குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும் படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள், கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங்கீதம் 2:12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/yQUp_I78yes
இயேசுவுக்கு நம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்து ஆசீர்வாதமாக வாழ்வதைப் பற்றியும், அவருக்கு கோபமூட்டி அழிந்து போவதைக் குறித்தும் இரண்டாவது சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த சங்கீதம் யாரால் எழுதப்பட்டது என்ற தலைப்பு கொடுக்கப் படவில்லை என்றாலும், அப்போஸ்தலர் 4:25, 26ஐ வாசிக்கும் போது சங்கீதக்காரனாகிய தாவீதால் எழுதப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். முத்தஞ்செய்வது என்பது முதலாவது சமர்ப்பிப்பையும், கீழ்ப்படிதலையும் குறிக்கிறது. பொதுவாக ராஜாக்கள் ஆண்டுகொண்டிருக்கிற நாடுகளில் முக்கியமான தேசிய நாட்களில் அவருடைய அரசாட்சிக்கு உட்பட்டவர்கள் வந்து அவரை முத்தஞ்செய்வதைப் பார்க்கமுடியும். அது அவருடைய அதிகாரத்திற்கு என்னைச் சமர்ப்பிக்கிறேன் என்று அர்த்தம் கொள்வதாகும். இரண்டாவதாக முத்தஞ்செய்வது என்பது அன்பை வெளிபடுத்துவது ஆகும். தாவீது, தன் குமாரனாகிய அப்சலோவிற்கு பயந்து ஓடிக்கொண்டிருந்த வேளையில் கீலேயாத்தியனாகிய பர்சிலா மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும்பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறுபயற்றையும், தேனையும், வெண்ணெய்யையும், ஆடுகளையும், பாற்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தான். அப்சலோமின் மரணத்திற்குப் பின்பு தாவீது மீண்டும் ராஜாவாக மாறியபின்பு, அவன் பர்சிலாவை முத்தமிட்டு, அன்பை வெளிப்படுத்தி அவனை ஆசீர்வதித்தான் என்று வேதம் கூறுகிறது.
கர்த்தருடைய ஜனங்கள் நாம் இயேசுவில் அன்பு கூர்ந்து அவருக்கு நம்மை முழுவதுமாக சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் கொஞ்சக் காலத்தில் அவருடைய கோபம் பற்றியெரியப் போகிறது. இயேசு இனி வெளிப்படும் போது இரட்சகராய் அல்ல, நியாதிபதியாக வெளிப்படுவார். அப்போது அவரிடத்திலிருந்து இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. ஆகையால் இப்பொழுது உணர்வடைந்து பயத்துடனே அவரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். கடைசி நாட்களில் கர்த்தரைக் குறித்த பயமில்லாத சந்ததி எங்கும் காணப்படுகிறது. உலகத்தார்கள் அப்படிக் காணப்பட்டால் கூட பரவாயில்லை, விசுவாசிகளும், ஊழியக்காரர்களும் கூட கர்த்தரைக் குறித்த பயமில்லாமல் காணப்படுவது தான் ஆச்சரியமாகும். தங்கள் பெயர் புகழுக்காக ஊழியம் செய்கிறவர்களும், கர்த்தர் பேசாதிருந்தும் பேசினார் என்று பொய் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களும், கர்த்தர் செய்யச் சொல்லாதிருந்தும், கர்த்தர் செய்யச் சொன்னார் என்று கூறி அதை ஜனங்கள் நடுவில் திணிக்கிறவர்களும் பெருகிக் காணப்படுகிறார்கள். விசுவாசிகளிடத்திலும் உண்மையும் உத்தமும் இல்லை. கர்த்தரிடத்தில் முழு உள்ளத்தோடும், முழு பெலத்தோடும அன்பு கூர்ந்து அவரைச் சேவிப்பவர்கள் குறைந்து போனார்கள். உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் சபைக்குள் கொண்டுவந்து விட்டார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே! ஆண்டவரை அண்டிக் கொள்ளுங்கள், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள், அவரை விட்டு இளையக் குமாரனைப் போலத் தூரம் போகாதிருங்கள். சங்கீதக்காரன் என் ஆத்துமா உம்மை அண்டிக்கொள்ளுகிறது என்றதைப் போல உங்கள் ஆத்துமாக்கள் ஆண்டவரை அண்டிக் கொள்ளட்டும். அவரை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர் என்று வேதம் கூறுகிறது. உங்களை முழுவதுமாக ஆண்டவருக்கு அர்ப்பணித்து அவரை அண்டி ஜீவிக்கும் போது, உங்கள் ஆத்துமா வாழும், நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar