நியாயாதிபதிகள் 13 : 25. அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WMvzELfvrCM
சிம்சோன் மிகவும் பலம் வாய்ந்தவன். பெலிஸ்திய சேனைகள் நடுங்கும்படியாக செய்தவன். பெலிஸ்தியர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவன். காரணம் கர்த்தருடைய ஆவி அவருக்கு சில சமயங்களில் வந்தது, அவருக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பலத்தை அளித்தது.நியாயாதிபதிகள் 13ம் அதிகாரம் கடைசி வசனங்களிலிருந்து 16ம் அதிகாரம் வரை வாசிக்கும்போது சிம்சோனின் பலமும், அவனுடைய வீழ்ச்சியும், பின்பு அவனுடைய மரணத்தை குறித்தும் அறிந்து கொள்ளலாம். இந்த அதிகாரங்களில் 4 முறை கர்த்தருடைய ஆவியானவரை பற்றி எழுதியிருப்பதை வாசித்து அறிந்து கொள்ளலாம். அவர் சிம்சோனை ஏவினார், அவன் மேல் பலமாய் இறங்கினார், அவன் மேல் இறங்கினார் என்று பார்க்கமுடிகிறது.
முதலில் கர்த்தருடைய ஆவியானவர் சிம்சோனை ஏவினார். அதனிமித்தம் இஸ்ரவேலை ஆண்டுகொண்டிருந்த பெலிஸ்தியரிடத்திற்கு கொண்டுபோகப்பட்டான். இரண்டாவதாக கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கினார். அதனிமித்தமாக எதிராக வந்த கெர்ச்சிக்கிற பால சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியை கிழித்துப்போடுவது போல கிழித்துப்போட்டான். மூன்றாவதாக கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினபோது, முப்பது பேரை ஒரு தனி மனுஷனாக நின்று அவர்களை கொன்று அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டு வந்தான். நான்காவதாக கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் பலமாய் இறங்கினபோது கழுதையின் பச்சை தாடை எலும்பை எடுத்து தனி ஒரு மனிதனாக நின்று 1000 பேரை கொன்று குவித்தான்.
இவ்வளவு பெரிய பலசாலி, தெலீலாள் என்னும் ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பட்டான்; பாவத்தில் விழுந்தான்; அவனுடைய பலத்தின் ரகசியத்தை கசியவிட்டான்; பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை அலட்சிப்படுத்தினான். இதன் விளைவு பெலிஸ்தியர் அவனை பிடித்து அவன் இரண்டு கண்களையும் பிடுங்கி, அவனை ஒரு வேடிக்கை பொருளாக மாற்றினார்கள். அபிஷேகம் பெற்றவன், அசாதாரணமான மனிதன், நசரேயனாக வளர்க்கப்பட்டவன், ஆனால் பரிதாபம் என்னவென்றால் கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல் பெலிஸ்தியரின் கைகளில் சிக்கினான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் தேவனே, பலப்படுத்தும் என்று அவன் ஜெபித்த சூழ்நிலையில், கர்த்தர் மீண்டும் பெலப்படுத்தினார். மீண்டும் அவனுக்கு பெலன் வந்தது. வீட்டை தாங்கி நின்ற இரண்டு தூண்களையும் பிடித்து தள்ளினான். வீடு இடிந்து விழுந்தது. அதினிமித்தமாக அந்த வீட்டில் இருந்த பெலிஸ்தியரின் பிரபுக்கள் உட்பட யாவரும் மடிந்துபோனார்கள்.
கர்த்தருடைய ஆவியானவரை ஒரு போதும் அலட்சியப்படுத்தாதிருங்கள்; அவர் உங்களை விட்டு விலகுவதற்கு நீங்களே காரணமாகிவிடாதிருங்கள். அவரை துக்கப்படுத்தாதிருங்கள். அவரை சோகத்திற்குள்ளாகாத்திருங்கள். அவரை வேதனைப்படுத்தாதிருங்கள். அவர் பெலத்தின் ஆவியானவர். அவர் உங்களோடு கூட இருக்கும்போது, சிம்சோனுக்கு கொடுத்த பெலத்தை உங்களுக்கும் கொடுப்பார்.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha- Qatar
www.wogim.org