் பாடுகள் என்று சோர்ந்து போனவர்களாய் காணப்படுகிறீர்களா? தேவன் அவரிடத்தில் அன்புகூருகிற உங்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை, அவ்வளவு மகிமையான நாட்கள் உங்களுக்கு முன்பு காணப்படுகிறது. இயேசுவின் நாமத்தின் நிமித்தம், உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித
தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால்
பாக்கியவான்களாயிருப்பீர்கள், சந்தோஷப்பட்டு, களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் என்று
ஆண்டவர் கூறினார். ஆகையால் உற்சாகமாய் தொடர்ந்து ஓடுங்கள், உத்தமமாய் கர்த்தரைச் சேவியுங்கள், ஆசீர்வாதமான, மகிமையான நாட்களைக் காத்தர் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar