இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம் பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள் (யோவான் 4:31).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8iLrC6IOUCg
இயேசு தன்னுடைய ஊழியத்தின் நாட்களில் ஒரு நபரை இரட்சிக்கும் படிக்கும், ஒருவருடைய தேவையைச் சந்திக்கும் படிக்கும் பல மைல் தொலைவு நடைப்பயணமாகக் கடந்து சென்றார். ஒரு நாள் தீரு சீதோன் பட்டணங்களுக்குப் போனார். அது கலிலேயாவிலிருந்து சுமார் ஐம்பது மைல் தொலைவில் உள்ள பட்டணம். இந்நாட்களில் அது லெபனான் தேசத்தில் காணப்படுகிறது. இயேசு அங்குச் சென்ற வேளையில் கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டு, அவரிடம் உதவி கேட்டு, அவரைப் பணிந்து கொண்டாள். இயேசு, பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள், மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது, நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றவுடன் அவள் மகள் ஆரோக்கியமானாள். உடனே இயேசு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கலிலேயா பகுதிக்குத் திரும்பி வந்தார். ஆண்டவர் ஒரு மகளை விடுவிக்கும் படிக்கு ஐம்பது மைல் தொலைவு பிரயாணம் பண்ணி, மீண்டும் அதே தூரத்தைக் கடந்து திரும்பிவந்தார்.
அதுபோல ஒருநாள் கலிலேயாக் கடலுக்கு அக்கரையில் உள்ள கதரேனருடைய நாட்டிற்கு சுமார் முப்பது மைல் கடந்து சென்றார். அந்தப் பகுதியானது இந்நாட்களில் ஜோர்டான் தேசத்தில் காணப்படுகிறது. அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார், அதற்கு அவன்: லேகியோன் என்றான், அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவனை அனேக பிசாசுகளின் பிடியிலிருந்து விடுவித்தார். பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடே கூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவற்றையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவற்றையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான். ஆண்டவரிடத்திலிருந்து அற்புதத்தைப் பெற்றவுடன் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கிற சுவிசேஷகனாய் அவன் மாறினான்.
ஒருநாள் இயேசு எருசலேமிலிருந்து கலிலேயாவிற்கு போனார். குறுக்கு வழி சாலையைப் பயன்படுத்தி எளிதாகக் கடந்து செல்லலாம். ஆனால் இயேசு சுமார் எழுபது மைல் தொலைவில் உள்ள சமாரியாவின் வழியாகக் கடந்துச் சென்றார். அவர் சீகார் என்னப்பட்ட ஊருக்கு அருகில் வந்தவுடன் அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தபடியால் பிரயாணத்தினால் களைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார், அப்பொழுது ஏறக்குறைய மதியம் பன்னிரண்டு மணி வேளையாயிருந்தது. அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். அங்கே பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீயைக் கண்டு, அவளுக்கு ஜீவத் தண்ணீரைப் பற்றியும், பிதாவை எங்கும் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளும் காலம் வருகிறது என்றும், தன்னை மேசியா என்றும் வெளிப்படுத்தினார். அவள் புறப்பட்டுச் சென்று முழு சமாரியா ஊராரையும் ஆண்டவரிடத்தில் அழைத்துக் கொண்டு வந்து, முதல் பெண் சுவிசேஷகியாக மாறினாள். அந்த வேளையில் போஜனத்தை வாங்கி வந்த சீஷர்கள் ரபீ, போஜனம் பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு, நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்றார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் சேவிக்கிற ஆண்டவர் ஒரு ஆத்துமாவிற்காகப் பல மைல் தொலைவு சென்றார், சுவிசேஷமே அவருடைய போஜனமாகக் காணப்பட்டது. பிதாவாகிய தேவன் இயேசுவிற்கு நியமித்த சுவிசேஷப்ப பணியைச் செய்து முடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். இந்நாட்களில் இயேசுவின் சீஷர்கள் என்று அழைக்கப் படுகிற நமக்குள்ளாக ஆத்துமாக்களைக் குறித்த எண்ணமும் கரிசனையும் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நம்முடைய குருவைப் போல ஆத்துமாக்களுக்காக பிரயாசப்படவும், அவர் நமக்காய் நியமித்த பணியைச் செய்து முடிக்கவும் ஆயத்தமாய் காணப்பட வேண்டும். மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனி யாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கத்தாக பலனளி யாரோ? என்று வேதம் கேட்கிறது. அக்கினி கடலுக்கு நேராக நியமிக்கப்பட்டிருக்கிற சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சிப்பிற்கேதுவாய் நடத்த வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாகவும், சுவிசேஷ பணிக்காக விதைக்கிறவர்களாகவும் காணப்படும் போது கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar